தமிழகத்தின், சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்த நான்காவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (13) 3 புதிய போட்டி சாதனைகளுடன் 5 தங்கப் பதக்கங்கள் உட்பட 16 பதக்கங்களை இலங்கை வென்றெடுத்தது.
ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.33 செக்கன்களில் நிறைவு செய்த இந்துசார விதுஷான் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 2.17 மீற்றர் உயரத்தை தாவி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை லெசந்து அர்த்தவிந்து வென்றெடுத்தார்.
ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் இலங்கை அணியினர் புதிய போட்டி சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர்.
அப் போட்டியை 40.28 செக்கன்களில் இலங்கை அணியினர் ஓடி முடித்தனர்.
ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 09.27 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை அணியினர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர்.
இதேவேளை, ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை ஹசித்த திசாநாயக்க வென்று கொடுத்தார். அவர் முப்பாய்ச்சலில் 15.09 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்தார்.
இலங்கைக்கு இன்றைய தினம் கிடைத்த ஏனைய பதக்கங்கள்
ஆண்களுக்கான உயரம் பாய்தல்: டினுஷான் மெண்டிஸ் (2.10 மீற்றர்) – வெள்ளி.
ஆண்களுக்கான முப்பாய்ச்சல்: ஹன்சக்க சந்தீப்ப (14.92 மீற்றர்) – வெள்ளி.
ஆண்களுக்கான 1500 மீற்றர்: ப்ரஷான் புத்திக்க (4 நிமிடங்கள், 03.79 செக்.) – வெண்கலம்.
ஆண்களுக்கான 200 மீற்றர்: கௌஷான் தமெல் (21.44 செக்.) – வெண்கலம்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல்: டில்ஹார தனசிங் (62.22 மீற்றர்) – வெண்கலம்.
பெண்களுக்கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்டம்: இலங்கை (46.48 செக்.) வெள்ளி
பெண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டம்: இலங்கை (3 நி. 49.99 செக்.) – வெள்ளி
பெண்களுக்கான முப்பாய்ச்சல்: டில்கி நெஹாரா (12.32 மீற்றர்) – வெள்ளி.
பெண்களுக்கான 1500 மீற்றர்: துலஞ்சனா ப்ரதீபா (4 நி. 39.01 செக்.) – வெண்கலம்.
பெண்களுக்கான குண்டு எறிதல்: இசாலி மல்கெத்மி (10.68 மீற்றர்) வெண்கலம்.
பெண்களுக்கான ஈட்டி எறிதல்: நிசன்சலா மதுபாஷ் (35.02 மீற்றர்) – வெண்கலம்)
சென்னையில் மூன்று நாட்கள் நடைபெற்ற நான்காவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் உட்பட மொத்தம் 35 பதங்கங்களை வென்றெடுத்த இலங்கை ஒட்டுமொத்த நிலையில் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
இப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 48 பதக்கங்களை வென்றெடுத்து ஒட்டுமொத்த சம்பியனானது.
பங்களாதேஷ் 3 வெண்கலப் பதக்கங்களுடன் 3ஆம் இடத்தையும் மாலைதீவுகள் 2 வெண்கலப் பதக்கங்களுடன் 4ஆம் இடத்தையும் நேபாளம் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 5ஆம் இடத்தையும் பெற்றன.