1
தூங்கும் போதும்
தூங்கி எழும்பும் போதும்
எல்லா நேரமும்
எப்பவும் இவளுக்கு இவள் மகன்
நினைப்புத்தான்
ஊர் உறங்கி கிடந்த
மாலை ஒரு நாள்
ஒருவருக்கும் தெரியாமல்
இழுத்துப் போனார்கள்
அன்று போனவன் போனவன் தான்
இன்றும் இவன் நினைப்பு தான் இவளுக்கு
இன்று இவள் ஊரின்
அம்மன் தேர் திருவிழா
ஆண்டு தோறும்
அந்த கற்பூர சட்டியை
தலையில் வைத்தபடி
அவனை இடுப்பில் அணைத்தபடி
அந்த ஊரே அதிரும்படி
அரோகரா சொன்னபடி
அந்த அம்மன் தேர் பார்க்க
அவனோடு சென்ற
அந்த நாட்களின் நினைப்போடு
எப்பவும் இவளுக்கு இவன்
மகன் நினைப்பு தான்
கடைசியாய் இவன் எடுத்த
படத்தை காவியபடி
தேடித்தேடி அலைந்து
தெரு முழுக்கு கூவி திரிந்தும்
எவனும் திரும்பி கூட பார்க்கவில்லை
எட்டி ஒரு ஆறுதல் கூட சொன்னதில்லை
விட்ட பாடாயும் இல்லை
இவள் விம்மலும் அழுகையும்
இப்பவும் இவளுக்கு
இவள் மகன் நினைப்பு தான்
எப்படி மறப்பாள்
அவள் வலி அவளுக்கு
தானே தெரியும்.
-பா .உதயன்