ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், தங்களது பெற்றோர்களை அந்நாட்டுக்குள் அளிப்பதற்கான புதிய தற்காலிக பெற்றோர் விசா நடைமுறைக்கு வர இருக்கின்றது. இது தொடர்பான Migration Amendments(Family Violence and Other Measures) Bill என்ற மசோதாவை, கடந்த 2016 ஆம் ஆண்டு லிபரல் அரசு முன்மொழிந்தது.
தற்போது அம்மசோதா, ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வரும் வெளிநாட்டினர் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த விசா நடைமுறை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. “ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களது குடும்பங்களை பார்க்க பெற்றோர்களுக்கு புதிய வழியை இவ்விசா கொடுக்கும். இது ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான சமூக பலன்களை அளிக்கும்” என குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மேன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் நிரந்தரமாக வசிக்கும் உரிமைபெற்ற வெளிநாட்டினர் தங்களது பெற்றோரை 3 ஆண்டுகள் தற்காலிக விசாவில் வரவழைக்க 5000 ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில்இரண்டரை லட்சம் ரூபாய்) செலுத்த வேண்டும். அதே போல், 5 ஆண்டுகள் விசாவுக்கு 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் வசிக்க வேண்டுமென்றால் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் விசா கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆனால், அவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேசமயம், இவ்விசா கட்டணம் மிகவும் அதிகமானது எனக் கருதுகின்றனர் இத்துறை சார்ந்த நிபுணர்கள்.
அத்துடன், இவ்விசாவில் வரக்கூடியவர்கள் Medicare எனப்படும் அரசின் மருத்துவ சேவைகளை பெற முடியாது. அவர்கள் தங்களுக்கென தனியார் மருத்துவக் காப்பீட்டை கொண்டிருக்க வேண்டும். இவ்விசாவில் வரக்கூடிய பெற்றோர்களுக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்படுகிறன எந்தவொரு மருத்துவ செலவுகளுக்கும் அவர்களது பிள்ளைகளே பொறுப்பேற்க வேண்டும்.
இந்த விசாவில் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்களை எதிர்த்துள்ள ஆஸ்திரேலியா எதிர்க்கட்சியான லேபர் கட்சி, இந்த விசா தொடர்பாக 2016 தேர்தலுக்கு முன்பு லிபரல் கட்சி அளித்த உறுதியின் படியே இவ்விசாவை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 33,310 இந்தியர்களுக்கு நிரந்தரமாக வாசிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 2012 ம் ஆண்டு கணக்குப்படி, ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களது பிள்ளைகளை பார்க்க ஆண்டுதோறும் 35,000 இந்திய பெற்றோர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர்.