புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தைக் குழப்பியடிக்கின்றார் சுமந்திரன்! – விக்கி குற்றச்சாட்டு

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தைக் குழப்பியடிக்கின்றார் சுமந்திரன்! – விக்கி குற்றச்சாட்டு

3 minutes read
“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்துப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் என்ற போர்வையில் சுமந்திரன் எம்.பி. ஏற்பாடு செய்துள்ள நிகழ்வானது திசை திருப்பும் செயற்பாடு என்பதுடன் தவறான வழிமுறையும் ஆகும். தமிழரசுக் கட்சியைத் தனது கைப்பொம்மையாக மாற்ற சுமந்திரன் நினைக்கக் கூடாது.”

– இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் பொது வேட்பாளர் குறித்து சுமந்திரன் எம்.பி. அடுத்த மாதம் 9ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள கருத்துப் பரிமாற்றம் நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான இந்தக் கூட்டத்துக்கு எனக்கொரு அழைப்பும் வரவில்லை. ஆனால், இவ்வாறான கருத்துப் பரிமாற்ற கூட்டங்கள் என்பது எங்களைத் திசை திருப்புவதாகவே அமையும்.

ஏனென்றால் தேசியத்தோடு இணைந்திருக்கும் எங்கள் சிவில் சமூகத்தினர் தமிழ் மக்கள் சார்பிலே ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். இதனை முன்வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடனும், பல அரசியல் தரப்பினர்களுடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறாக பொதுவான நிலைப்பாடு எடுக்கப்பட்டு அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கும்போது இந்த விவகாரத்தைப் பொது வெளியில் கொண்டு சென்று கருத்துப் பரிமாற்றம் என்று சொல்லி முரண்பாட்டுக்குரியதாகக் கொண்டு வந்து நிறுத்துவது எங்களைத் திசை திருப்புவதாகவே அமையும்.

ஆகவே, எங்களுடைய இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக யாராவது ஏதாவது சொல்ல வேண்டுமாக இருந்தால் எப்பவும் எதனையும் சொல்லட்டும். அதற்குரிய பதில்களை நாங்கள் கூறுவோம்.

அதாவது பொது வேட்பாளரைக் கொண்டு வந்து நிறுத்தினால் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவார்கள் அல்லது அப்படி, இப்படி என்று ஏதாவது காரணங்களைச் சொன்னால் அதற்குரிய பதில்களை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

நாங்கள் எடுத்துக்கொண்ட தீர்மானத்தில் இருந்து நழுவக் கூடாது. அந்தத் தீர்மானத்தில் இருந்து எங்களை அங்கு, இங்கு எனக் கொண்டு செல்ல அல்லது வழிநடத்தப் பார்க்கின்றார்கள். ஆகவே, எங்களுடைய சிவில் சமூகத்தினர் இது சம்பந்தமான நடவடிக்கைகளில் மிகக் கவனமாக இறங்க வேண்டும்.

எமது தீர்மானம் குறித்து எந்தவிதமான கருத்துப் பரிமாற்றமும் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டோம். அது சம்பந்தமாக ஆதரவு அல்லது எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தங்களுடைய கருத்துக்களை எங்களுக்குத் தருகின்றபோது அதற்குப் பதிலைக் கொடுப்பது எங்களுடைய கடமை.

அதனை விடுத்து இந்த விடயத்தைப் பொது வெளியில் அல்லது பொது மன்றத்தில் பேசவும் அதைப் பெரிதாக்கவும் வேறுவிதமாக இதைத் திசை மாற்றிக் கொண்டு செல்ல நினைப்பதும் பிழையான ஒரு வழிமுறை என்பது என்னுடைய கருத்தாகும்.

மேலும், இந்தச் சந்திப்பு தொடர்பில் எனக்கும் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு நான்  அழைக்கப்படவும் இல்லை. பத்திரிகைகள் ஊடாகவே இதனை நான் பார்த்தேன். அதேபோன்று வேறு யாரும் எனக்கு இது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவும் இல்லை.

