புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் நாம் முன்னே நடந்தால்… நோய்கள் விலகி பின்னே நடக்கும்!

நாம் முன்னே நடந்தால்… நோய்கள் விலகி பின்னே நடக்கும்!

3 minutes read

ஒரு காலத்தில் நம்மைப் பார்த்து நோய்கள் ஓடின. இப்போது நோய்களைப் பார்த்து மருத்துவமனைகளை நோக்கி நாம் ஓடுகிறோம். நம் முன்னோர்கள் நோயில்லாமல் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.

இன்றைய சூழலில் நோயின் அரவணைப்போடுதான் குழந்தை பிறக்கிறது. நம் முன்னோர்கள் உணவுக்கேற்றவாறு உடலை இயக்கியதால், அவர்கள் ஆரோக்கியமான உடலைப்பெற்று மகிழ்ச்சியாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.

ஆனால், இன்று ஓடி விளையாட வேண்டிய மழலைகள் கூட வேளை தவறாது மருந்து, மாத்திரைகளை உண்டு வளர்கிறது. கஷ்டப்பட்டு உழைத்து சம்பாரித்து கோடி கோடியாய் பணம் வைத்திருப்பவர்கள் கூட, அவற்றை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் இல்லாமல் தவிக்கிறார்கள்.

ஆரோக்கியமான உடல் என்பது உணவு, உடல் சார்ந்த ஒழுக்கம், உடற்பயிற்சி இவைகளின் கூட்டு விளைவே. நமது இயல்பு வாழ்கைக்கு உணவும், உணவுக்கேற்ற உடல் உழைப்பும் அவசியம்.

உடலுழைப்பு இல்லாவிட்டால் நோய்களின் இருப்பிடமாக, பிறப்பிடமாக மாறிவிடும் நமது உடல். நம் முன்னோர்கள் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் நீண்ட வாழ்வு வாழ்ந்ததன் ரகசியமே அவர்களின் உடலுழைப்புத்தான். உழைப்பு என்பது கடினமான வேலைகள் செய்ய வேண்டும் என்பதல்ல.

உடலுக்கு ஏற்ற இயக்கத்தைக் கொடுப்பதுதான். இயக்கம் என்று வரும்போது உடலை வருத்திச் செய்யும் வேலைகள் அல்ல. மனிதனின் உடலிலுள்ள அத்தனை பாகங்களையும் ஆரோக்கியமாக இயங்க வைக்கும் எளிமையான, செலவில்லாத ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்வதற்கு வழிவகை செய்யும் நடைப்பயிற்சியே போதுமானது. நடைப்பயிற்சியை நமது முன்னோர்கள் வழக்கப்படுத்தி இருந்தார்கள். எவ்வளவு தூரம் செல்லவேண்டும் என்றாலும் நடந்தே சென்றார்கள்.

இப்போது நாம் அருகில் உள்ள பெட்டிக் கடைக்குச் செல்வதற்குக் கூட பெட்ரோல் செலவு செய்து வாகனத்தை இயக்குகிறோம். இதனால் நம் உடலின் இயக்கம் குறைந்துள்ளது. ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடை என்பது இன்று கௌரவக் குறைச்சலாகவும் ஒருசிலரால் பார்க்கப்படுகிறது. புகைகளைக் கக்கி சுற்றுச்சூழலுக்கும், வாழ்க்கைக்கும் ஊறுவிளைவிக்கும் வாகனங்களில் சென்றால் மரியாதையே வேறு.

நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடப்பதால் இரத்த ஓட்டம் சீரடையும். நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும். நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும். உடல் பருமன் குறையும். இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, உடல்வலிகள் கட்டுப்படும். உடல் இளமையாக இருக்கும். மனதில் உற்சாகம் பெருகும். ஆயுள் அதிகரிக்கும். நோய்கள் நெருங்காது.

எந்த வயதிலும் நடக்கலாம். யார் வேண்டுமானாலும் நடக்கலாம். எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். நடை ஒரு உடம்பின் இயல்பான இயக்கம். இதனால்தான், மருந்துகளை நம்புவதைவிட நடைப்பயிற்சிகளை இயன்றவரை கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றனர் மருத்துவர்கள். அனைத்து பயிற்சிகளிலும் நடைப்பயிற்சிதான் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது.

அதற்கான அமைப்பில் நமது உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன என்கின்றனர் நடை வல்லுனர்கள். சுமார் 75 மில்லியன் பேர் நடைப் பயிற்சியை ஆரோக்கியம் பெறும் பொருட்டு தினமும் காலைவேளையில் கடைப்பிடிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

இன்றைய இயந்திரமயமான உலகில் நடைபயிற்சியை வாழ்வின் அங்கமாக பின்பற்றுவது கடினமானதாக இருந்தாலும்கூட, நடை பயிற்சியை நம் உடலை காக்கும் உடற்பயிற்சியாக மனதில் எண்ணி சிறு சிறு வேலைகளுக்கெல்லாம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை போன்ற நகரங்களில் காலைவேளையில் காரில் பவனி வந்து, கடற்கரையில் அதிகாலையில் நடப்பவர்கள் ஏராளம். உடற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று இயந்திரங்களுடன் மல்லுக்கட்டுபவர்கள் அதிகம். இப்படி நேரம் ஒதுக்கி பணத்தைச் செலவு செய்து ஆரோக்கியம் பெற முயல்வதைவிட, நமது அன்றாட வேலைகளுடன் கூடிய ஒரு பயிற்சியாக நடையை தொடர்ந்தாலே போதுமானது.

பின்பற்ற வேண்டியவை
லிப்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக படிகளைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட தூரத்திற்குச் செல்வதற்கு வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக நடப்பதைப் பின்பற்றலாம். மேலை நாடுகளில் நடைப்பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக பாதசாரிகளின் வசதிக்கேற்றவாறு நடைப்பாதை அரசு அமைத்துக் கொடுத்துள்ளதுடன், அவற்றை ஆக்கிரமிப்பு செய்யாதவாறும் பார்த்துக் கொள்கிறது. நம் நாட்டில் பாதசாரிகள் செல்வதற்கென அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பாளர்களின் கையில்தான் உள்ளது.

இதனால் நடந்து செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகையால் நடைப்பாதையில் பாதசாரிகளுக்கு இடையூறு செய்யும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதசாரிகளுக்குத் தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்.

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பொருட்கள் வாங்க வருபவர்கள் மக்கள் கூட்டமாக உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அதாவது அவர்கள் காலியாக உள்ள பகுதிகளில், அல்லது பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்திவிட்டு, பொருட்களை வாங்குவதற்கு கொஞ்ச தூரம் நடந்து வரலாம். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் செலவு தவிர்க்கப்படுவதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக இருக்கும். நெரிசலான பகுதிகளில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகைகளும் தவிர்க்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கும் நன்மைகள் ஏற்படும்.

தினசரி வேலைகளில் தினமும் குறைந்தது 5 கிலோ மீட்டர் தூரமாவது நடந்து சென்றால், எந்தவிதமான நோய்த் தாக்குதலும் இல்லாமல், ஆரோக்கியமாக இளமையுடன் வாழலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நடைபயிற்சியை பின்பற்றினால் நமது முன்னோர்களைப் போல நாமும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து ஒளிமயமான, ஆரோக்கியமான பாரத தேசத்தை உருவாக்க முடியும் என்பதில் மாற்றமில்லை. நாம் முன்னே நடந்தால்…. நம்மைவிட்டு விலகி நோய்கள் பின்னே நடக்கும்.

நன்றி – டி.கனகராஜ்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More