செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம் | யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்

புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம் | யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்

6 minutes read
புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம் !
சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் முடிவுகள் வாக்களிப்பின் வெவ்வேறு பரிமானங்களையும், மக்களின் அரசியற் சிந்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து முன்னெடுக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு என்பன கனிசமானளவு தமிழ் மக்களை அணி திரட்டுவதில் முன்நகர்ந்துள்ளமை தமிழ் அரசியற்பரப்பில் புதிய திருப்பம். கடும்போக்கு சிங்கள – பௌத்த பேரினவாதத்தை வெளிப்படுத்தி தெற்கில் வெல்லக் கூடியவராக கணிக்கப்படும் பேரினவாதத்தின் முகவர் வென்றுவிடக் கூடாதென்ற அச்ச நிலையானது பிறிதொரு பேரினவாதத்தின் முகவரிற்கு வாக்களிப்பதற்கு மக்களை வழிநடத்தியிருப்பதும் வெள்ளிடைமலை.
சிங்கள – பௌத்த பேரினவாதம் முழுவீச்சில் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிங்கள மக்கள் மாற்றமொன்றினை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். எனினும் சிங்கள மக்களின் வாக்களிப்பு முறைக்கு நேர்மாறாக வாக்களித்ததன் மூலம் எம்மிடையே நிலவுவது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல என்பதை தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். 15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடம் நிலவும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தெற்கில் ஏற்பட்டுள்ள ஊழலற்ற ஆட்சி, இளையோர்களின் அரசியற் பங்கேற்பு உள்ளிட்டவைகளின் தாக்கம் உணரப்படாமலுமில்லை. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தை சமூக, பொருண்மிய, பண்பாட்டுத் தளங்களில் மக்களுக்கானதாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் எந்த முனைப்பையும் காட்டாத தமிழ்த் தேசிய முலாம் பூசிய அரசியல்வாதிகள், அரசியற் கட்சிகள் மீதான பெரும் அதிருப்தி வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருகின்றது.
தமிழ்த் தேசியத்தை மக்களின் இருப்புக்கானதாக மாற்றியமைப்பதற்கு உளச்சுத்தியோடு முனைந்து விடாத தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் தமிழ்த் தேசியத்தை மக்களின் வாழ்வியலில் இருந்து அகற்றி, கட்சிகளின் தேர்தல் கால கோசங்களாக மாற்றியமைத்துள்ளன. தேர்தலில் போட்டியிடுவதையே இலக்காகக் கொண்ட இவர்களின் இயலாமைகள், தமிழ் மக்களின் கூட்டு முகவராண்மையினை தகர்த்தெறிவதிலும் மக்களின் உயிர்வாழ்தலுக்கு அவசியமற்றதொன்றாக தமிழ்த் தேசியத்தைக் கட்டமைப்பதிலும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் புலனாய்வுத்துறை உள்ளிட்ட சிறிலங்கா அரச இயந்திரத்திற்கு பெருமளவு துணைபுரிந்துள்ளன.
புதியவற்றை உள்ளீர்த்து முற்போக்குக் கருத்தியலாய்ப் பரிணமிக்கட்டும் தமிழ்த் தேசியம் !
தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஏற்பட்ட அலையில் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளையோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கரிசனை தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் தவிர்த்துப் புறமொதுக்க முடியாதவொன்றாகும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகும்.
தமிழ் அரசியலானது முன்நகர முடியாமைக்கு அகவயமான முற்போக்கு மாற்றங்களை காலத்திற்குக் காலம் மேற்கொள்ளத் தவறியமையும், எம்மிடையே நிலவும் சில போதாமைகளுமே காரணம். அவ்வாறிருக்கையில் மக்கள் மத்தியில் நிலவும் சில முன்மொழிவுகளை தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளை நோக்கி முன்வைக்கின்றோம்.
1. சமூக, பொருண்மிய, அரசியல், கல்வி, பண்பாடு, சூழலியல் தளங்களிலிருந்து தமிழ்த் தேசியத்தில் முற்போக்கான, ஆழமான, பரந்த பார்வை கொண்ட செயற்பாட்டாளர்களை, துறைசார் வல்லுனர்களை வேட்பாளர்களாக முன்நிறுத்த முன்வர வேண்டும்.
2. இதுவரை காலமும் இரண்டு தடவைகளுக்கு மேல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றவர்கள் தேர்தல் அரசியலிற்கு ஓய்வு கொடுத்து மக்கள் அரசியற் தளத்தில் செயற்பட வேண்டும்.
3. 40 – 50 சதவீதத்திற்குக் குறையாமல் இளைவர்களிற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
4. தமிழ்த் தேசியம் முற்போக்கானதாக நிலைமாற்றம் கொள்வதற்கு பெண்கள், சிறுவர்கள், மாற்றுப்பாலினத்தவர்கள், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் உள்ளிட்டோரை பிரதிநிதித்துவம் செய்யக் கூடியவர்களுக்கு வாய்ப்பளித்தல் கட்டாயக் கடமையாகும்.
