செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஜப்பானியப் பேராசிரியரின் நினைவும் மு. இளங்கோவனின் நூல் வெளியீடும்

ஜப்பானியப் பேராசிரியரின் நினைவும் மு. இளங்கோவனின் நூல் வெளியீடும்

2 minutes read
ஜப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு விழாவும்  முனைவர் மு. இளங்கோவனின்  தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவும்

ஜப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நூற்றாண்டு விழாவும், புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவும் புதுச்சேரி, செயராம் உணவகத்தில் நடைபெற்றன (23.08.2019). மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து,  சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தொல்லிசையும் கல்லிசையும் நூலினை வெளியிட்டு, தமிழ் மொழியின் சிறப்பினையும் இன்றைய நிலையில் உள்ள தமிழின் நிலையினையும் எடுத்துரைத்துப் பேசினார். நூலின் முதல்படியினைத் திருவண்ணாமலைப் பாவலர் வையவனும், தியாகி மு. அப்துல் மஜீதும் பெற்றுக்கொண்டனர்.

பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் தொல்லிசையும் கல்லிசையும் என்ற நூலை அறிமுகப்படுத்திப் பேசினார். புதுவைப் பல்கலைக்கழகப் புலமுதன்மையர் முனைவர் இளமதிசானகிராமன், மயிலம் தமிழ்க்கல்லூரியின் முதல்வர் ச. திருநாவுக்கரசு, ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த செ. திருவாசகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதுவைத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி, புதுச்சேரித் தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ. சடகோபன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அரங்க. மு. முருகையன் வரவேற்புரையாற்ற, முனைவர் மு.இளங்கோவன் ஏற்புரை நிகழ்த்தினார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் முனைவர் பொற்கோ கலந்துகொண்டு, பேராசிரியர் சுசுமு ஓனோவின் படத்தினைத் திறந்து வைத்து, சுசுமு ஓனோ தமிழ் கற்ற வரலாற்றையும் அவர் செய்த ஆராய்ச்சிகளையும் எடுத்துரைத்தார். சுசுமு ஓனோவுக்கு ஜப்பான் நாட்டு மக்களும் அரசும் செய்த சிறப்புகளை எடுத்துரைத்தார். தமிழ்மொழிக்கும், ஜப்பான் மொழிக்கும் உள்ள உறவுகளை வெளிப்படுத்துவதில் சுசுமு ஓனோவின் ஆராய்ச்சி எந்த அளவு இருந்தது என்பதை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் எடுத்துரைத்தார். முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மொழியையும் ஜப்பான் மொழியையும் இணைத்து ஆராய்ச்சி செய்த சுசுமு ஓனோவின் நினைவினைத் தமிழகத்து மக்கள் போற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜப்பானிய மாணவி அயகா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சுசுமு ஓனோவின் பெருமைகளைப் பேசினார்.

கலைமாமணி கா. இராசமாணிக்கம் இறைவாழ்த்துப் பாடினார். முனைவர் இரா. கோவலன் நன்றியுரை வழங்க, எழுத்தாளர் பூங்குழலி பெருமாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். புதுவையிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

படத்தில் முனைவர் மு.இளங்கோவன் எழுதிய தொல்லிசையும் கல்லிசையும் நூலைப் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து வெளியிட, பாவலர் வையவன் முதல்படி பெறுதல். அருகில் முனைவர் பொற்கோ, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், முனைவர் இளமதி சானகிராமன், சிவ. வீரமணி, தூ. சடகோபன், செ. திருவாசகம், பேராசிரியர் ச. திருநாவுக்கரசு உள்ளிட்டோர்.

செய்தி, மு.இளங்கோவன். புதுச்சேரி,இந்தியா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More