இலங்கைத் தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வனின் கதையைப் படமாக எடுக்கவுள்ளதாக திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து முகநூலில் அவர், “ இலங்கை எழுத்தாளர் தீபச் செல்வனின் பயங்கரவாதி நாவலை திரைப்படமாக எடுக்க முடிவு. விரைவில் நடிகர் யார் என்று அறிவிப்பேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த அறிவிப்புக்கு இலங்கைத் தமிழ் எழுத்தாளர் தமிழ்நதி உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சீனு ராமசாமியின் அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள தீபச்செல்வன், “பயங்கரவாதி நாவலை படமாக இயக்கப் போவதாகவும் ‘விரைவில் நடிகர் யார் என்று அறிவிப்பேன்..’ என்றும் மக்கள் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் அறிவித்துள்ளார். இந்த ஆசுவாசத்தை அவ்வளவு எளிதில் விபரித்துவிட முடியாது. தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர் ஈழ நிலத்தின் கதையை திரைப்படமாக்கும் இந்தப் பணிக்கு என் பேரன்பு.” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம்வரை இந்த நாவல் குறித்து தீபச்செல்வனிடம் இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதா என்கிற நோக்கில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.