“அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கின்றது. எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருக்கின்றோம். அந்தச் செயற்பாடுகள் அனைத்தும் அறிவியல் முறைமைகளுக்கு அமைய, படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிகாரத்துக்காக ஒருபோதும் நான் பொய் சொல்லவில்லை. அதிகாரத்துக்காக அன்றி நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே எனது நோக்கமாகும்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சில அரசியல் குழுக்கள் அதிகாரத்தைப் பெற்றுகொள்ளும் நோக்கில் யதார்த்தத்தை மறந்துவிட்டு, கற்பனைக் கதை சொல்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று நாட்டின் முன்பிருக்கும் பிரச்சினைகளுக்கு, சில்லறைத்தனமான தீர்வுகள் இல்லை என்றும், அவ்வாறான தீர்வுகளால் நாட்டின் பொருளாதாரத்தை மீளமைக்க முடியாதென்பதை அடிப்படை பொருளாதார அறிவுள்ளவர்கள் அறிவர் எனவும் தெரிவித்தார்.
அரசு பயணிக்கும் பாதையின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கின்றது எனவும், அந்தப் பாதையில் முன்னேறிச் செல்வதற்கான சட்டத் திட்டங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருக்கின்றோம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் கூறினார்.
போகும் பாதையில் முன்னேறிச் சென்று பொருளாதாரம் வலுவடைவதன் பலனை, நாடு என்ற வகையில் அடைந்துகொள்வதா? இல்லாவிடின் அந்தச் செயன்முறையிலிருந்து விடுப்பட்டு ஓரிரு வருடங்களுக்கு முன்பிருந்த இருள் யுகத்துக்குள் மீண்டும் செல்வதா? என்பதை தீர்மானிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று நமது நாடு ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். எனினும், இதனை ஏற்றுக்கொண்டதாக காட்டிக் கொள்ளாமல், நாம் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டத்தை விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர்.
பொருளாதாரம் வலுவாக இருப்பதாகத் தோன்றினாலும், மக்கள் அதை உணரவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் மீது தேவையற்ற வகையில் வரிச் சுமையை அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர். மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகள் தேவையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
பொதுவாக, பூவைக் காயப்படுத்தாமல் தேன் எடுப்பதைப் போல் மக்களைத் துன்புறுத்தாமல் வரி வசூலிக்க வேண்டும் என்ற பழமொழி உண்டு. ஆனால் அந்த நடைமுறையை நாங்கள் பின்பற்றவில்லை என்று விமர்சிக்கின்றனர். எனினும், இவ்வாறு விமர்சிப்பவர்கள் ஒரு விடயத்தை மறந்துள்ளனர். பூக்களை நசுக்கித் தேன் எடுக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன என்பதை அவர்கள் மறந்துள்ளனர். இது நமக்கு சிறந்தவொரு படிப்பினை. ஒரு சாதாரண சூழ்நிலையில், பூக்களை நசுக்காமல் தேன் எடுக்க முடிந்தாலும், இருளில் பயணிக்கும்போது அவ்வாறு செய்ய முடியாது. இன்று நாமும் இருளில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். கடந்த காலத்தில் நாம் பொருளாதார தொங்கு பாலத்தில் பயணிக்க நேரிட்டது. இருளில் பயணிக்க நேரிட்டது. இவ்வாறான ஆபத்தான நிலை எங்களுக்கு ஏன் ஏற்பட்டது? எமது பொருளாதாரம் ஏன் வங்குரோத்தடைந்தது? கடந்த கால அரசுகள் தொலைநோக்குப் பார்வையற்ற முடிவுகள் எடுத்தமை ஒரு காரணமாகும்.
அரசின் பல சாதகமான வேலைத் திட்டங்களை பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்த்து, சீர்குலைத்ததும் மற்றொரு காரணமாகும். இந்தக் கட்சிகள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தின.
இதனால் நாட்டுக்கு முறையான, பரிபூரணமான பொருளாதாரத் திட்டமொன்று தேவைப்பட்டது. இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த நாம் பல சந்தர்ப்பங்களில் முயற்சித்தோம். எனினும், இவ்வாறான திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வாய்ப்புக் கிடைக்காமல் போனது.
1989 ஆம் ஆண்டு, கலாநிதி சந்திம விஜேபண்டார, புத்தசரண பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை மேற்கோள் காட்ட விரும்புகின்றேன்.
