இந்தோனேஷியாவில் ஆழிப்பேரலை ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் அனாக் க்ரகடோ எரிமலையில் மீண்டும் குமுறல் ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும் சுனாமி ஏற்படலாம் என்பதால் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷிய நேரப்படி 9.30 மணிக்கு சுனாமிப் பேரலை தாக்கியதில், குறைந்தது 222 பேர் உயிரிழந்ததுடன், 843 பேர் காயமடைந்தனர். அனாக் க்ரகடோ எரிமலை வெடிப்பால், கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கமே இந்த ஆழிப்பேரலை ஏற்படுவதற்கான பிரதான காரணமாக இருக்கலாம் என இந்தோனேஷிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை வேளையிலும் குறித்த எரிமலை குமுறியுள்ளது. இந்தநிலையில், ஆழிப்பேரலையின் தாக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜொக்கோ விடோடா, தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.