“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் கேட்கின்றனர். எனவே, அது தொடர்பில் விரைவில் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை எடுங்கள்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடன் தலைமைப்பீடத்திடம் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி தமது கட்சி வேட்பாளராக தற்போதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பெயரிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைப் பெயரிட்டுள்ளது. அதேவேளை, தேசிய மக்கள் சக்தி அநுரகுமார திஸாநாயக்கவைக் களமிறக்கவுள்ளது.
எனினும், தமது கட்சி வேட்பாளரை நிறுத்துமா அல்லது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமா என்பது தொடர்பில் மொட்டுக் கட்சியின் எம்.பிக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்பவுள்ளார், அவர் நாடு திரும்பிய பின்னர் விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளார். அந்தக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் குறித்த மொட்டுக் கட்சியின் நிலைப்பாடு தெரியப்படுத்தப்படவுள்ளது.