அக்கட்டுரையில் புத்தர் உபதேசித்த குடதந்த சூத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
“திட்டமில்லாத வளர்ச்சி சாத்தியமற்றது. திய நிகாயாவின் குடதந்த சூத்திரம், வளர்ச்சிக்கான திட்டங்களின் அவசியத்தை விளக்குகிறது. வளர்ச்சியடையாத நாட்டில் பாட்டாளி வர்க்கம், அரசுக்கு எதிராக நெருக்கடியை ஏற்படுத்தும்போது, அரசாங்கம் ஒரு திட்டத்தின் மூலம் நாட்டை எவ்வாறு மேம்படுத்தியது என்பதை இது காட்டுகிறது.
இது அரசின் அடிப்படைப் பொருளாதாரத் திட்டம். இது வெற்றியடைந்ததாகவும், இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக மட்டுமன்றி, மதிப்புகளின் அடிப்படையில், நல்ல சமூக உறவுகளுடன், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தனர் என்று இந்தச் சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய அறிவியல் மற்றும் திட்டமிட்ட வழியை நாங்கள் இதற்கு முன்னர் பின்பற்றவில்லை. சில குழுக்கள் அத்தகைய வேலைத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. இதனால் நாட்டிற்கு என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவர். நாடு வங்குரோத்தடைந்தது. கடனைச் செலுத்த முடியாமல் போனது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் போனது.
சாதாரண குடிமகன் முதல் பெரிய தொழிலதிபர் வரை அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வரிசைகளின் யுகம் ஏற்பட்டது. பலர் தொழில்களை இழந்தனர். தொழில்களும் வணிகங்களும் சரிந்தன. சிலர் நாட்டை விட்டு வெளியேறினர். நாடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. பொருளாதார நரகத்தில் நாடு விழுந்தது.
இந்த நேரத்தில் நாடு அராஜகமாக மாறியது. ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்தது. பொருளாதார ரீதியில் மட்டுமன்றி சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையான ஆபத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.
இந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்கும் சவாலை யாரும் ஏற்க முன்வரவில்லை. அழைக்கப்பட்ட அனைவரும் மறுத்துவிட்டனர். தீயில் குதித்து தீயை அணைக்கும் தைரியம் யாருக்கும் இல்லை.
ஆனால் நாட்டுக்காக அந்த சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். தீயின் நடுவே சென்று தீயை அணைக்க ஆரம்பித்தேன்.
அந்த அயராத முயற்சியின் பலனை இன்று நாடு முழுவதும் அனுபவித்து வருகிறது. இந்த நேரத்தில், அந்த மாபெரும் முயற்சியில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்கின் றேன்.
நாங்கள் ஒரு சிறந்த, பயணத் திட்டத்திற்கு அடித்தளமிட்டோம். சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பொருளாதாரத் திட்டத்தைத் தயாரித்தோம்.
அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியதன் விளைவாக, நாடு நாளுக்கு நாள் இயல்பு நிலைக்கு வந்தது. அழுத்தம் தணிந்தது. துயரங்கள் மெல்லக் குறைய ஆரம்பித்தன.
அதைத் தெளிவுபடுத்தும் சில பொருளாதாரக் குறிகாட்டிகளை இந்த அவையில் முன்வைக்க விரும்புகின்றேன்.
2022 முதல் 2023 இரண்டாம் காலாண்டு வரை 6 காலாண்டுகளுக்கு தொடர்ந்து சுருங்கிய நமது பொருளாதாரம், 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து புத்துணர்ச்சிப் பெற ஆரம்பித்தது. இந்த ஆண்டு 2 முதல் 3 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என்று சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளன.
2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் அரச வருமானத்தை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்க முடிந்தது. கடந்த ஆண்டு முதன்மைக் கணக்கில் உபரித் தொகையைப் பெற முடிந்தது. இதனால், மூன்று, நான்கு ஆண்டுகளாக அரசுக்கு சேவை வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு அனைத்து நிலுவைத் தொகையையும் முடித்துள்ளோம்.
2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், அரசுக்குச் சொந்தமான 52 பெரிய நிறுவனங்கள் மொத்தமாக ரூ.720 பில்லியன் நட்டத்தை எதிர்கொண்டது. ஆனால் 2023 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் இந்த நிறுவனங்களிடமிருந்து ரூ.313 பில்லியன் இலாபமாகப் பெற முடிந்தது.
