புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை ஆயுதப் போராட்டம் பற்றிப் பேச இவர்களுக்கு தகுதி உண்டா? அகரன்

ஆயுதப் போராட்டம் பற்றிப் பேச இவர்களுக்கு தகுதி உண்டா? அகரன்

4 minutes read

இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்தவர்கள் தம்மைதாமே மிதவாத தலைவர்கள் என்று கூறிக்கொள்கின்றார்கள். ஆனால் இவர்களின் பச்சோந்தித் தன்மையை இவர்களுக்கு மிகமிக நெருக்கமானவர்களால் தான் அறிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் முடியும் என்பது வெளிவராத உண்மையாகும்.1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்திலே தனிநாட்டு பிரகடணம் செய்து இளைஞர்களை உசுப்பேற்றி ஆயுதப்போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் யார்? இந்த மிதவாத தலைவர்களே! ஆயதபோராட்டத்தினை இளைஞர்கள் ஒன்றாக முன்னெடுக்க முயன்றபோது திரைமறைவில் நின்று பிளவு படுத்தியவர்கள் யார்? இந்த மிதவாதிகளே!

இவர்களின் சூழ்ச்சிக்;களை வென்று தமிழ் மக்களின் விடுதலைக்காக முனைப்புடன் பல்வேறு விடுதலை அமைப்புக்கள் நகர்ந்து சென்றன. ஈற்றில்  தமிழீழ விடுதலை புலிகள் தனித்து நின்று இலங்கை அரசபடைகளுக்கு எதிராகவும், இலங்கை அரசாங்கத்திற்கு துணையின்றி இருபதிற்கு மேற்பட்ட நாடுகளின் அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் போராடினார்கள்.

இவ்வாறு யதார்த்தமிருக்கையில், 30.06.2019அன்று தமிழரசுக்கட்சியின் 16ஆவது மாநாட்டில் ஒரே மேடையில் வைத்து கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா ஆகிய இருவரும் முன்னுக்குப் பின் முரண்பாடுகளை ஏற்படுத்த வல்ல இரண்டுவிதமான போராட்ட அறைகூவல்களை விடுத்திருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தி போராடவேண்டி வரும் என சம்பந்தனும் அரசுக்கு மூன்று மாதகால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் உரிய தீர்வை வழங்க தவறினால் ஜனநாயகப்போராட்டம் வெடிக்கும் என்று மாவை சேனாதிராசவும் அறைகூவல் விடுத்துள்ளனர்.ஒருவர் ஆயுதப்போராட்டம் பற்றியும் இன்னொருவர் அஹிம்சை போராட்டத்தை பற்றியும் அறைகூவல் விடுத்திருப்பதென்பது கொள்கை ரீதியான ஒற்றுமையின்மையிலேயே இரு தலைவர்களும் இருக்கின்றார்கள் என்பதை பகிரங்கப்படுத்தியுள்ளது.

இத்தனை காலமும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்குறைந்தது வாழ்வாதார உதவிகளையாவது அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்கும் காலத்தில் பெற்றுக்கொடுப்பதற்கான வழியை ஏற்படுத்துங்கள் என்று கோரியபோதெல்லாம், இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியலமைப்பு வருகிறது. அதற்கு முன்னதாக சில்லறை விடயங்களை முன்வைத்து நாங்கள் பலவீனமாக முடியாது என்று கூறிக்கொண்டிருந்த இந்த இரு தலைவர்களினது இராஜதந்திரம் தற்போது தோற்றுவிட்டது.

அத்தோடு தேர்தல்களும் நெருங்க ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் இந்த இரண்டு தலைவர்களும் சரவெடியில் தீக்குச்சை பற்ற வைக்க முயற்சித்திருக்கின்றார்கள் என்பதை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.சம்பந்தன் க்கான பட முடிவு

இந்த இரண்டு தலைவர்களும் ஏற்கனவே  தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றி வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றி முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு துணைபோன தலைவர்களின் சூட்சுமத்தினை நன்கு அறிந்த கத்துக்குட்டிகள் தான். தற்போது அந்த சூட்சுமத்தினையே போர் நிறைவுக்கு வந்து ஒருதாசப்தத்தின் பின்னர் முன்னகர்த்துவதற்கு முத்தாப்பாய், வீரசிங்கம் மண்டபத்தில் ஆயுதபோராட்டம் வெடிக்கும் என்று அறைகூவல் விடுக்கின்றார்கள்.

