இந்தியாவின் மும்பையில் உள்ள வைத்தியசாலையில் அலைபேசி விளக்கொளியில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில், தாயும் சிசுவும் உயிரிழந்துள்ளனர்.
ஸஹிடுன் எனும் 26 வயதுப் பெண் கடந்த திங்கட்கிழமை (29 ) பிரசவத்துக்காக குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரசவ நாளில் மின்சாரம் தடைப்பட்டதுடன், 3 மணி நேரம் மின்னுற்பத்தி இயந்திரமும் இயக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
திடீரென ஸஹிடுனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவசரமாக அறுவை சிகிச்சை செய்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
எனினும், அறுவை சிகிச்சைக்குத் தங்களிடம் அனுமதி பெறப்படவில்லை என்று பெண்ணின் குடும்பத்தார் கூறியுள்ளனர்.
இதேவேளை, அந்த சம்பவத்தின் பின்னரும் இதே வைத்தியசாலையில் அதே பிரசவ அறையில் அலைபேசி விளக்கொளியில் மற்றொரு பெண்ணுக்கும் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.