தெற்கு காசாவின் ரபா நகரில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று (10) நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 54 பேர் காயமடைந்துள்ளனர்.
பலஸ்தீன செம்பிறை சங்க தலைமையகத்திற்கு அருகில் இருக்கும் ருபைதா பாடசாலை மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தச் சங்கத்தின் அவசர மருத்துவக் குழு அங்கு விரைந்துள்ளதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருப்பதோடு காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
காசா போர் வெடித்தது தொடக்கம் அங்கு இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலைகள் மற்றும் வசதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹமாஸ் பயன்படுத்தும் கட்டடங்களைத் தாக்குவதாக, இவ்வாறான தாக்குதல்களை இஸ்ரேல் நியாயப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.