22 வயது இளம் பெண்ணுக்கு வலிப்பு வந்து அவர் துடித்துக்கொண்டிருந்த போது அவரது ஆடை விலகிய உடலின் வீடியோவை பார்த்து கேலி செய்த இங்கிலாந்து பொலிஸார் குறித்து, பொலிஸ் ஒழுங்கு முறை அமைப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இங்கிலாந்து, Berkshire பகுதியில் கடந்த ஆண்டு இளம் பெண் ஒருவர் யாரையோ தாக்கியதாக சந்தேகத்தின்பேரில் மேற்படி இளம் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரவு நேரத்தில் அந்த இளம் பெண்ணக் கைது செய்த பொலிஸார், அவரை வேனில் ஏற்றிச் செல்லும்போது, திடீரென அந்த இளம் பெண்ணுக்கு வலிப்பு வந்துள்ளது. அவர் துடிதுடித்துக்கொண்டிருக்கும்போது, அவரது ஆடை விலகியுள்ளது.
இந்தக் காட்சிகள் அவரைக் கைது செய்த பொலிஸார் அணிந்திருந்த கமெராவில் பதிவாகியுள்ளன.
அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். பின்னர் அவர் குற்றவாளியே அல்ல, அவர்தான் தாக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கமெராவில் பதிவாகிய காட்சிகளை லாப்டாப்பில் பார்த்த ஆண் பொலிஸார்கள் சிலர், குறித்த இளம் பெண்ணின் மார்பு மற்றும் அந்தரங்கப் பகுதி குறித்து மிக மோசமாக விமர்சித்ததுடன், அப்பெண்ணுடன் உடலுறவு கொள்ள எவ்வளவு பணம் கொடுக்கலாம் எனவும் விவாதித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்தபோது உடன் இருந்த பொலிஸ் பயிற்சி மாணவர் ஒருவர் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொலிஸாராக பணியாற்ற பொலிஸ் பயிற்சி மாணவருக்கு தகுதி இல்லை எனக் கூறி அவரை பணி நீக்கம் செய்துள்ளனர்.
இதேவேளை, இளம் பெண்ணின் வீடியோ பொலிஸாரால் வாட்சப் கூடாக பகிரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
பாதிக்கப்பட்ட 22 வயது பெண், “நான் காட்டிக்கொடுக்கப்பட்டதாக உணர்கிறேன். அந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், பொலிஸாரே கமெராவை தவறாகப் பயன்படுத்தியுள்ளமை உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பதாகவும் காட்சிகளை நீக்குவதைத் தடுக்கும் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு ஏற்கெனவே வழிவகுத்துள்ளதாகவும் பொலிஸ் மற்றும் குற்றவியல் ஆணையர்களின் சங்கத்தின் தலைவர் டோனா ஜோன்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஒழுங்கு முறை அமைப்பு தற்போது விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது.
மூலம்: பிபிசி