“சிங்கங்கள், பன்றிகளின் பண்ணைக்குள் செல்லாது. எனவே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமையும் புதிய கூட்டணியில் நாம் இணையமாட்டோம்.”
– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமை குறித்தும், மைத்திரிபால சிறிசேன தரப்பால் உருவாக்கப்பட்டு வரும் புதிய கூட்டணி குறித்தும் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியில் பொய்யர். அவருடன் கூட்டு அரசியல் பயணத்துக்குத் தயாரில்லை. பன்றிகள்தான் பன்றிகளின் பண்ணைக்குள் செல்லும், மாடுகள் மாட்டுத் தொழுவங்களுக்குள் செல்லும். நாம் சிங்கங்கள். இழுநிலைக்கு விழமாட்டோம். சிலவேளை எமது பக்கம் உள்ள சில பன்றிகள் அவற்றின் பண்ணை நோக்கிச் செல்லக்கூடும்.
அதேவேளை, எட்கா மட்டுமல்ல எம்.சி.சி. உடன்படிக்கையைக் கைச்சாத்திடுவதற்கான பேச்சுகளும் இடம்பெறுகின்றன. இவை தொடர்பில் நாட்டில் உள்ள முற்போக்கு சக்திகள் குரல் எழுப்பாமை கவலையளிக்கின்றது.” – என்றார்.