“ஆஸ்திரேலிய அரசு, இலங்கைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்.”
– இவ்வாறு இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியத் தூதுவர் பால் ஸ்டீபன்ஸுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் சாணக்கியன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
“எனக்கும் ஆஸ்திரேலியத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாகப் பேசப்பட்டது. மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றியும் என்னிடம் ஆஸ்திரேலியத் தூதுவர் கேட்டறிந்தார்.
அதேவேளை, எமது கட்சியின் எதிர்கால மாநாடு தொடர்பாகவும், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
ஆஸ்திரேலியாவும் எமது நாட்டைப் போல் கூட்டாச்சி (சமஷ்டி) அரசியல் அமைப்பைக் கொண்ட நாடாகும். அங்கு மாநிலங்கள் போல் இங்கு மாகாணங்கள் காணப்படுகின்றன. அங்கு மற்றைய நாடுகளைப் போல் அல்லாது இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்த சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் எனப் பலரும் வாழ்ந்து வருகின்றார்கள். அந்த அடிப்படையில் இலங்கை அரசு, ஆஸ்திரேலியாவை நடுநிலைமை வகிக்கும் நாடு என ஏற்றுக்கொள்ளும் என்ற ரீதியில் ஆஸ்திரேலிய அரசானது எமக்கான அரசியல் தீர்வு விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்றும் தூதுவரிடம் வலியுறுத்தினேன்.” – என்றார்.