இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை திருகோணமலையில் நடத்தும் முயற்சிக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றமும் இன்று இடைக்கால கட்டாணை வழங்கித் தடை விதித்தது.
கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த யாழ். மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது.
சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வழக்காளிக்காக முன்னிலையாகி வாதாடினார்.
கட்சியின் பிரமுகர்களான மாவை சேனாதிராஜா, சேவியர் குலநாயகம், ப.சத்தியலிங்கம், சி.சிறீதரன், ச.குகதாசன் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் கடந்த மாதம் 21 ஆம் திகதி மற்றும் 27ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்ட முடிவுகளை இடைநிறுத்துமாறு உத்தரவிடக் கோரியும், அக்கூட்ட முடிவுகளை இரத்துச் செய்யுமாறு அறிவிக்கக் கோரியும் இன்னொரு மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பெரும்பாலும் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.