பொருளாதார நெருக்கடியால் பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆனால் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சியுடன், பல வணிக நிறுவனங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டில், 17,819 நிறுவனங்கள், கம்பனிப் பதிவாளர் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023 இல் 22,376 நிறுவனங்கள் பதிவு செய்யயப்பட்டுள்ளன. 2024 ஜனவரியில் 1,995 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் ஒருங்கிணைந்து மேற்கொண்ட பொருளாதார முகாமைத்துவம் காரணமாக, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 70 சதவீதமாக இருந்த பண வீக்கம், 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5.9 சதவீதமாகக் குறைந்தது.
பண வீக்கம் குறைந்ததால் 30 சதவீதமாக இருந்த வட்டி வீதத்தை 2023ஆம் ஆண்டில் 10 சதவீதத்தையும் விடக் குறைத்து சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க முடிந்தது.
2022 ஏப்ரல் நடுப்பகுதியில் வெறும் 20 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பை, தற்போது 3 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்க முடிந்தது. தனியார் மோட்டார் வாகனங்கள் தவிர, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
1977 இற்குப் பிறகு முதன்முறையாக, 2023ஆம் ஆண்டில், கொடுப்பனவு கையிருப்பின் நடப்புக் கணக்கில் உபரியை ஏற்படுத்த முடிந்தது. இதன் காரணமாக கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் ரூ.363 ஆக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்றைய நிலவரப்படி ரூ.308 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது.
இந்த பொருளாதார முன்னேற்றத்தின் விளைவுகளை இன்று முழு சமூகத்திலும் காண முடிகிறது.
கை டிரக்டர்கள் முதல் பெரிய பஸ்கள் வரை பல்வேறு வாகனங்களில் அனுராதபுரத்திற்கும் சிவனொலிபாத மலைக்கும் எத்தனை மக்கள் சென்று வழிபடுகின்றனர்? தலவில, மடுதேவாலய யாத்திரைக்கு எத்தனை பேர் செல்கிறார்கள்? நுவரெலியாவுக்கு எத்தனை பேர் சுற்றுலா செல்கிறார்கள்? கார் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், வீதியோரம் நிறுத்தி, சிறுசிறு தொழில் செய்வோர் எத்தனையோ பேர் உள்ளனர். தூரப்பயணம் செல்லும் ரயில் பெட்டியில் இருக்கையை முன்பதிவு செய்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது? முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் எத்தனை பேர் பயணிக்கிறார்கள்? நாடு முழுவதும் எத்தனை சுற்றுலாப் பயணிகள் உள்ளனர்?
வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருந்தவர்கள் இன்று அதிகமாக பயணம் செய்கின்றனர். பொழுது போக்க வெளியே செல்கிறார்கள். நோய்வாய்ப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவோ, சடலத்தை மயானத்திற்குக் கொண்டு செல்லவோ வாகனத்திற்கு சிறிது எரிபொருள் பெற முடியாத நாடாக இருந்தோம். வீட்டில் சமைக்க எரிவாயு இல்லாமல், வெளியே விறகு அடுப்பில் சமைத்த நாடு இது. பிள்ளை நோய்வாய்ப்பட்டால், பெரசிடமோல் மாத்திரையை தேடி வீடுவீடாகச் சென்ற நாடு இது. அந்த நிலை இப்போது முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது.
இன்று நாம் காணும் மற்றும் உணரும் பொருளாதார முன்னேற்றத்தை சிலர் விமர்சிக்கின்றனர். கடன் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கடனை மீளச் செலுத்த ஆரம்பித்தால், நாடு மீண்டும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். நாம் தற்பொழுது நரகத்தில் ஒரு இடைவேளைப் பெற்று, இந்த நிலையை அனுபவிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
அந்த விமர்சனங்கள் எந்த அடிப்படையும் அற்றவை என்பதைக் கூற விரும்புகிறேன்.
வெளிநாட்டுக் கடன்கள் உட்பட அனைத்து கடன்களையும் மறுசீரமைப்பது குறித்து தற்போது ஆராய்ந்து வருகிறோம். இந்தப் பேச்சுகள் விரைவில் வெற்றிகரமாக முடிவடையும் என நம்புகிறோம்.