5. வேட்பாளர் தெரிவின் போது உணர்ச்சி நிலையிலிருந்து மட்டும் அணுகுபவர்கள் தவிர்க்கப்பட்டு, தமிழ்த் தேசியத்தை உணர்வுடன் கூடிய அறிவுசார் தளத்தில் முன்னெடுக்க கூடியவர்களிற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
6. தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தில் தேர்தலில் தோற்றவர்களிற்கு வாய்ப்பளித்தல் மக்களாணைக்கு எதிரானதாகும். மேலும் கட்சி உறுப்பினர்கள் என்று பாராமல், கற்றறிந்த செயற்பாட்டாளர்களிற்கு வாய்ப்பளிப்பதற்கு முன்வர வேண்டும்.
தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளை அகவயமான முற்போக்கு மாற்றங்களை நோக்கித் தூண்டுவதும், அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதிலுமே உண்மையான மாற்றம் தமிழ்த் தேசியப் பரப்பில் தங்கியுள்ளது. இளையோருக்கான பிரதிநிதித்துவம் வழங்குவதில் தனியே வாக்குகளைத் திரட்டக் கூடியவர், கவர்ச்சிகர – பிரமுகர் அரசியல் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்குதல் அல்லது கற்றறிந்தவர் என்று தமிழ்த் தேசிய விடுதலைக்கு அப்பால் சிந்திக்க கூடிய கொழும்பு மைய மேட்டுக்குடி அரசியற் பண்பாட்டிற்குப் பழக்கப்பட்டவர்களை முன்னிறுத்துதல் என்பவவும் பழைய குருடி கதவைத் திற என்பதற்குச் சமனானது.
கிழக்கில் தமிழர் இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் காத்திடுவோம் !
தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஏற்கனவே இல்லாமற் போய்விட்ட அம்பாறை மற்றும் இல்லாமற் போகக் கூடிய திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழ்த் தேசியக் கட்சிகள் கட்சி வேறுபாடுகள் கடந்து போட்டித் தவிர்ப்பு, விட்டுக் கொடுத்தல் அல்லது இணைந்து போட்டியிடக் கூடிய பொருத்தமான பொறிமுறைகளின் ஊடாக அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தையாவது காத்திட முன்வர வேண்டுகின்றோம்.
வடக்கு – கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் போட்டியிட முயற்சிப்பதென்பது தமிழ்த் தேசிய அரசியலை வலிந்து தூக்கிலிடுவதற்கு ஒப்பானது. இதுபோன்ற நகர்வுகள் தமிழ்த் தேசிய இறைமை அரசியலை அடையாள அரசியலிற்குள் சுருக்கும் முயற்சிகளாகும் என்பதைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். இது தாயகத்தில் நிலவும் உரிமைசார் போராட்டங்கள் ஒவ்வொன்றினையும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலிற்குட்பட்டு ஒரு நாடு – ஒரு தேசம் நீரோட்டத்தினுள் வலிந்து இழுத்துச் செல்லும் நுண் அரசியலாகும்.
வடக்கு – கிழக்கிற்கு வெளியில் போட்டியிடத் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் முயல்வதென்பது தாயக நில ஒருமைப்பாட்டிற்கு அப்பாலானது என்பதோடு, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்காகவேயன்றி வெறெதற்குமல்ல. இந்த முயற்சி தாயகத்திற்கு வெளியிலுள்ள ஈழத்தமிழர்களின் உரிமைசார் நட்பு சக்திகளை நாம் இழப்பதற்கு வழிகோலும் என்பதனையும் எச்சரிக்கையுடன் பதிவு செய்கின்றோம்.
தமிழ்த் தேசியப் போலிகளை தமிழ் மக்கள் இனங்கண்டு புறமொதுக்க வேண்டும் !
தமிழ் மக்களை அணி திரட்டும் நோக்கில் குடிமக்கள் அமைப்புக்கள் (Civil Society) மற்றும் சில அரசியல் கட்சிகளால் கூட்டாக இணைந்து நிறுத்தப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுதல், கடந்த கால வரலாற்றுத் தவறுகளை மீள மேற்கொள்வதைத் தவிர்த்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டே நிறுத்தப்பட்டார். தமிழ்ப் பொது வேட்பாளரிற்கு அவரை முன்நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பிற்கு அப்பால் பல குடிமக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியற் கட்சிகள் தேசத்திரட்சிக்காக பணியாற்றின என்பதோடு, மக்களும் தமிழர் தேசம் என்ற அடிப்படையிலே தங்கள் வாக்குகளை அளித்தார்கள் என்பதை யாரும் மறுக்கவியலாது.
