செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மனசு | சிறுகதை | சுந்தரேசன் புருஷோத்தமன்

மனசு | சிறுகதை | சுந்தரேசன் புருஷோத்தமன்

3 minutes read

நான், அம்மாவைப் பற்றி இதற்கு முன்னர் சிந்தித்ததாக நினைவில்லை.

பால்ய வயதிலும் சரி. பருவ வயதிலும் சரி. அவளுடனான அளவளாவல்களில் அத்தனை ஆதுரமாய் பங்கு கொண்டதுமில்லை.

“பசிக்குதும்மா” “என் சட்டைய எங்க வச்ச?” என நானும்,

“சாப்பாடு வச்சிருக்கேன் பாரு” “அலமாரியில் இருக்கே?” என அவளும் பேசியதாய், எனக்கும் அவளுக்கும் இடையில் இப்போதைய தொ.கா விளம்பரங்களில் வருவதைப் போலவே சில ஒற்றை வார்த்தை உரையாடல்கள்தான் நினைவறை வங்கிகளில் தென்படுகின்றன.

உண்மையில், ஒரு விதிக்கப்படாத நிபந்தனையின் பராமரிப்பின்கீழ், நானொரு தனி உலகை ஸ்ருஷ்டித்துக் கொண்டு அதனுள்ளேயே வசித்துக் கொண்டிருந்ததனால், அவளது உலகம் எத்தகையது என்பதை என்னால் இதுகாறும் உணர முடியாமலேயே போயிற்று. எனக்கு ஒன்றெனில் கலங்கிப் போவாள். தன் வலியிலும் என் களிப்பையே நாடுபவள். ஆனாலும் அவளுடன் அன்புடன் உரையாட வேண்டுமென்றோ, அவளை எங்கேனும் அழைத்துச் சென்று ஆனந்தமடையச் செய்ய வேண்டுமென்றோ இன்றளவும் நான் நினைத்ததில்லை. இத்தகைய உணர்வை, அம்மாவின்பேரில் இதுவரையில் உணர்ந்ததேயில்லை.

ஆனால், காய்ச்சலால் அவதிப்படும் அவள் நிலைகண்டு இன்று நான் உடைந்துதான் போனேன்.

எங்குப் பூட்டிவைக்கப் பட்டிருந்த உணர்வுக்குவியல்களிவை? எவ்விதம் இன்று தாழ்திறந்து இப்படியாகப் பிரவகிக்கின்றது? ஒருவேளை, இத்தன்மையான உணர்வுகள் யாவும் இத்தகைய சூழலில் தான் அறியப்படுமோ? இதற்கு அம்மா, இதுவரையில் இதுபோன்ற அவதிகளுக்கு ஆட்படாதது அல்லது ஆட்பட்டிருந்தாலும் கூட, இதுபோன்ற அவதிகளை அவள் என்னிடத்தில் சொல்லாமல் மறைத்து வைத்தது காரணமாயிருக்கலாம்.

“நைட், காய்ச்சல் இருந்ததாம்மா?” பெரிய டாக்டரம்மா, அம்மாவின் நெற்றியில் கைவைத்தவாறே கேட்டாள்.

“ம்ம்ம்… குளிரா இருந்துச்சுங்க. இருமல் நின்னபாடில்லே.”

“இஞ்சக்ஷன் போட்ருக்கில்லே, சரியாப் போகும். சிவப்பு மாத்திரைல பாதி, காலைல
போட்டுக்கிட்டீங்கள்ள?”

“ஆமாம்”

நோயாளியை விசாரித்த நிறைவில் சிறிய தலையசைப்புடன் அம்மாவிடமிருந்து நகர்ந்து அடுத்த விசாரிப்புக்குச் சென்றாள் டாக்டரம்மா.

எங்கு விட்டேன்? ம்ம்…அவள் அவதிகளை என்னிடத்தில் சொல்லாமல் மறைத்து வைத்தது கூட காரணமாயிருக்கலாம்.

உண்மைதான். அவள் இதுபோல் அடிக்கடிச் செய்பவள் தான். தன் குறைகளை, வலிகளை, அழுகைகளை, துன்பங்களை எப்போதும் எங்கள் தலையில் சுமத்தி ஆறுதலடைய, அவள் அவளை இதுவரையில் அனுமதித்ததேயில்லை.

குடும்ப நிலையில் கவலைகொள்ளாமல், அப்பா தாமரையிலைத் ‘தண்ணீராய்’ எப்போதுமிருக்க, தண்ணீர் இவள் கண்களில் கண்ணீராய் எப்போதும் புரண்டது.

வருமானத்திற்கு வழியேதுமில்லை. பஸ்ஸேறி பத்து மைல் தூரத்தில் இருக்கும் என் மாமாவின் வீட்டுவாசலில் முகத்தைத் தொங்கவைத்தவாறு நின்றாளானால், அவள் கையில் இருக்கும் பையில் கொஞ்சம் காய்கறியும், தானியங்களும் நிரம்பும். அவற்றாலேயே பெரும்பாலும் எங்கள் வயிறும் இதுவரையில் நிரம்பி வந்தது. இதில், தகப்பனின் தண்ணீர் பஞ்சத்தை வேறு தீர்த்தாக வேண்டும். துக்கத்தில் துவள்வதற்காகவே ஜனித்தவள், அம்மா.

