இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம்பெறும் என்று கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையில் இன்று நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாப்பின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற இருப்பதால் விழாக் குழுவாகக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை செயற்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் எதிர்வரும் 2024 ஜனவரி 21 ஆம் திகதி பொதுச் சபை கூடி புதிய தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெறவுள்ளது. 26 ஆம் திகதி மத்திய செயற்குழு கூடவுள்ளது. 27 ஆம் திகதி பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. 28 ஆம் திகதி தமிழ் அரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு இடம்பெறவுள்ளது.
மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது எனவும், பிரதேச ரீதியாக பிரதிநிதித்துவத்தைக் கூட்டுவது எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் திருகோணமலையைப் பொறுத்தவரை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த சில கருத்துக்களுக்கு அமைவாக மேலதிகமாக ஆறு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய மாவட்டக் கிளைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.” – என்றார்.