பொது வேட்பாளரிற்காக வழங்கப்படும் கட்சிச் சின்னம் அடுத்து வரும் சில தேர்தல்களிற்கு பயன்படுத்தக் கூடாது எனும் குடிமக்கள் அமைப்புக்களின் அறம் சார் நிபந்தனைகளை அரசியற்கட்சிகள் எவையும் ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் சுயேட்சையாக வேட்பாளர் களமிறக்கப்பட்டார் என்பது அறியக்கூடியதாகவுள்ளது. எனினும் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு உடன்பட்ட தரப்புக்களில் குடிமக்கள் சமூகங்களினதும் (Civil Society) ஏனைய கட்சிகளினதும் உடன்பாடுகள் ஏதுமின்றி தங்களிற்கிருந்த அறம்சார் கடப்பாட்டினை மீறி மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் கூட்டணியொன்று தேர்தல் ஆணைக்குழுவில் பொது வேட்பாளரின் சின்னத்தினைக் கோரிப் பெற்றுள்ளது. குடிமக்கள் சமூகங்களின் கூட்டிணைவிற்குள் (ஊiஎடை ளுழஉநைவல) செயற்படும் சிலர் தங்கள் சிந்தனைகளோடு குடிமக்கள் சமூகத்தினரை நகர்த்திச் செல்ல முயற்சிப்பது வருந்தத்தக்கது. தொடர்ந்தும் மக்களை மடையர்கள் என்றெண்ணிச் செயலாற்றும் இதுபோன்ற அறம் பிழைத்தவர்களை மக்கள் நாங்கள் தோலுரித்தல் அவசியமாகும்.
தமிழ் மக்களை தேசமாகத் திரட்டுவதிலும் ஒரு சில அரசியற் கட்சிகளினதும் குடிமக்கள் அமைப்புக்களினதும் உழைப்பினால் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட சின்னத்தினைக் கைப்பற்றுவதன் ஊடாக மக்களின் இந்தத் தேசத்திரட்சியைக் கேலிக்குரியதொன்றாக்கியுள்ளதோடு, தொடர்ந்தும் மக்களையும் உழைத்த தரப்புக்களையும் ஏமாற்ற முயலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்த தமிழ்த் தேசியப் போலிகளை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். இது போன்ற தமிழ்த் தேசியப் போலிகள் மக்களிடையே தமிழர் தேசத்திரட்சியின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதோடு, கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தையும் தகர்த்தெறிந்து தென்னிலங்கைக் கட்சிகளை நோக்கி மக்களை நகர்த்துவதற்கு தமிழ்த் தேசியத்தின் பெயரால் முயன்று கொண்டிருக்கின்றன.
சில தமிழ்த் தேசியப் போலிகள் அரச தலைவர் தேர்தலில் ஒரு பக்கம் தென்னிலங்கைக் கட்சிகளுடன் இருட்டு ஒப்பந்தமும்,  மறுபக்கம் தமிழ் மக்களின் வாக்குகளிற்காக பொது வேட்பாளர் தரப்புடன் இணைந்து கொண்டிருந்தமையினையும் யாரும் அறியாமலில்லை. அதற்காக உழைக்காத தரப்புக்கள் அரசியல் சூழ்ச்சிகளினால் இன்று பொது வேட்பாளரின் சின்னத்தைக் கைப்பற்றுவதனூடாக நாடாளுமன்றத் தேர்தலில் மக்களாணை பெற பகற்கனவு காணுகின்றன. பொது வேட்பாளரின் சின்னம் தற்பொழுது அவரை நிறுத்திய தரப்புக்களுடையதல்ல, வேறு கட்சிகளினுடையது என்பதனை அனைவரிடமும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.
புதிய அரசியற் பண்பாட்டினால் மேலேழட்டும் தமிழர் தேசம் !
தமிழ் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் மயப்படுத்தப்படாமையும் தேசமாய் அணி திரட்டப்படாமையுமே அனைத்துத் தளங்களிலும் பலவீனப்பட்ட மக்களாய்ப் போகக் காரணம். தமிழ் மக்களின் அரசியல் தனியே அடையாளத்திற்கானதன்று ; அது இறைமைக்கானது. தமிழ்த் தேசியம் என்பது வாழ்க்கை முறை, அதனை தேர்தல்க் கால வெற்றுக் கோசமாக மாற்றியமைத்தது சிங்கள – பௌத்த நிகழ்ச்சி நிரலிற்கு துணை போன தமிழ் அரசியற் கட்சிகளே!
நாங்கள் எமது தாயகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல் மற்றும் பொருண்மிய வளங்களை ஒன்று திரட்டி தற்சார்புப் பொருளாதாரத்தை முன்னெடுக்காமையும், ஆதிக்க சக்திகளையும் பகை முரண்களையும் கையாள்வதில் உரிய தந்திரோபாயங்களை வகுக்காமையுமே அவர்களிடமே சரணாகதியடைந்த தமிழ் அரசியலினால் இதுவரைகாலமும் விளைந்ததொன்று.
அகவயமாக முற்போக்கு அம்சங்களைக் கொண்ட புதிய மாறுதல்களிற்குத் தமிழ்த் தேசிய அரசியல் தயாராக வேண்டிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் கூட்டு முகவராண்மையைச் சிதைப்பதற்கு தமிழ்த் தேசிய போலிகள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் நாங்கள் அனைவரும் தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டினை அறிவுபூர்வமாக விழிப்புடன் அணுகுவதற்கு முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகமாக அனைவரையும் சமூகப் பொறுப்புடன் வேண்டி நிற்கின்றோம்.
நன்றி
(ஊடக அறிக்கையின் முழு வடிவம் (PDF) இந்த மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ளது.)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More