ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அரசுக்கு எதிராகக் கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த இன்றைய (30) ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டபோது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் பேரணியின்போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியாசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேரணியைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொழும்பு தேசிய வைத்தியாசாலைக்குச் சென்று முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நலன் விசாரித்தார்.