இவர்களின் அறைகூவல் இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு அத்திபாரம் இடுகின்றதா என்ற ஐயத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.சரி, சம்பந்தன் அறைகூவலின் பிரகாரம், மீண்டுமொரு ஆயுதப்போராட்டத்தை பற்றி சிந்திக்கவேண்டி வரும் என்றால் அந்த ஆயுதப்போராட்டத்திற்கு யார் தலைமை தாங்குவது என்று கேள்வி எழுகின்றது. சம்பந்தன்,மாவை.சேனாதிராஜா ஆகியோரின் முதுமை அவர்களுக்கு அந்த பதவியை வகிப்பதற்கு இடமளிக்காது. அப்படியென்றால்,  தொட்டதற்கு எல்லாம் தம்பி சுமா என்று வாய்க்கு ஆயிரம் தடவை அழைக்கும் எம்.ஏ.சுமந்திரன் தலைமை தாங்குவரா?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தமிழீழக் கோரிக்கையுடன் உடன்பாடு இல்லாத காரணத்தினாலேயே அவரின் மறைவுக்கு பின்னர் கூட்டமைப்பில் இணைந்து அரசியல் பயணத்தினை ஆரம்பித்ததாகவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது தவறுகள் உள்ளதாகவும் சுட்டிக்கொண்டிருக்கும் சுமந்திரன் ஒரு ஆயுதரீதியான விடுதலை இயக்கத்திற்கு தலைமை தாங்க தகுதியானவரா? இல்லை…!அப்படியென்றால், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈற்றில் தன்னிடத்தில் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு சென்றதுபோல் பிரம்மை காட்டிக்கொண்டிருக்கும் சிறிதரனாலோ, இல்லை தமிழரசுக்கட்சின் ஏனைய முதுமை நிலை பாராளுமன்ற உறுப்பினர்களாலோ தலமை தாங்க முடியுமா?

அவ்வளவு ஏன்? ஒரு துப்பாக்கி ரவையின் சத்தத்தினைக் கூட அறியாது சகல சௌபாக்கியங்களுடன் தயாகத்திற்கு வெளியே இருந்து தமது வாழ்க்கையை தொடர்ந்த சம்பந்தனினதும், சேனாதிராஜாவினதும் புதல்வர்கள் தங்களது தந்தையர்களின் அறைகூவலை மையப்படுத்தி ஆயதப்போராட்ட இயக்கத்தினை உருவாக்கி அதற்கு தலைமை ஏற்றுக்கொள்வார்களா? அவ்வாறு தலைமை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு தந்தையர்கள் தயாரா? ஒருபோதும் இல்லை.

இத்தகையவர்கள் தற்போது ஆயுதப்போராட்டம் பற்றி பேசுகின்றார்கள்? கொள்கைகளை துறந்து கோட்பாடுகளை மறந்து, நிபந்தனைகளை கைவிட்டு தென்னிலங்கை சிங்கள பேரினவாதிகளுக்கு முண்டு கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த தலைமைகள் தமது பலவீனத்தினை மறைத்து அடுத்த தேர்தல்களிலும் அரசாங்களை தக்கவைக்கும் அபிநய நாடகத்தின் அரங்கேற்றமே வீரசிங்கம் மண்டபத்தில் அரங்கேறியிருக்கின்றது.

கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களினுடைய அஹிம்சை,ஆயுத போராட்டங்கள் என்பவற்றை பயன்படுத்தி எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் வகையில் வார்த்தை வர்ணஜாலத்தினைக் காட்டிய இந்த தலைவர்கள் தாம் அறிவுபூர்வமாகவும் இராஜதந்திர ரீதியாகவும் பிரச்சினைகளை அணுகாமல் வெறுமனவே தமது பதவி,பணம், குறுகிய அரசியல் நலன்களையே முன்னிறுத்தினார்கள்.

இதன் விளைவு தான் பல்லாயிரக்கணக்கான மக்களின் அழிவுக்கு காரணமானது. அது, மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகி, பில்லியன்கணக்கான சொத்தழிந்து, அனைத்து இழந்து நாதியற்ற இனமாக நடுத்தெருவில் மீண்டும் ஆரம்பத்திலிருந்து போராட்டத்தினை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டது இந்த தலைவர்களின் சுயநலமே.

இவற்றையெல்லாம் இளைஞர்களே புத்தி ஜீவிகளே பொது மக்களே மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். மக்களை வெறுமனே வாக்கு இயந்திரங்களாக கருத்தும் இந்த தலைவர்கள் தமது அரசியல் சுயலாப இருப்பிற்காக பல்வேறு பசப்பு வார்த்தைகளை தாராளமாக இறைப்பார்கள்.தேசிய தலைவர் பிரபாகரனை, தம்பி என்பார்கள், மாவீரன் என்பார்கள், அவருடனான சந்திப்புக்களை கதைகளாக கூறுவர்கள், போராட்டம் வெடிக்கும் என்பார்கள், சர்வதேசம் வரும் என்பார்கள், ஆனால் அவை அனைத்துமே வாக்கு வேட்டைக்கான வார்த்தைகளே விடுதலை வேட்கைக்கான வார்த்தைகள் அல்ல.

ஆகவே அவற்றை நம்பி ஏமாராமல் ஒரு தூய்மையான, செயற்பாட்டு ரீதியாக வெற்றி பெறக்கூடிய கொள்கையில் பற்றுறுதியான புதிய அரசியல் கலாச்சாரத்தை கொண்ட கட்டமைப்பினை கட்டியெழுப்புவது அவசியமாகும். அதற்காக தமிழர்கள் அனைவரும் சிந்திப்பதுடன் நிறுத்தாது உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகின்றது.

-அகரன்

அகரன் என்ற சுயாதீன எழுத்தாளரால் எழுதி அனுப்பப்பட்ட இக் கட்டுரையைக்கு வணக்கம் லண்டன் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இக் கட்டுகைக்கான எதிர்வினைகள் எழுதி அனுப்பப்படும் பட்சத்தில் அவை பிரசுரிக்கப்படும். 

-ஆசிரியர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More