Monday, September 23, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நந்தன் | திரைவிமர்சனம்

நந்தன் | திரைவிமர்சனம்

2 minutes read

தயாரிப்பு : இரா என்டர்டெயின்மென்ட்

நடிகர்கள் : சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி மற்றும் பலர்.

இயக்கம் : இரா. சரவணன்

மதிப்பீடு : 2.5 / 5

‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டின் நடைபெறும் தேர்தல் அரசியல் தொடர்பான திரைப்படம் ‘நந்தன்’. சசிகுமார் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தில் உள்ள வணங்கான்குடி எனும் ஊரக உள்ளாட்சி பகுதியில் ஊராட்சி மன்றத்திற்கான தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடர்பான ஆலோசனை கூட்டத்துடன் கதை தொடங்குகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த ஊராட்சிக்கு பரம்பரை பரம்பரையாக கோப்பு லிங்கம் என்பவர் தான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இந்த முறையும் அவர் தலைவர் பதவிக்கான ஏலத்தில் பங்கு பற்றி ஊராட்சிக்கு 20 இலட்சம் ரூபாயை செலுத்தி, தலைவர் பதவியை பெறுவதற்கான முயற்சியில் வெற்றி பெறுகிறார். இந்த தருணத்தில் அந்த ஊராட்சி தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தொகுதி என மறு வரையறை செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறது.

இதனால் கோப்பு லிங்கத்தின் ஊராட்சி மன்ற தலைவர் பதவி கனவாகி போகிறது. இருப்பினும் தன்னுடைய ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவரை தெரிவு செய்து, அவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வைக்கிறார்.

இதற்கு பொருத்தமானவராக கோப்பு லிங்கத்தின் விசுவாசியாகவும், அடிமையாகவும் அந்த வீட்டில் பணியாற்றி வரும் கூழ் பானை எனும் அம்பேத்குமாரை தெரிவு செய்கிறார்.

திட்டமிட்டபடியே அவரை ஊராட்சி மன்ற தலைவராக்குகிறார். ஊராட்சி மன்ற தலைவரான பிறகு தன்னுடைய மக்களுக்கு சிறிய அளவிலான அரசாங்கத்தின் உதவிகளை கூட பெற்று தர இயலாத யதார்த்த நிலையை அம்பேத்குமார் உணர்கிறார்.

அதன் பிறகு ஆதிக்க சாதியினருக்கும்.. ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இடையே அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் பனிப்போர் ஏற்படுகிறது.

இதில் யார் வெற்றி பெறுகிறார்கள்? என்பதை உணர்வுபூர்வமாக விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

கோப்பு லிங்கம் எனும் கதாபாத்திரத்தில் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் சாதி திமிர் கொண்ட ஆதிக்க சாதி கதாபாத்திரத்தில் ஏகத்தாளமாக நடித்து ரசிகர்களை கவர்கிறார்.

கூழ் பானை எனும் அம்பேத்குமார் கதாபாத்திரத்தில் முதன் முதலாக சசிகுமார் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டு ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார்.

முதலாளிக்கு விசுவாசியாக நடிக்கும் காட்சிகளிலும் மனைவியின் அறிவுரைக்கு பிறகு ஊராட்சி மன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின் வெண்மை நிற புத்தாடை அணிந்து பணியாற்ற செல்லும் தருணங்களிலும் அதனைக் கூட ஏற்றுக் கொள்ளாத மனநிலையில் உள்ள ஆதிக்க சாதியினரின் ஆணவத்திற்கு அடிபணியும் காட்சியிலும் தன் மக்களுக்கு உதவிகளை செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் ஏற்படும் தருணத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவருக்கான அரசியல் ஞானத்தை ஏற்படுத்தும் ஞானியாக வட்டார வளர்ச்சி அதிகாரி கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.

அனுபவம் மிக்க பக்குவமான அரசு அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து கதையை காப்பாற்றுகிறார் சமுத்திரக்கனி. இவருடனான சந்திப்பிற்கு பிறகு தான் அம்பேத்குமார்,  ”ஆள்றதுக்கு தான் அதிகாரம் தேவைனு நெனச்சிட்டு இவ்ளோ நாள் ஒதுங்கியே இருந்தோம்.

இப்போதான் தெரியுது.. இங்கே வாழுறதுக்கு அதிகாரம் தேவைன்னு..” எனும் வசனத்தை பேசி, இந்த படைப்பின் அழுத்தத்தை மேலும் வீரியமாக்குகிறார்.

இட ஒதுக்கீடு தனி சுடுகாடு பி சி ஆர் சட்டம்  கல்வியின் முக்கியத்துவம் என பல விடயங்களை இயக்குநர் பேசியிருப்பது நன்றாக இருந்தாலும், அவை வலிந்து திணிக்கப்பட்டது போன்ற உணர்வைத் தான் ஏற்படுத்துகிறது

தமிழக ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் அம்மக்கள் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களிடத்தில் உண்மையான அதிகாரம் வழங்கப்படுவதில்லை என்ற யதார்த்தமான உண்மையை முகத்தில் அடித்தார் போல் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

ஆனால் இதை மட்டுமே சொல்லி இருப்பதால் திரைக்கதையில் போதாமை ஏற்படுகிறது. இதனால் பார்வையாளர்களுக்கு அயர்ச்சியும் உண்டாகிறது.

அம்பேத்குமாரின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை சுருதி பெரியசாமி நன்றாக நடித்திருந்தாலும் அவருக்கான காட்சிகளில் அழுத்தமோ, முக்கியத்துவமோ இல்லாததால் கவனத்தைக் கவர தவறுகிறார்.

படத்தின் முதல் பாதியில் இருந்த பல சுவாரசியமான திருப்பங்கள் இரண்டாம் பாதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இரண்டாம் பாதியில் வழக்கமான காட்சிகளும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையிலும் திரைக்கதை பயணிப்பதால் ஒரு கட்டத்தில் அடுத்து என்ன? வேறு என்ன? என்ற வினாவிற்கு பதில் இல்லாததால் சோர்வு ஏற்படுகிறது.

அரசியல் அதிகார பகிர்வு குறித்த யதார்த்தமான விடயத்தை நந்தன் பேசி இருந்தாலும் இந்த டிஜிட்டல் படைப்பை பார்வையாளர்கள் காண்பதற்கு இசை அமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை பெரும் உதவி செய்திருக்கிறது.

நந்தன் – ‌ முழுமைப் பெறாதவன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More