புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எம்.பி. பதவியை உடனே துறக்க வேண்டும் சம்பந்தன்! – சுமந்திரன் பகிரங்கக் கோரிக்கை

எம்.பி. பதவியை உடனே துறக்க வேண்டும் சம்பந்தன்! – சுமந்திரன் பகிரங்கக் கோரிக்கை

1 minutes read

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்ய முடியாமல் இருக்கின்றார். எனவே, அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாகத் துறக்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாகக் கோரியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோது, 288 நாடாளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில்தான் நாடாளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகப் பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13.6 சதவீதமாக உள்ளது. அவ்வாறான நிலையில் அவருக்கு நாடாளுமன்ற படிகளாக 4 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள், தொலைபேசி மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்காக 4 இலட்சத்து 19ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இது மக்களின் வரிப்பணமாக உள்ளது. ஊழல் தடுப்புப் பற்றி பேசப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இதுவொரு மாற்று வடிவமாக அமைகின்றதா? என்று வினவப்பட்டபோது பதிலளிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்துக்கு வருகை தர முடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். விசேடமாக நான் அந்த விடயத்தில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன்.

அந்தவகையில் நான் ஒரு விடயத்தை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாகத் தெரிவிக்க விரும்புகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரால் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் நான் சம்பந்தனிடத்திலேயே நேரடியாகப் பதவி விலகுமாறு கோரினேன். அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். அத்துடன், அவர் அதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தினார்.

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராகத் தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் தனது உடல் நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார். அதனை சம்பந்தன் மீண்டும் நினைவுபடுத்தினார்.

எனினும், திருகோணமலை மக்களைப் பிரதிநிதித்துவம் செய்து செயற்படத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. பிறிதொரு பிரதிநிதியை நாங்கள் நியமித்தாலும் அவர் முழுமையான செயற்பாடுகளை ஆற்றுவரா என்பது பற்றிய பல கரிசனைகள் உள்ளன.

எவ்வாறாயினும், சம்பந்தன் தனது முதுமை நிலைமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆகவே, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாகத் துறக்க வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது. அடுத்துவரும் காலத்தில் அது தொடர்பான சில நடவடிக்கைளை எடுப்போம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More