ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் மரண மழையில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் சோதிநாதன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் வரவேற்பு உரையினை, கிளி மத்திய கல்லூரி ஆசிரியரும் விழா ஏற்பட்டுக் குழுவை சேர்ந்தவருமான இ. சுதன் வழங்கினார். வாழ்த்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ் சிறீதரனும், ஈ. சரவணபவனும், முன்னாள் வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராஜாவும் வழங்கினார்கள். நூலுக்கான அறிமுகவுரையை யாழ் பல்கலைக்கழக அரச அறிவியல் பேராசிரியர் கலாநிதி கே.ரி. கணேசலிங்கன் வழங்கினார்.
இதேவேளை புத்தகத்திற்கான விமர்சன உரைகளை ஆசிரியரும் கிளிநொச்சி பிரதேச சபை உறுப்பினருமான அ. சத்தியானந்தனும், எழுத்தாளர் கணேசலிங்கனும் வழங்க, ஏற்புரையினை ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் மரண மழையில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவலின் ஆசிரியருமான நா. யோகேந்திரநாதன் வழங்கினார்.
இறுதி யுத்தம் குறித்த இந்த நாவல் மன்னாரில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையான துயரப் பயணத்தை பதிவு செய்துள்ளது. இதுவரையில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவலானது இரண்டு பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில் இறுதிப் பாகமான மரண மழையில் நீந்திக் கடந்த நெருப்பாறு, இன்று வெளியிடப்பட்டது. போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த நூல் ஈழத் தமிழ் மக்களின் சோக வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்துகின்றது.