செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விலகிச் செயற்பட்டவர்களைக் கட்சியில் இருந்து நீக்குவதாகத் தீர்மானிக்கவில்லை! – ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு

விலகிச் செயற்பட்டவர்களைக் கட்சியில் இருந்து நீக்குவதாகத் தீர்மானிக்கவில்லை! – ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு

2 minutes read

“கடந்த தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகிச் செயற்பட்டவர்களைக் கட்சியில் இருந்து நீக்குவதாக ஏகமனதாகத் தீர்மானிக்கவில்லை.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று நடைபெற்ற கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் இருந்தன. ஆனாலும், ஒரு விடயம் ஆராயப்பட்டது. தமிழரசுக் கட்சித்  தலைவரின் பதவி விலகல் கடிதம் தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. அந்தக் கடிதத்தை மாவை சேனாதிராஜா ஐயா அனுப்பியதன் பின்னர் பதவி விலகல் கடிதத்தில் இருந்து வாபஸ் பெறுவதாகச்  சொல்லியிருந்தார். மீண்டும் தலைவராக இருப்பதற்கான சம்மதத்தைத்  தெரிவித்து இருந்தார். அது தொடர்பாக எமது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இரண்டு கருத்துக்கள் இருந்தன. அதன் அடிப்படையில் அவர் பதவி வகிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும், கடிதம் கொடுத்ததன் பிரகாரம் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரு கருத்தும் இருந்தது.

ஒரு ஜனநாயகக் கட்சி என்ற அடிப்படையில் அந்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. தீர்க்கமான முடிவு எடுக்க முடியாத நிலையில் இரு தரப்பு கருத்துக்களும் இருந்தன. ஜனநாயக ரீதியாக இதனைப் பார்க்க வேண்டியிருந்தது.  இதனால் பதவி விலகலை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்திவைத்து மீண்டும் கூட்டத்தைக் கூட்டி தலைவர் யார் என்று முடிவெடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.

தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்தும் ஆராயப்பட்டது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பின்னடைவு பற்றி பேசப்பட்டது. இதற்குப் பதவி விலகல் ஒரு  காரணம் என்று சொல்லப்பட்டாலும் இன்னும் பல காரணங்கள் இருந்தன. அதனைச் சுயாதீனமான, நடுநிலையான ஆய்வு குழு மூலம் ஆராய்ந்து அறிக்கைப்படுத்திய பின்னர்தான் கருத்துக் கூற முடியும்.

ஒவ்வொருவரது கருத்துக்களும் சுயம் சார்ந்து இருக்கின்றன. ஆய்வுக் குழு மூலம் அதனை மேற்கொண்டால் அது பயன் உள்ளதாக அமையும்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் விடயம் முக்கியம் பெற்று இருந்தமையால வேறு விடயங்கள் குறித்து பேச முடியாது போனது. இதற்கு விரைவில் முடிவு எடுத்துவிட்டு தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்து பேச வேண்யுளளது.

கடந்த தேர்தலில் கட்சிகளில்  இருந்து விலகி தேர்தலில்  போட்டியிட்டவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்ற ஒரு கருத்தும் பேசப்பட்டது. சிலரது கருத்து அவர்களைக் கட்சி அங்கத்தவர் பட்டியலில் இருந்து நீக்கி விட வேண்டும் என்பதாக இருந்தது. இருந்தாலும் அந்தக்  கருத்து ஏகமனதான கருத்தாக இருக்கவில்லை. அதிருப்தியின் காரணமாக வெளியேறிச் சென்றவர்களும் இருக்கின்றார்கள். அந்த அதிருப்திகளுக்கு என்ன காரணம் என்றும் ஆராய வேண்டியுள்ளது. ஆய்வுக் குழுவின் மூலம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின் முடிவு எடுக்கப்படும்.

அத்துடன், நாடாளுமன்றக் குழுவில் என்னைப் பேச்சாளராக அறிவித்துள்ளார்கள். அதனால் எமது கட்சியின் கருத்தியல் பற்றி நான் சொல்ல வேண்டியுள்ளது. அதனை நான் செய்கின்றேன். கட்சிக் கூட்டக்  கருத்துக்களையும், நாடாளுமன்றக் கருத்துக்களையும் வெளியிடுவது என்னுடைய பணியாக இருக்கும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More