இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பும் தாக்குதல் நடத்துகிறது.
தாக்குதல்களை நிறுத்தக் கோரி, பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கோரி அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
அங்குள்ள கேனான் ரோட்குண்டா பகுதியை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போரை நிறுத்தும்படி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக அமெரிக்க பாராளுமன்ற வளாகத்தை நோக்கி சென்றனர்.
இதையடுத்து பாராளுமன்ற நுழை வாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பிரதான நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பாதைகளுக்கு பதிலாக சுரங்கப் பாதைகளை பயன்படுத்துமாறு பாராளுமன்ற ஊழியர்கள் கேட்டு கொள்ளப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி சென்றதால் அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். அவர்களை கலைந்து போக பொலிஸார் அறிவுறுத்தினர்.
ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் அவர்களை பொலிஸார் கைது செய்தனர். சுமார் 300 போராட்டக்காரர்கள் இதன்போது கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் யூத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அவர்கள் போர் நிறுத்தம் கோரி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.
காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக யூத அமைப்பு உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அவர்கள் பாராளுமன்ற கேனான் கட்டிடத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காசாவில் போர் நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்க ஜனாதிபதி ஜோபைடன் பாராளுமன்றத்துக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களை பொலிஸார் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.
அமெரிக்க பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.