புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இலங்கையை மாற்றும் கல்வி முறையை தயாரிக்க வேண்டும் | பிரதமர்

உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இலங்கையை மாற்றும் கல்வி முறையை தயாரிக்க வேண்டும் | பிரதமர்

4 minutes read

கல்வித்துறை அரசியலாகிவிட்டது. தற்போது சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லை. கல்வியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது. இலங்கையை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக மாற்றும் கல்வி முறையை தயார் செய்ய வேண்டும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வுகளைத் தேடும் அதே வேளை சிறந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். இது ஒரு கூட்டுப் பயணம். ஒரு கட்சியோ, ஒரு அரசாங்கமோ மாத்திரம் அதை செய்ய முடியாது. அதற்கு மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐந்து வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள 396 தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்வொன்று  கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் பாடசாலை நிதி முகாமைத்துவம் தேசிய பாடசாலைகளின் நிர்மாணப் பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் தேசிய பாடசாலைகள் மேற்பார்வையின்போது இனங்காணப்பட்ட பொதுவான விடயங்கள் உட்பட தேசிய பாடசாலைக் கிளையினால் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மறுமலர்ச்சி யுகம் – வளமான நாடு நம் அனைவருக்கும் அழகான வாழ்க்கை என்ற இந்த தொலைநோக்கை யதார்த்தமாக்குவதற்கு கல்வியின் முக்கியத்துவத்தை இங்குள்ள அதிபர்கள் நன்கு அறிவார்கள். அரசாங்கம் என்ற வகையில் கல்விக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழிகாட்டுதலையும் வழங்க நாம் தயாராக உள்ளோம்.

கல்வி என்பதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது அறிவை மட்டும் வழங்குவதன்று. அதையும் தாண்டிய ஒரு விரிந்த தொலைநோக்கு கல்வியில் உள்ளது. தொழிலுக்காக மட்டுமின்றி இந்த நாட்டைப் பொறுப்பேற்கக்கூடிய, இந்த நாட்டை மாற்றக்கூடிய, இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எமது கல்விக் கொள்கையைத் தயாரித்துள்ளோம்.

ஒரு வளமான நாடு என்பதன் மூலம் எமது அரசாங்கம் நாடுவது பொருளாதார அடிப்படையில் மட்டும் வளமான நாடாக இருப்பதையல்ல. கலாசாரம், ஒழுக்கப் பெறுமானங்கள் மற்றும் மனப்பாங்குகளுடன் அனைத்து அம்சங்களிலும் நாம் வளம் பெற வேண்டும் என்பதாகும்.

இத்தகைய சமூகத்தில் நாம் அனைவரும் அழகான வாழ்க்கையை வாழ முடியும். நாம் மறுமலர்ச்சி யுகம் என்று கூறுவது, இந்த நாட்டுக்கு ஒரு புதிய ஆரம்பம் தேவை என்பதையே ஆகும்.

ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் நவீன உலகில் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய பிரஜைகளை நாம் உருவாக்க வேண்டும். நாம் முன்மொழிந்துள்ள  கல்விக் கொள்கை இந்த அபிலாஷைகளை அடைவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

தற்போது சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லை. கல்வியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது. விரக்தியான நிலையே காணப்படுகிறது. தற்போதுள்ள கல்வி முறையில் பிள்ளைகள் பெற்றோர்கள் மற்றும் சமூகம் திருப்தி அடைகின்றனரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

திட்டமிட்டபடி பரீட்சையை நடத்த முடியுமா? பரீட்சை பெறுபேறுகள் பற்றி நீங்கள் நம்பிக்கையோடு இருக்க முடியுமா? கல்வித்துறையில் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியுமா? பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும் முறையில் சமுதாயம் நம்பிக்கை வைக்க முடியுமா? நம்பிக்கையை இழக்கும் வகையில் இந்த செயல்முறை மற்றும் முறைமை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசியலாகிவிட்டது.

