தனது குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக இத்தாலிக்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்து பிரஜை ஒருவர் பொலிஸில் சிக்கியுள்ளார்.
இத்தாலியின் பொம்ப்பெய் (Pompeii) நகருக்குச் சென்றிருந்த குறித்த இங்கிலாந்து பிரஜை, 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீட்டைச் சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பொம்ப்பெய் நகரில் 2,000 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அந்நகரம் பாதுகாக்கப்பட்டது. அங்குச் செல்லும்போது 2,000 ஆண்டுக்கு முன்னர் மக்கள் எப்படி வாழந்தனர் என்பதைக் காணும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது.
‘House of the Vestal Virgins’ வீட்டில் 37 வயதுடைய மேற்படி இங்கிலாந்து பிரஜை, அவரது குடும்பத்தாரின் பெயர்களின் முதலெழுத்துகளையும் தாம் சுற்றுலா சென்ற திகதியான ஓகஸ்ட் 7யும் சுவரில் பொறித்துள்ளார்.
இவரின் செயலைக் கண்ட ஊழியர்கள், பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், தான் செய்த தவற்றுக்கு அவர் மன்னிப்புக் கேட்டதாக ANSA எனும் இத்தாலிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தாமும் தமது இரண்டு மகள்களும் அங்கு வந்ததற்கு நினைவுச் சின்னமாக அவர்களது பெயர்களின் முதலெழுத்துகளைப் பொறித்ததாக அவர் குறியுள்ளார்.