செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்.பல்கலை மாணவன் சித்திரவதை | மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்.பல்கலை மாணவன் சித்திரவதை | மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

2 minutes read

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாக தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் , பல்கலைக்கழக மாணவனான கருணாகரன் நிதர்சன் எனும் மாணவன் இன்று திங்கட்கிழமை (05) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவிக்கையில்,

வட்டுக்கோட்டை மாவடி பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தன்னை வழிமறித்து , தான் மறிக்கும் போது ஏன் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை என என்னுடன் முரண்பட்டார்.

அதற்கு நான் நீங்கள் மறித்ததை கவனிக்கவில்லை. என கூறி, ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன, என அவற்றை எடுத்து கொடுத்த போது, அதனை வாங்காது, மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு வரவழைத்தார்.

அதன் போது, சிவில் உடையில் வந்த 7க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் , எவ்வித விசாரணைகளும் இன்றி, என்னை வீதியில் வைத்து, மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே கடுமையாக தாக்கினார்கள். என்னை தாக்கும் சம்பவம் அருகில் உள்ள கடையில் கண்காணிப்பு கமராக்களில் கூட பதிவாகியுள்ளது. அத்துடன் நானும் எனது கைபேசியில் என்னை தாக்குவதனை காணொளி எடுத்தேன்.

பின்னர் என்னை பொலிஸ் வாகனத்தில் ஏற்றி சென்று, பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறைக்குள் என்னை அழைத்து சென்று என்னுடைய ஆவணங்கள் , மற்றும் கைபேசி என்பவற்றை பறித்தார்கள்.

கைபேசியின் இரகசிய குறியீட்டை கேட்ட போது , அதனை தர முடியாது என மறுத்த போது, என் கால்களை பிடித்து தலைகீழாக தூக்கி கடுமையாக தாக்கினார்கள்.

என் ஆணுறுப்பை குறிவைத்தும் கடுமையாக தாக்கினார்கள். இதனால் எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. வியர்க்க தொடங்கியது.

அதனை அடுத்து என்னை அறையில் இருந்து, வெளியே அழைத்து வந்து, கதிரையில் அமர வைத்து விட்டு சென்று விட்டார்கள்.

பின்னர் நான் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி வந்தேன். என்னை பொலிஸாரின் இரகசிய அறைக்குள் அழைத்து சென்றதனை, பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் நேற்றைய தினம் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூவர் கண்கள் கண்டார்கள்.

அறைக்குள் வைத்து, அடிக்கும் போது, நான் எழுப்பிய அவலக்குரல் அவர்களுக்கும் கேட்டு இருக்கும். அடித்த பின்னர் என்னை கைத்தாங்கலாக பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அழைத்து வந்து கதிரையில் அமர வைத்ததையும் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூவரும் நேரில் கண்டார்கள்.

எவ்வித குற்றமும் இழைக்காத என்னை சிவில் உடை தரித்த பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்கி சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். என்னை கொலை செய்யும் நோக்குடன் என் ஆணுறுப்பை குறித்து வைத்தும் தாக்கினார்கள்.

இந்நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளமையால் இன்றைய தினம் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

இதேவேளை, வட்டுக்கோட்டை பொலிஸாரினால், கடுமையான சித்திரவதைக்கு உள்ளான நகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

குறித்த உயிரிழப்பானது ஆட்கொலையே என யாழ்.நீதவான் நீதிமன்றம் மரண விசாரணை கட்டளையில் குறிப்பிட்டுள்ளது.

இளைஞனின் கொலை தொடர்பில் நேரடி சாட்சியான, இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன், சித்திரவதைக்கு தம்மை உள்ளாக்கியவர்கள் ஐவர் என அடையாளம் கூறிய போதிலும், பொலிஸார் நால்வரையே கைது செய்து மன்றில் முற்படுத்தி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த வாரம், சுன்னாகம் பொலிஸாரினால் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கடுமையாக தாக்கி சித்திரவதைக்கு உள்ளாகிய நிலையில், கைதான இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இருந்தார்.

அச்சுவேலி பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, விசாரணைக்கு செல்லாத இளைஞனை அச்சுவேலி பொலிஸார் வீதியில் வழிமறித்து கடுமையாக தாக்கியமையால், இளைஞன் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது வட்டுக்கோட்டை பொலிஸாரினால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணியில் பொலிஸார் மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More