செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சிங்கள மக்களும் நேசிக்கும் திலீபன் : இனி எம் போராளிகளுடன் பேசுங்கள் | தீபச்செல்வன்

சிங்கள மக்களும் நேசிக்கும் திலீபன் : இனி எம் போராளிகளுடன் பேசுங்கள் | தீபச்செல்வன்

5 minutes read

தியாக தீபம் திலீபன் பற்றிய பாடல் ஒன்றை பெருமளவான சிங்கள மக்களும் இளைஞர்களும் கேட்டு வருகிறார்கள். 2009 இனப்படுகொலைப் போர் முடிந்த தருணத்திலேயே திலீபனுக்காக சில சிங்களக் கவிஞர்கள் கவிதைகளை எழுதியிருந்தார்கள்.

திலீபன் தமக்காகவும் தியாக நோன்பிருந்தார் என்ற பார்வை பெருமளவான சிங்கள உறவுகளிடையே இருக்கிறது உண்மையில் ஈழ விடுதலைப் போராளிகள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களல்ல, அவர்கள் ஒட்டுமொத்த இலங்கைத் தீவுக்கும் காவலாக இருந்தார்கள்.

இதனை கடந்த காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் பல சிங்கள மக்களே ஒப்புக் கொண்டதையும் நாம் கண்டிருக்கிறோம்.

திலீபனின் நினைவேந்தல் ஊர்தி

இன்று தியாக தீபம் திலீபனின் வீரவணக்கப் படத்தை தாங்கியபடி ஊர்தி பவனி ஒன்று தமிழர் தேசத்தை வலம் வருகிறது கண்ணீருடன் பூக்களை மக்கள் காணிக்கை ஆக்குகிறார்கள்.

ஆற்றாமையுடன் பெரு மூச்சையும் அஞ்சலியாக செலுத்துகின்றனர் குறிப்பாக பெருந் திரளான இளையவர்கள், பள்ளி மாணவர்கள் எம் தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு மலர்களைத் தூவி அஞ்சலிக்கின்றனர்.

திலீபன் எந்த தலைமுறைகளாலும் மறக்க முடியாத போராளி. திலீபன் எந்த தலைமுறையும் மறந்து விடக்கூடாத மகத்துவமான தியாகி.

சிங்கள மக்களும் நேசிக்கும் திலீபன் : இனி எம் போராளிகளுடன் பேசுங்கள் | Martyr Deepam Dileepan Died On Hunger Strike

தியாக தீபம் திலீபன் தலைமுறைகள் கடந்து நின்று போராடுகிற ஒரு போராளி இன்றைக்கும் திலீபனை பற்றி மிகச் சில வருடங்களின் முன்னர் பிறந்த குழந்தைகள் கூட திலீபனைப் பற்றி விசாரணை செய்யத் துவங்கியுள்ளனர்.

என் பள்ளி மாணவர்கள் திலீபனின் நினைவு நாட்கள் வந்தாளே அவரைப் பற்றியே கேட்டுக் கொண்டிருப்பார்கள் ஈழம் இனப்படுகொலைக்குப் பிந்தைய சூழ்ச்சியில் சிக்கியுள்ள நிலம்.

இங்கே கட்டமைக்கப்பட்டுள்ள வாழ்வும் கையில் தரப்பட்டுள்ள கருவிகளும் எதற்காக என்பது நமக்குத் தெரிந்ததுதான். நம் கையில் உள்ள புத்தகங்களில் இல்லாத கதைகளை மாணவர்கள் தேடுகிறார்கள் நம் காலம் மிகுந்த சூழ்ச்சிகளால் ஆனது என்ற போதும் நம் குழந்தைகள் அதனைக் கடந்து வரலாற்றையும் பெருமாந்தர்களையும் தேடுகிறார்கள்.

யார் இந்தப் பார்த்தீபன் ?

இராசைய்யா பார்த்திபன் எனப்படும் லெப்டினன் கேணல் திலீபன், நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஊரெழுவில் பிறந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவராக இருந்த திலீபனின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவர்.

அவர் கருத்தியல் ரீதியாக ஆழமான புரிதல் கொண்ட ஒரு போராளியாக இருந்தார் பால்நிலை மற்றும் சமூக சமத்துவக் கண்ணோட்டம், பிற்போக்குத்தனங்களை உடைக்கும் முற்போக்குத் தன்மை கொண்ட திலீபன் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஜனநாயக முகமாகும்.

சிங்கள மக்களும் நேசிக்கும் திலீபன் : இனி எம் போராளிகளுடன் பேசுங்கள் | Martyr Deepam Dileepan Died On Hunger Strike

திலீபனின் முகம் மாத்திரம் ஈர்ப்பானதல்ல. அவர் ஆற்றிய உரைகளும் ஈழ மக்களை இன்றும் நம்பிக்கையும் எழுச்சியையையும் கொள்ளச் செய்பவை. ஆயுதப்போராட்டத்தில் இணைந்த திலீபன் அகிம்சையைக் கையில் எடுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உன்னதமான ஜனநாயகப் போக்கினை இவ் உலகிற்கு வெளிப்படுத்தினார்.

செப்டம்பர் 15, 1987. இந்திய அரசிற்கு எதிராக தனது உண்ணா நோன்புப் போரை ஆரம்பித்த அவர் வலியுறுத்திய ஐந்து அம்சக் கோரிக்கைகள் இன்றும் ஈழ நிலத்தின் கோரிக்கைகளாக இருக்கின்றன.

