ஒவ்வொருநாளும் செய்தித்தாளில்
இரத்த வெள்ளத்தைப் பார்க்கிறேன்
உணவுக்கு கையேந்தும் சிறுவர்களை காணுகிறேன்.
உலகச் செய்திகள் பக்கத்தில்
வெடித்துச் சிதறும் குண்டுகளின்
வெளிச்சத்தில்
என் இனத்தின் துன்பமும் தெரிகிறது.
போரின் நரகத்தை கடந்துவந்த
பாதைகளை செய்திகள்
ஞாபகப்படுத்துகின்றன .
குழந்தைகளின் கண்ணீரைக் காணும் போதெல்லாம்
என் குருதி கொப்பளிக்கின்றது .
அதிகாரமற்ற என் கரங்கள் கட்டுண்டு கிடக்க
என் வார்த்தைகள் கோபத்தில் தெறிக்கின்றன.
அதிகார மோகத்தில் மண் கொண்ட உலகம்
மாண்டு போவதை தடுக்க
இனி எந்தக் கடவுள்களும் பிறக்கப்போவதில்லை.
நாம் புத்தியுள்ளவர்கள் என்றெண்ணிய
முட்டாள்களே இந்த உலகத்தை அழிக்கிறார்கள்
அவர்கள் இனி மாறப் போவதுமில்லை
உலகம் மீளப் போவதுமில்லை
வட்டக்கச்சி வினோத்