இங்கு இந்த கல்வி முறைமையில் பணியாற்றும் உங்களிடம் தவறில்லை. காலாகாலமாக கல்வியில் கவனம் செலுத்தாமை கல்வியின் முக்கியத்துவம் ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வியே அடிப்படைப் பங்காற்ற வேண்டும் என்ற பொறுப்பில் இருந்து படிப்படியாக அரசு விலகியதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கல்வி அரசியல்மயமாகியுள்ள காரணத்தினால் இத்துறையில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். உங்கள் தொழில்முறை கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் கல்வி முறையை கட்டியெழுப்ப நாம் விரும்புகிறோம். உங்களது பொறுப்பை சுதந்திரமாக நிறைவேற்றத் தேவையான சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

ஒவ்வொரு அரசாங்கமும் கல்வி சீர்திருத்தங்கள் பற்றி பேசின. அந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலமே கல்வி முறை மிகவும் சிக்கலான நிலைமையை அடைந்துள்ளது. கல்வி முறையின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் ஒழுங்குபடுத்தல். ஒரே இடத்தில்  இல்லாதிருப்பதாகும். கல்வி அமைச்சு ஒன்றை கூறுகிறது. கல்வி ஆணைக்குழு இன்னொன்றை கூறுகிறது.

சில நேரங்களில் ஜனாதிபதி அலுவலகம் மேலும் ஒன்றை கூறுகிறது. எந்தக் கொள்கைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், எந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தெளிவின்மை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த தெளிவற்ற நிலையின்றி நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டாகச் செயற்படுத்தக்கூடிய ஒரு கொள்கையை நாங்கள் நடைமுறைப்படுத்த விரும்புகிறோம்.

எங்கள் அரசியல் இயக்கம் கலந்துரையாடல்களுக்கு எப்போதும் தயாரகவுள்ளது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கத் தயாராகவுள்ளது. இந்த நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வுகளைத் தேடும் அதே வேளையில் சிறந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். மீண்டும் நெருக்கடிக்குள் செல்லாமல் இந்த நாட்டை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக மாற்றும் கல்வி முறையை தயார் செய்ய வேண்டும்.

நாட்டுக்குத் தேவையான மதிப்புமிக்க பிரஜைகள் கல்வி முறையின் மூலமே உருவாக்கப்படுகின்றனர். அரசாங்கம் என்ற வகையில் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறோம். இது ஒரு எண்ணக்கரு மட்டுமல்ல, அதற்குத் தேவையான நிதிப் பங்களிப்பையும் எமது அரசாங்கம் வழங்கும்.

அதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று எமது கொள்கைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் போது இதை ஒரேயடியாக செயற்படுத்துவது கடினம் என்றாலும் அந்த இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். எமது வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்படும்.

குடும்பத்தின் பொருளாதார நிலை பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கு தடையாக இருக்கக்கூடாது. பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் செலவிடும் தொகை மேலும் மேலும் அதிகரித்துள்ளது. இலவசக் கல்வி உள்ள நாட்டில் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இலவசக் கல்வி இருந்தாலும் கல்விக்காக பெற்றோர்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

இலவசக் கல்வி மூலம் நாம் எதிர்பார்த்த முக்கிய விடயம் நடக்கவில்லை. அதாவது பிள்ளைகளின் கல்விக்கு தமது வருமானம் ஒரு காரணியாக இருக்கக் கூடாது என்ற உண்மை இல்லாமல் போய்விட்டது. இலவசக் கல்வி மூலம் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான புத்திஜீவிகள் உருவானார்கள். இதனால் பலர் உலகின் மிக உயர்ந்த இடங்களை அடைய முடிந்தது. ஆனால் மீண்டும் தரமான கல்வியைப் பெறுவதற்கு பணம் ஒரு காரணியாக மாறியுள்ளது.

எனவே பாடசாலைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மாற்ற வேண்டும். பிள்ளைகளின் கல்விக்காக செலவிடப்படும் பணத்தின் பெரும் சுமையிலிருந்து பெற்றோர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பிள்ளை கல்விக்காக பாடசாலைக்கு அனுப்பப்பட்டவுடன் பெற்றோர்களின் சுமை குறைக்கப்பட வேண்டும். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.இந்த இலக்குகளுக்கு பங்களிக்கும் கல்வி நிர்வாகம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வசதிகள் மற்றும் தேவையான பயிற்சிகளை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தப்படும்.

உலகின் தலைசிறந்த கல்விக் கட்டமைப்பு இங்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது உங்கள் மூலமே செயற்படுத்தப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கு முடியாத தடைகளை நீக்குவது எங்களின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். இது ஒரு கூட்டுப் பயணம். ஒரு கட்சியோ ஒரு அரசாங்கமோ மட்டும் அதை செய்ய முடியாது. அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More