இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறையற்ற இடமாற்றங்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். இடமாற்றங்கள் பெயரளவுக்கே இடம்பெற்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், ஆசிரிய ஆலோசகர்களுக்கான இடமாற்றங்கள் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
வடக்கு மாகாணத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரியதுடன், ஆசிரியர்களுக்கு தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையிலான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தால் கோரிக்கைக் கடிதம் ஒன்று ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.