உயிர்த்திருக்கும் கோரிக்கைகள்

  1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
  2. சிறைக் கூடங்களிலும் இராணுவ காவல்துறை தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
  3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
  4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.
  5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக  காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பனவே அக்கோரிக்கைகளாகும்.

சிங்கள மக்களும் நேசிக்கும் திலீபன் : இனி எம் போராளிகளுடன் பேசுங்கள் | Martyr Deepam Dileepan Died On Hunger Strike

திலீபன் அன்றைக்கு முன்வைத்த கோரிக்கைகள் என்பது இன்றும் உயிர்ப்போடுதான் இருக்கின்றது. தமிழர் தாயகம் மீதான ஆக்கிரமிப்பு என்பது எந்த சூழலிலும் நிறுத்தப்படாமல் தொடர்கின்றது. இன்றைக்கு பொருளாதாரத்தின் பெயரில் அவசரகாலச் சட்டமும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

தமிழ் அரசியல் கைதகளின் விடுதலை என்ற கோரிக்கைக்கு 37 ஆண்டுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க காரணங்களின்றி சிறைகளில் அடைத்து வைக்கின்ற கொடுமை, ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கை இன்றும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.

உயிர்நீத்த கணங்கள்

திலீபன் முன்வைத்த, ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளாமல், சிங்கள அரசுக்கு துணை செய்தது, அதன் இன நில அழிப்புச் செயல்களுக்கு ஒத்தாசை புரிந்தது.

தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை  தொடங்கிய போது, ஒட்டு மொத்த ஈழமும் பசியிருந்தது. நல்ல முடிவு வரும், திலீபன் மீண்டு வருவார் என்று காத்திருந்தது. தன்னை உருக்கி உருக்கி தமிழர்களின் கோரிக்கையை வலுப்படுத்தினார் திலீபன்.

மெலிந்த தேகம், ஈர்க்கும் புன்னகை, புரட்சிக் குரல், இந்திய அரசின் துரோகத்தால்  ஈழ மண்ணில் சாய்ந்தது. உண்ணா நோன்பின் 12ஆவது நாள், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு ஈழ மண் பெற்றெடுத்த ஒப்பற்ற விடுதலைப் போராளி திலீபன், தன்னுடைய 23 ஆவது வயதில் வீர மரணம் எய்தினார்.

சிங்கள மக்களும் நேசிக்கும் திலீபன் : இனி எம் போராளிகளுடன் பேசுங்கள் | Martyr Deepam Dileepan Died On Hunger Strike

திலீபன் அவர்களின் இன்னொரு அடையாளம் அவர் மாணவர் என்பது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர். 23 வயதில் ஒரு மாணவன் எத்துனை ஆழமான அறிவுடன் அரசியல் விழிப்புணர்வுடன், போராட்ட எழுச்சியுடன் தன்னை ஆகுதி ஆக்கியுள்ளார் என்பதை இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் சிந்திக்க வேண்டும்.

திலீபனின் வாழ்வும் போராட்டமும் எந்த புத்தகத்திலும் படிக்க முடியாத அறிவையும் நம்பிக்கையையும் எழுச்சியையும் தருகிறது. சுயநல வாழ்வு என்பது எல்லாவற்றிலும் புரையோடிப் போயிருக்கும் இன்றைய காலத்தில் திலீபனின் தியாகம் என்பது மகத்துவான காவியமாக நம் தலைமுறைகளின் முன்னால் எப்போதும் நிலைத்திருக்கும்.

தேவிடுதலையே மெய்யான அஞ்சலி

வெறுமனே மெழுகு திரிகளை ஏற்றி, தீபங்களை சுடர விட்டு மாலைகளை அணிவிப்பதை திலீபன் ஒரு போதும் விரும்பார். தன்னையே நெருப்பாக்கி, தன்னையே தீபமாக்கிய திலீபனிற்கு மெய்யான அஞ்சலி என்பது எம் தேச விடுதலையே.

தாயக மக்களின் விடியலும் சுதந்திரமும்தான் திலீபன் கனவு. அனைத்து விதமான விடுதலைகளுடன் கூடிய தேசமே தனது கனவு என்று அவர் முழங்கிய இளம்குரல் இன்னமும் எம் மண்ணில் கேட்கிறது.

சிங்கள மக்களும் நேசிக்கும் திலீபன் : இனி எம் போராளிகளுடன் பேசுங்கள் | Martyr Deepam Dileepan Died On Hunger Strike

அது திலீபன் அவர்களுக்குத் தீராப் பசியாக இருக்கும் இந்த மண்ணில் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்படுகிற காலத்தை நோக்கியே நம் போராட்டம் நிகழ்கிறது.

அதற்காக உழைப்பதும் உண்மையாக இருப்பதுவே திலீபனுக்கு செய்கின்ற மகத்தான அஞ்சலியாக இருக்கும். அந்த அஞ்சலி எனும் விடியலுக்காய் பார்த்தீபன் இன்னும் பசியுடனே இருக்கிறார். சிங்கள மக்கள் திலீபன் போன்ற எம் நிலத்தின் போராளிகளுடன் பேச வேண்டும். ஈழ விடுதலையின் அவசியத்தை அந்த வழியே உணர்த்தி நிற்கும் என்பதும் திண்ணம்.

தீபச்செல்வன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More