செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சட்டம் என் கையில் | திரைவிமர்சனம்

சட்டம் என் கையில் | திரைவிமர்சனம்

3 minutes read

தயாரிப்பு : சண்முகம் கிரியேசன்ஸ் & சீட்ஸ் என்டர்டெய்ன்மென்ட்

நடிகர்கள் : சதீஷ், அஜய் ராஜ், பாவெல் நவகீதன், மைம் கோபி, ரித்திகா, வித்யா பிரதீப், பவா செல்லதுரை, ஈ. ராம்தாஸ் மற்றும் பலர்.

இயக்கம் : சாச்சி

மதிப்பீடு : 3/5

நகைச்சுவை நடிகர் என்ற தளத்திலிருந்து கதையின் நாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் சதீஷ் – கதையின் நாயகன் எனும் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தன் சந்தை மதிப்பினை உயர்த்திக் கொள்வதற்காகவும் கவனமுடன் தெரிவு செய்திருக்கும் திரைப்படம் ‘சட்டம் என் கையில்’. இயக்குநரும், சதீஷின் உறவினருமான சாச்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சட்டம் என் கையில்’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தின் மலை வாசஸ்தலமான ஏற்காடு எனும் மலைப்பிரதேசத்தில் ஒரே இரவில் நடைபெறும் கதை.

ஏற்காடு மலை பிரதேசத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார் கதையின் நாயகனான சதீஷ். பயணத்தின் போது அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வருகிறது.

அதற்கு பதிலளிக்க முயலும் போதெல்லாம் அவரின் பயண வேகம் அதிகரிக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் எதிர்பாராத விதமாக துவி சக்கர  வாகனத்தில் எதிரே வரும் நபர் மீது மோதுகிறார்.

அந்த விபத்தில் அந்த நபர் மரணம் அடைகிறார். அவரது சடலத்தை தனது வாகனத்தின் பின்பகுதியில் ஏற்றிக்கொண்டு தொடர்ந்து பயணிக்கிறார்.

அந்த இரவில் காவல் துறையினர் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தன் வாகனத்தின் பின்பகுதியில் ஆண் சடலம் ஒன்று இருப்பதால் காவல் துறையினரின் வாகன தணிக்கை பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வேகமாக பயணிக்கிறார்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த வாகனத்தை குறித்து ஏற்காடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க அங்கு காவல்துறையினரின் சமாதானமான அணுகுமுறைக்கு ஒத்துழைப்பு கொடுக்காத புகார்தாரர்களையும் குற்றவாளிகளையும் தன்னுடைய வன்முறை கலந்த விசாரணை மூலம் பணிய வைக்கும் காவல்துறை அதிகாரியான பாட்ஷா (பாவெல் நவகீதன்) வாகன தணிக்கை பணியில் ஈடுபடுகிறார்.

கதையின் நாயகனான சதீஷ் தான் இயக்கி வரும் வாகனத்தை தொடர்ந்து இயக்குவதா? இல்லையா? என சற்று தயக்கம் காட்டி, அதன் பிறகு காவல்துறையினரிடம் சரணடைகிறார்.

அதே தருணத்தில் ஏற்காடு காவல் நிலையத்திற்கு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக வீதியில் கிடத்தப்பட்டிருக்கிறார் என தகவல் வருகிறது.

அதற்காக அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி அஜய் ராஜ் அங்கு சென்று, தொடர் நடவடிக்கை குறித்த பணிகளில் ஈடுபடுகிறார்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் சரணடைந்த சதீஷின் நிலை என்ன? அவரது வாகனத்தின் பின்பகுதியில் இருக்கும் ஆண் சடலம் யார்? சாலையில் சடலமாக கிடக்கும் பெண் யார்? என்ன நடந்தது?  உண்மையான குற்றப் பின்னணி என்ன?  யார் குற்றவாளி?  என அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும், சுவராசியமாகவும் பதில் அளிப்பது தான் இப்படத்தின் கதை.

ஒரு க்ரைம் திரில்லர் ஜேனரிலான படைப்பை படக் குழுவினர் நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்கள்.

படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் எதிர்பாராமல் நடைபெறும் விபத்திற்குப் பிறகு திரைக்கதை சூடு பிடிக்கிறது.

பொதுவாக இதுபோன்ற கிரைம் திரில்லர் ஜேனரிலான படைப்பிற்கு who done it..? என்ற பாணியில் சஸ்பென்ஸ் காட்சிகள் வழியாக சொல்லப்பட்டு கொண்டே இருக்கும்.

ஆனால் இந்தப் படத்தில் இதனுடன் கூட ஏன்?  என்ற வினாவையும் உடன் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

இரண்டாம் பாதியில் குற்றத்தின் உண்மையான பின்னணியை அழகாக விவரிக்கும் போது ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்கிறது. இதற்காக இயக்குநர் சாச்சியையும் கதையை தெரிவு செய்து நடித்த சதீஷையும்  பாராட்டலாம்.

சதீஷ் கதாநாயக பிம்பத்தை தாங்கி அதற்கு பொருத்தமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.

இவரை விட காவல்துறை அதிகாரிகள் இடத்தில் பதவியை கைப்பற்றுவதற்காக நடைபெறும் பனிப்போர் மற்றும் ஈகோ இப்படத்தில் திரைக்கதையின் சுவாரசியத்திற்காக அற்புதமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதிலும் பாவெல் நவகீதன் தன்னுடைய அற்புதமான உடல் மொழியால் அந்த கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார்.

நடிகர் அஜய் ராஜ் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு அளவான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார்.

இந்தப் படைப்பில் பெண் கதாபாத்திரங்களுக்கு போதிய அளவு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

இருப்பினும் கதாநாயகனின் தங்கை கதாபாத்திரத்திற்கு கதையின் மையப் புள்ளியை வழங்கி இருப்பதால் இயக்குநரை பாராட்டலாம். அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரித்திகா இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்திருக்கிறார்.

இந்த படத்தின் தூண் என  ஒளிப்பதிவாளர் பி ஜி முத்தையாவை குறிப்பிடலாம். ஏற்காடு எனும் மலை பிரதேசத்தை பகல், மாலை, இரவு, என ஒவ்வொரு தருணத்திலும் அழகாக படம் பிடித்து பார்வையாளர்களை திரைக்கதையுடன் பயணிக்க வைத்திருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து படத்திற்கு இசை மூலம் இதயத்தின் படப்படப்பை அதிகரிக்க செய்த இசையமைப்பாளர் எம். எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட்டின் பின்னணி இசையையும் பாராட்டலாம்.

உச்சகட்ட காட்சியில் இடம்பெறும் உணர்வுபூர்வமான பாடலும் கவனம் பெறுகிறது.‌

இதுபோன்ற கிரைம் திரில்லர் திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு என்பது முக்கியமானது இப்படத்தின் படத்தொகுப்பாளரும் தன் பணியை நேர்த்தியாக மேற்கொண்டு இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக படக்குழுவினர் கிரைம் திரில்லர் ஜேனரிலான படைப்பினை நல்லதொரு அனுபவத்திற்காக வழங்கி இருக்கிறார்கள்.

பார்வையாளர்கள் யூகிக்கும் காட்சிகள் லாஜிக் மீறல் போன்றவை இருந்தாலும் அதையும் கடந்து படத்தை தாராளமாக கண்டு ரசிக்கலாம்.

சட்டம் என் கையில் – வெற்றி பெற்ற வித்தைக்காரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More