கடனை மீளச் செலுத்தாதிருக்க 2023 முதல் 2027 வரை தற்காலிக சலுகைக்காலம் கிடைக்கும் என நம்புகிறோம். அதன் பின்னர் 2027 முதல் 2042 வரையிலான காலக்கட்டத்தில் கடனை மீளச் செலுத்த நடவடிக்கை எடுப்போம்.
இலங்கை கடன் சுமையில் உள்ள நாடு. 2022 ஆம் ஆண்டுக்குள், நாம் வருடாந்தம் சுமார் ஆறு பில்லியன் அமெரிக்க டொலரை, வெளிநாட்டுக் கடனாகச் செலுத்த வேண்டியிருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாகும். ஒரு நாடு என்ற ரீதியில் தாங்க முடியாத தொகை இது.
கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுவதன் மூலம், வருடாந்தம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடனை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாகக் குறைக்க முடியும். இது 50 வீத குறைப்பாக இருக்கும்.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நாம் எட்டிய பொருளாதார வளர்ச்சியை இதேபோன்று தொடர்ந்தால், அரச வருமானத்தை அதிக சதவீதத்தில் தக்க வைத்துக் கொள்ள முடியும். அப்படி நடந்தால் கடனை மீளச் செலுத்துவது நாட்டுக்குச் சுமையாக இருக்காது.
தற்போது, அரச வருமானத்தை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 11 சதவீதமாக உயர்த்த முடிந்துள்ளது. அதற்காக எமக்கு வற் வரியை விதிக்க நேரிட்டது. அது மிகவும் கடினமான முடிவு. அவ்வாறு வரி விதிக்கும் முடிவை நாங்கள் மிகவும் கஷ்டத்துடனே எடுத்தோம். ஆனால் இந்த பொருளாதார நோயைக் குணப்படுத்த வேறு மாற்றுவழி இல்லை. இந்த வலியை எமக்கு சிறிது காலம் அனுபவிக்க நேரிடும்.
வற் வரி விதிப்பால், அரசின் வருமானம் வலுப்பெற்றது. கடனை அடைக்கும் பலம் எம்மிடம் உள்ளது என்பது சர்வதேச சமூகத்தின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசின் வருமானம் அதிகரித்து, பொருளாதாரம் மீண்டு வருவதால், ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு வலுவடையும்போது எரிபொருள் உள்ளிட்ட இறக்குமதிப் பொருட்களின் விலை குறையும். ரூபாயின் பெறுமதி வலுவடைவதால் அனைத்து வற் செலுத்தும் நிறுவனங்களும் இப்போது பலனடைகின்றன. முழு நாடும் அந்த நன்மையைப் பெறுகிறது. எதிர்காலத்தில் பல நன்மைகள் கிடைக்கும்.
இந்தப் பாதையில் நாம் வெற்றிகரமாகத் தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் நமது பொருளாதாரம் ஸ்திரமாகிவிடும்.
மேலும், அரசு நிறுவனங்களின் நட்டத்தை மக்கள் வரிப் பணத்தில் இருந்து ஈடுசெய்யும் முறையை நிறுத்தியுள்ளோம். அந்த நிறுவனங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.
வரி வலையமைப்பு விரிவுபடுத்தப்படும். அந்தத் திட்டத்தின் கீழ், 2023 ஆம் ஆண்டில் மொத்த வரிக் கோப்புகளின் எண்ணிக்கை 1 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 130 சதவீதம் அதிகரிப்பாகும். பணம் அச்சடிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
அரச நிதி மற்றும் பொருளாதார நிர்வாகத்தை மேம்படுத்தவும் எளிதாக்கவும் சட்டக் கட்டமைப்பு மற்றும் செயல்முறைகளை வலுப்படுத்தவும் நவீனப்படுத்தவும் தேவையான சட்ட சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தெற்காசியாவில் முதன்முறையாக, ஆளுகை கண்டறியும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகத்தை மேம்படுத்தவும் ஊழல் அபாயங்களை எதிர்த்துப் போராடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முதலீட்டை ஈர்ப்பதற்காக ஒரு புதிய நிறுவனம் நிறுவப்படும். வெளிநாட்டு நிதித் துறைகளுக்கான தொடர்ச்சியான பிரவேசம் உறுதிப்படுத்தப்படும்.
