யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட சீனத் தூதுவர் கி ஸென் ஹொங், மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களைப் பார்வையிட்டதுடன் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்களையும் வழங்கிவைத்தார்.
வடக்கு மாகாணத்துக்கு மூன்று நாள் பயணமாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் வருகை தந்தனர். வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்ட செயலங்களில் சீனாவின் பௌத்த சங்கத்தின் தொண்டு திட்டத்தின் ஊடாக பௌத்த விகாரைகள் மற்றும் சீனாவின் பௌத்த மக்களால் இலங்கையில் உள்ள ஏழை மக்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகச் சீனத் தூதுவர் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர்.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்குச் சென்ற சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினரால் ஒரு தொகுதி மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அதன் பின்னர் சீன அரசால் 5 ஆயிரம் பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் திட்டத்தின் ஆரம்பகட்டமாக யாழ்ப்பாணம் – நெடுந்தீவு மக்களுக்கு 500 பொதிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
இதேபோன்று யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் அடுத்த கட்டங்களாக உலர் உணவுப் பொதிகளைத் தூதுவரே நேரடியாக வழங்கி வைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
இந்த நிகழ்வில் சீன நாட்டுத் தூதரக அதிகாரிகள், யாழ். மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.