இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்திய விஜயம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட முக்கிஸ்தர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளது.
எவ்வாறாயினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டெல்லி விஜயத்தை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களின் பின்னரான இந்த விஜயமானது தெளிவான மக்கள் ஆணையை முன்னிறுத்தியுள்ளதால் இலங்கை – இந்திய உறவுகளின் எதிர்கால நலன்களில் முக்கியத்துவம் பெறுகிறது.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெறும்.
ஏனெனில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் அண்மைய இலங்கை விஜயத்தின் போதும் மாகாண சபை தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் கருத்துக்களை கூறி வருகின்றது.
1972 ஆம் ஆண்டிற்கு பின்னர் கொண்டுவரப்பட்ட நடைமுறையில் உள்ள இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பானது 22 தடவைகள் சீர்திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வில்லை. இருப்பினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம் செலுத்தியுள்ளது. எனவே டெல்லி பேச்சுகளில் புதிய அரசியலமைப்பு விடயம் கருத்தில் கொள்ளப்படும்.
மேலும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களின் எதிர்காலம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்திய தரப்பு பேச்சுக்களில் பங்கேற்கும்.
இதேவேளை இலங்கை கடல்பரப்பில் தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளும் டெல்லி பேச்சுவார்த்தைகளில் கவனத்திற்கு உட்படும்.
மறுபுறம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு இந்தியாவுக்கு எரிச்சல் ஊட்டும் விடயமாகவே உள்ளது. இதனாலேயே, இலங்கையுடன் சீனா நெருக்கமாகச் செயற்படுவதற்கும், சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைவதற்கு இந்தியா எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
2015 ஆம் ஆண்டிலிருந்து, இந்தியா பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இத்தகைய எதிர்ப்புகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது, சீன விவகாரமும் முக்கிய தலைப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.