புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொது வேட்பாளர் விடயத்தில் தமிழர் ஆர்வம் இல்லை! – சார்ள்ஸ் எம்.பி. தெரிவிப்பு

பொது வேட்பாளர் விடயத்தில் தமிழர் ஆர்வம் இல்லை! – சார்ள்ஸ் எம்.பி. தெரிவிப்பு

1 minutes read
“வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பைப் பொறுத்த வரையில் அங்குள்ள தமிழர்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர் ஒரு தமிழ்த் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை. எனவே, தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்கள் ஆர்வமற்றவர்களாகவே இருக்கின்றனர்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழரசுக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது யாரை ஆதரிப்பது அல்லது தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்து இதுவரை எவ்வித கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்கவில்லை.

தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்து ஊடகங்களில் கருத்துக்கள் வெளி வருகின்றன. என்னைப் பொறுத்தமட்டில் அவர்கள் கூறுவதன் பிரதான காரணம் தொடர்ச்சியாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வாக்களித்தாலும் தமிழர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகத் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்கின்ற சிலரது கருத்துக்கள் நிலவுகின்றன.

எனது தனிப்பட்ட கருத்தாகத் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான விடயம்.

வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பைப் பொறுத்த வரையில் அங்குள்ள தமிழர்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர் ஒரு தமிழ்த் தலைமையை மக்கள் இன்னும் அடையாளம் காணவில்லை. காணவும் முடியாது என்பது என்னுடைய கருத்து.

எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கட்சித் தலைவர் அல்லது பொதுவானவர்களையோ அடையாளம் காண்பது என்பது கடினமான விடயம்.

குறிப்பாகத் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கருத்துக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இருப்பதாக நான் காணவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாகத் தமிழ் மக்கள் ஆர்வமற்றவர்களாகவே இருக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும்போது – வேட்பாளர்கள் தேர்தலில் நிறுத்தப்படும்போது அந்த நேரத்தில் கட்சி ஒரு தெளிவான முடிவை எடுக்கும்.” – என்றார்.

மேலும், கச்சதீவு விவகாரம், இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்தும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. கருத்துத் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More