ஆறு நாட்களுக்கு முன்பிருந்து நேற்றுவரை, கிழிந்துவிட்டிருந்தத் தம் காசிக்கம்பளிக்குள் உடலை நுழைத்துக் கொண்டு காய்ச்சலால் முனகிக் கொண்டிருந்தவள், அதீத சோர்வினாலும் உணவின்மையாலும் ரொம்பவே தாளமாட்டாமல் உடல் நடுங்கிக் கொண்டிருந்தபடியால், அவள் எத்தனை மறுத்தும், தம்பிதான் அவளை அவசரமாய் இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டிருந்தான்.
தகவலறிந்துச் சென்று அவளைக் கண்ட பொழுதில், அவளது தளர்ந்த நிலை, என்னையும் கூட முதல்முறையாகத் தளர்வடையச் செய்துவிட்டது.

உடனடியாக என் கண்களில் கண்ணீர் பொத்துக் கொண்டதைக் கண்ணுற்ற தம்பி என்னைப் பிடித்து உலுக்க, நான் சுதாரித்துக் கொண்டேன்.

“எவன்டாவன், ஆஸ்பத்திரில கேண்டீன் வச்சி நடத்துறது… சமையல் கட்டுல போட்ற மொளகாப்பொடி வீதிவரைக்கும் வருது”

தம்பி புன்னகைத்தவாறே “ஆமா. அரைச்சுக் கொண்டுபோம்போது நானும் பார்த்தேன்” என்றான்.

சோகத்திலும் புன்னகைக்கும் பக்குவம், தம்பியினிடத்தில். அவனும் ஒருவிதத்தில் எனக்கு என் அம்மாவைப் போலத்தான்.

கண்கள் இருண்டு, வாராத தலையுடன் என்னருகில் அமர்ந்திருந்த தம்பியைக் காணும்போது மனம் நெகிழ்ந்தது.

‘டேய், வீட்டுக்கு போய்ட்டு கொஞ்சம் தூங்கு. நா, அம்மா கூட இருக்கேன். கீழ, கேண்டீன்ல இருந்து சாப்ட வாங்கிக்கறேன். நீ அலைய வேண்டியதில்லே” அடைக்கும் தொண்டையை கனைத்துக் கொண்டே சொன்னேன்.

“நீ போடா. நா அம்மா கூட இருக்கேன். எனக்கொன்னும் ப்ரச்சனையில்லை” எனக்கு பழக்கமில்லாத அந்த என்னை விட்டுச் செல்ல அவனுக்கும் இஷ்டமில்லை.

மனம் மீண்டும் நெகிழ்ந்தது.

“பல நேரத்தில் நீ தம்பியா… நான் தம்பியான்னே எனக்கு தெரியல்லே. அதெல்லாம் வேணாம், நீ கெளம்பு.”

“சரி. சாயங்காலம் வரைக்கும் இரு. நா போய்க் குளிச்சிட்டு வந்திட்றேன்”

“ஒன்னும் வேணாம். நாளைக்கு வந்தா போதும்”

படியிறங்கும் வரையில் அவன் பார்வை என்மீதும் அம்மாமீதும் மாறி மாறிப் படர்ந்திருந்தது.

அம்மாவின் அவஸ்தையை அருகிலிருந்து காணும்போது முதல்முறையாக அவளுக்காக அழுகை வந்தது. நடுநிசியில் அதீத குளிரால் உடல் நடுங்கி, மிகவும் சிரமப் பட்டாள். திட உணவை ஏற்கும் நிலையில் உடல் நிலையில்லை. பழச்சாறும் கூட வயிற்றில் தங்காமல் வெளியேறிவிட, அவள் பட்ட அவஸ்தையின் உச்சத்தை அன்றுதான் கண்டேன்.

“கடவுளே, இந்த கஷ்டத்தில் இருந்து அவளைக் காப்பாற்று. அவளைத் தவிக்கவிடாதே” மனம் தீனமாய் அலறியது.

குணமான பின்பு அவளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவளை சந்தோஷமாய் வைத்துக் கொள்ளவேண்டும். அவள் பட்ட கஷ்டங்களெல்லாம் போதும். இனியும் அவள் இதுபோன்று அவதிப்படும் சூழ்நிலையை உருவாக்கவே கூடாது. மனம் சங்கல்பம் செய்துகொண்டது.

ஓயாத முனகல்கள், ஆஸ்பத்திரி படுக்கைக்கருகில் தொங்கிக்கொண்டிருந்த திரவ பாட்டில்கள், நாளுக்கு ஐந்தாறு ஊசிகள். அப்பப்பா, நினைத்தாலே சிலிர்க்கிறது. எட்டு நாட்கள் இரவும் பகலுமாய் அவள் அனுபவித்துவந்த துன்பங்கள் ஒருவிதமாய் ஓய்ந்து, அம்மா குணமாகி வீடு வந்துவிட்டாள்.

“என்னடா?”

என் அழைப்பின் பேரில் வீட்டினுள் பிரவேசித்த அம்மாவின் குரல், என்னை மீண்டும் நினைவினின்று மீட்க, நான் அவளிடம் கேட்டேன்,

“என் சட்டைய எங்க வச்ச?”

 

நிறைவு..

 

– சுந்தரேசன் புருஷோத்தமன்

நன்றி : எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More