ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து வரும் நிலையில், அக்கட்சி சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மொட்டுக் கட்சியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்புக்கள் அண்மையில் நடந்தன. நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவும் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவளித்தால் மொட்டுக் கட்சிக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 30 வீதமும், மாகாண சபைத் தேர்தலில் 35 வீதமும், நாடாளுமன்றத் தேர்தலில் 40 வீதமும் போட்டியிடுவதற்கான ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
எனினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 90 வீதமும், நாடாளுமன்றத் தேர்தலில் 70 வீதமும், மாகாண சபைத் தேர்தலில் 70 வீதமும் தமது கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று பஸில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இதனால் இரு தரப்புகளும் இணக்கப்பாட்டுக்கு வருவது இழுபறியில் உள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மொட்டுக் கட்சியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை மொட்டுக் கட்சி நாளை திங்கட்கிழமை அறிவிக்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.