விவசாயத்துறை நவீனமயப்படுத்தப்படும். உணவுப் பாதுகாப்பின் கீழ் பாரிய அளவிலான பண்ணைகளை ஆரம்பிக்க பல வெளிநாடுகள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டுச் சந்தைகள் படிப்படியாக ஏற்றுமதிக்காக திறக்கப்படுகின்றன. இங்கு, பாரம்பரியமற்ற ஏற்றுமதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.
நமது நாட்டை பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றி, பிராந்திய பொருளாதார மற்றும் சேவை மையமாக அபிவிருத்தி செய்வோம். துறைமுக நகரம், சர்வதேச நிதி மையமாக மாற்றப்படும்.
ஆனால், இந்தத் திட்டத்தின் ஊடாக தொடர்ந்து பயணிப்பதன் மூலம் மாத்திரமே இவை அனைத்தையும் மேற்கொள்ளமுடியும்.
நாம் இதுவரை கடைப்பிடித்து வந்த திட்டங்கள் காரணமாக நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு பல வசதிகளையும் சலுகைகளையும் வழங்க முடிந்துள்ளது.
‘உறுமய’ திட்டத்தின் கீழ் இருபது இலட்சம் குடும்பங்கள் காணி உரிமையாளர்களாக மாறுவர். பல தலைமுறைகளாக இழந்த காணி உறுமையை அவர்கள் மீண்டும் பெறுவார்கள்.
வறுமையில் இருக்கும் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்கும் வகையில் சமூகப் பாதுகாப்புக்கான கொடுப்பனவை மூன்று மடங்காக உயர்த்த முடிந்தது. அதனால் குறைந்த வருமானம் பெறும் 24 இலட்சம் குடும்பங்களுக்கு ‘அஸ்வெசும’ வழங்கப்படுகிறது. 45 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டம் வழங்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியம் புலமைப் பரிசில்களை வழங்குகிறது. நோயாளிகளுக்கு வழங்கும் நிவாரணத் தொகையையும் ஜனாதிபதி நிதியம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
‘மலைநாட்டு தசாப்தம்’ என்ற திட்டத்தின் கீழ் 89 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம். அதற்காக ஒரு பிரதேச சபைக்கு ரூ.100 மில்லியன் வரையில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வரவு செலவுத் திட்ட பன்முகப்படத்தப்பட்ட நிதியைக் கொண்டு தேர்தல் தொகுதிகளில் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 25 பிரதேச சபைகளைத் தெரிவு செய்து விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.
சுற்றுலா வியாபாரம் வளர்ச்சி கண்டுள்ளது. அதனால் பலர் பயனடைகின்றனர். அந்தத் துறையில் மேலும் பல முன்னேற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். சரிந்து கிடந்த பொருளாதாரம் ஓரளவு வலுவடைந்துள்ளது. அதன் பலனாக படிப்படியாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குகிறோம். வர்த்தகச் சமூகத்தின் நலனுக்காக பராடே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம். இம்மாதத்தில் மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் பாடசாலை புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள், மருந்து உள்ளிட்ட பொருட்களுக்கு வற் வரி விலக்களிக்க எதிர்பார்த்துள்ளோம். எதிர்காலத்தில் வற் வரியைக் குறைக்கவும் முடியும்.
நாம் நாளாந்தம் நெருக்கடிகளை எதிர்கொண்டாலும், வலுவான பொருளாதாரத்தைத் கட்டமைத்து வருகிறோம். பொருளாதாரம் வலுவடையும்போது மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவோம். உரிய திட்டங்களின் கீழ் அவற்றைச் செய்கிறோம். பொருளாதாரத்திற்கு நெருக்கடி ஏற்படும் வகையில் நிவாரணம் வழங்கி நாட்டை மீண்டும் நரகத்திற்குள் தள்ளிவிட நாம் தயாரில்லை. அதனால் அனைத்துச் செயற்பாடுகளையும் படிப்படியாகவும் அறிவியல் முறைக்கமையவுமே முன்னெடுத்து வருகிறோம்.
