இலங்கைக்கான அவுஸ்திரேலிய துணை உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் மற்றும், முன்னாள் வடமாகாணசபைஉறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் புதன்கிழமை (02) முல்லைத்தீவு- கள்ளப்பாட்டிலுள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது இலங்கைக்கான அவுஸ்திரேலிய துணைத்தூதுவர் லலிதா கபூர் ரவிகரனை எதிர்கால பாராளுமன்ற உறுப்பினர் என விளித்திருந்தார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பாக வன்னித் தேர்தல் தொகுதியில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் போட்டியிடுவார் எனப் பரவலாகப் பேசப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே இன்று இடம்பெற்ற சந்திப்பில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய துணைத்தூதுவர் ரவிகரனை மேற்கண்டவாறு விளித்திருந்தார்.
மேலும் குறித்த சந்திப்பில் அரசியல் கைதிகளின் விடுவிப்பு, வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்குரிய தீர்வு, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் நிலமைகள், தமிழர்களின் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு, தமிழர் பகுதிகளில் தற்போது அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, அத்துமீறிய இந்திய மீனவர்களின் செயற்பாடுகள், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.