எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய தொழிலாளர் முன்னணி தீர்மானித்துள்ளது என்று அதன் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பதுளையில் ஞாயிற்றுக்கிழமை (4) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது என எதிரணிகள் போலி தகவல்களை பரப்பிவந்தன. தற்போது தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். எனவே, எதிரணிகளின் குற்றச்சாட்டுகள் போலியானவை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து, இந்நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லக்கூடிய தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு நாம் தீர்மானித்தோம். செப்டம்பர் 21 ஆம் திகதி அவர் ஜனாதிபதியாவார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் நாம் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினோம். அதற்கு தொழிலாளர்களுக்கு நன்மை பயக்ககூடிய வகையில் தீர்வு கிட்டும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பான கோரிக்கையும் எம்மால் முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.” எனவும் அரவிந்தகுமார் மேலும் குறிப்பிட்டார்.