சில்லறைத்தனமான விடயங்களால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுக்காண முடியுமென சிலர் கருதுகின்றனர். வௌிநாடுகளிலிருக்கும் இலங்கையர்களிடமிருந்து 10 – 100 டொலர் வரை சேகரிக்கலாம் என சிலர் யோசனை கூறுகிறார்கள். அது பாடசாலையை அண்மித்து வசிப்போரிடம் பணம் சேகரித்து பாடசாலையை அபிவிருத்தி செய்ய முற்படுவது போன்ற செயலாகும். பொருளாதாரம் பற்றிய அறிவை ஓரளவேனும் கொண்டிருப்பவர்கள், அவ்வாறான முறைகளில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை அறிவார்கள்.
இந்தத் தருணத்தில் நம் முன்பிருக்கும் கேள்வி ஒன்றுதான்! நாம் தற்போது செல்லும் பாதையில் முன்னேறிச் செல்வதா? இல்லையா? என்ற கேள்வியே இருக்கிறது.
இவ்வாறு முன்னேறிச் சென்று, பொருளாதாரம் வலுவடைந்ததன் பலனை ஒரு நாடு என்ற வகையில் அடைவதா? இல்லாவிட்டால் இந்த நிலையிலிருந்து விலகிச் சென்று ஓரிரு வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போல வங்குரோத்து நிலையை அடைவதா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
நரகத்தில் மீண்டும் விழ வேண்டுமா? இல்லாவிட்டால் தற்போதை பாதையில் சுவர்க்கத்தை சென்றடைவதா? தற்போதைய பாதையைத் தவிர வேறு வழிமுறைகள் எவையும் இல்லை. நாம் இதுவரையில் அடைந்திருக்கும் வெற்றிகள் அதனை உறுதி செய்துள்ளன. அதனால் இதே வழியில் முன்னேறிச் செல்வதற்கான சட்ட திட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.
அதே நோக்கில் பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்போம்.
இவை அனைத்தையும் பிரசித்தமாகும் நோக்கில் செய்யவில்லை. பல அரசியல் குழுக்கள் பிரசித்தமாவதற்காக கற்பனைக் கதைகளைச் சொல்கிறார்கள். கனவுக் கோட்டைகளையும் கட்டுகின்றனர். அவர்களுக்கு நாட்டின் யதார்த்தமான நிலைமை புரியவில்லை. அதிகாரத்திற்காக முட்டிமோதிக்கொள்கிறார்கள். அதிகாரத்திற்காகப் பொய் சொல்கிறார்கள்.
ஆனால் நான் ஒரு போதும் அதிகாரத்திற்காகப் பொய் சொல்லவில்லை. எனது எதிர்காலத்திற்காகவும் நான் பணியாற்றவில்லை. நாட்டின் எதிர்காலத்திற்காகவே செயற்படுகிறேன். அதனால் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் முனைப்புடன் செயற்டவில்லை. நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.
எமது திட்டங்கள் சமூகத்தின் ஒவ்வொரு தனி நபருக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கலாம். அதனை நாம் உணர்ந்துள்ளோம். ஆனால் தனித்தனியே ஒவ்வொரு நபரினதும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது சரியான முறையாக அமையாது. அதனால் ஒருபோதும் நிலையான தீர்வை அடைய முடியாது. ஒட்டுமொத்த நாட்டையும் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். வலுப்பெறும் பொருளாதாரத்தின் பலன்களை அனைவருக்கும் பெற்றுக்கொடுக்கவே எதிர்பார்க்கிறோம்.
அதற்காக பேராசிரியர் ஹேன்பிட்டகெதர ஞானவாச தேரர் 1983 எழுதி வௌியிட்ட “எமக்கு பௌத்த ஆட்சி முறை அவசியமாவது ஏன்” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
“தனிநபர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிப்பதால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிட்டாது. மாறாக நெருக்கடி மேலும் வலுவடைந்து அதர்மம், மோசடி அதிகரித்து, அமைதியும் சமாதானமும் நலிந்து போகும்” என புத்த பெருமானின் போதனையில் கூறியுள்ளார். பொதுவான காரணத்தை அறிந்து தீர்வை வழங்க வேண்டியதன் அவசியத்தையை பௌத்த தர்மம் போதிக்கிறது. அதனால் நாம் அனைவரும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும் வகையிலான தீர்வுக்குச் செல்வோம்.
இந்த சரியான பயணத்தில் இணைந்துகொள்ள ஒன்றுபடுமாறு சபையில் இருக்கும் அனைவரிடமும் மக்களிடமும் கேட்டுகொள்கின்றோம்.” – என்றார்.