இருப்பினும் இந்த நடவடிக்கை மிகவும் பிழையானது. அவ்வாறான ஒரு கருத்துப் பரிமாற்றம் இருக்கக் கூடாது. மீண்டும் மீண்டும் சொல்கின்றோம் நாங்கள் ஒரு முடிவை எடுத்து இருக்கின்றோம். அந்த முடிவுக்கு எதிராக யாராவது ஒரு தமிழ் மகன் எதிர்க் கருத்துக்களைத் தெரிவித்தால் அதற்குப் பதில் சொல்ல வேண்டியது எங்களுடைய கடமை. அதனடிப்படையில் பதில் வழங்குவோம்.

ஏனெனில் நாங்கள் எடுத்த அந்த முடிவிலே எங்களிடம் திடமான கருத்து இருக்கின்றது. அதற்கான அடிப்படை அத்திவாரம் நன்றாக இருக்கின்றது.  நாங்கள் எவருக்கும் பயப்பட வேண்டியதில்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு எங்களால் பதில் சொல்ல முடியும். இதை விட்டுவிட்டு இப்படி, அப்படி அங்கு இங்கு என நழுவிப்போவது எங்கள் தமிழ்த் தேசியத்துக்கும் கூடாது. சிவில் சமூகத்தினர்களுக்கும் அது கூடாத ஒரு விடயம்.

சுமந்திரன் தமிழ்த் தேசியத்தோடு நின்றவர் அல்ல. இதுவரையில் நமக்குத் தெரிந்த வரையில் தமிழ்த் தேசியத்தோடு ஒன்றியவரும் அல்ல. எனக்குப் பயமில்லை, நான் அதைச் சொல்லுவேன், இதைச் சொல்லுவேன் என்று அவர் சொல்லுவதிலிருந்தே அது தெரியும்.

பொது வேட்பாளர் என்ற விடயத்தில் அவருக்கு ஈடுபாடு இல்லை. அவரைப் பொறுத்தவரையில் ஏதோ தெற்கில் இருக்கும் ஒரு வேட்பாளருக்கு அது யாரோ ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் அல்லது ஆதரவு வழங்க வேண்டும் என்றும், அதிலிருந்து தமக்கு சில நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணம் இருக்கக்கூடும்.

ஆனால், அதற்காகத் தமிழரசுக் கட்சியை தன்னுடைய கைப்பொம்மையாகச் சுமந்திரன் மாற்றக்கூடாது. ஏனென்றால் நாங்கள் இன்னமும் அது சம்பந்தமான ஒரு தீர்மானத்துக்கு வரவில்லை என்று அவர் சொல்லுகின்றார்.

அவ்வாறு அவர் கூறுவது தன்னுடைய கருத்துக்களைத்தான். இந்தக் கருத்துக்களைச் சிறீதரன் தெரிவிக்கவில்லை. சிலவேளை சிறீதரன் பொது வேட்பாளருக்குத் தான் ஆதரவு என்றும், அவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்று கூட கூறலாம்.

இந்த மூன்று பிரதான வேட்பாளர் தொடர்பில் எங்களுக்கு எந்த விதமான கவலையும் இல்லை என்று கூட சிறீதரனால் சொல்லக்கூடும்.  ஆக மொத்தத்தில் சுமந்திரன் கூறியது அவருடைய கருத்துத் தவிர கட்சி நிலைப்பாடு அல்ல. அவருடைய அந்தக் கருத்தை மேலே தூக்கிப் பிடிப்பது தமிழ்த் தேசியத்துக்கு இழுக்காக இருக்கின்றது.

மேலும் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் என்ற முறையில் சுமந்திரன் பேசியது என்றால் இப்போது தமிழரசுக் கட்சிக்குத் தலைவர் ஒருவர் இருக்கின்றாரா?  இப்ப அந்தக் கட்சிக்குள் பதவி நிலைகளுக்குக் குழப்பங்களுக்கு மத்தியில் பல விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படிப் பார்த்தால் இவர் பழைய ஊடகப் பேச்சாளர்தான். இருந்தும் இப்பவும் அவர் தொடர்ந்து ஊடகப் பேச்சாளராக இருக்கின்றாரா என்று தெரியவில்லை.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More