“என் மீது நம்பிக்கை வைத்து ஆணையைத் தாருங்கள். பயனுள்ள, வளமான நாட்டைக் கட்டியெழுப்புகின்றேன்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
‘ரணிலுடன் இணைந்து நாட்டை வெல்வதற்கான ஐந்தாண்டுகள்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான விஞ்ஞாபனம் இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது.
சர்வமத வழிபாடுகளுடன் சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“சஜித்தும், அநுரவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியப் பொறிமுறைக்குள் செயற்படத் தயாரா?
உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் முதல் கட்டமாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.
ஊழல், மோசடிக்காரர்களைக் கைது செய்வது தொடர்பில் ஏனையோர் இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நாம் ஏற்கனவே அதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றிவிட்டோம்.
ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வந்து திருடர்களைக் கைது செய்ய வழிவகுத்துள்ளேன். நான் யாரையும் பாதுகாக்க ஜனாதிபதி கதிரையில் அமரவில்லை.
என் மீது நம்பிக்கை வைத்து ஆணையைத் தாருங்கள். பயனுள்ள, வளமான நாட்டைக் கட்டியெழுப்புகின்றேன்.” – என்றார்.