கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தனக்கு விருப்பமான கணக்குகளைத் திறப்பதற்காக இலங்கை வங்கிக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. பொது நிறுவனங்களுக்கான நிறைவேற்று குழு கூடியபோதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பொது நிறுவனங்களுக்கான நிறைவேற்று குழு எனப்படும் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கும் அவரது புதல்வர் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதும் நேற்றைய தினம் அவர்கள் குழுவில் முன்னிலையாகவில்லை.
எவ்வாறாயினும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஹிரா அறக்கட்டளை ஆகியவற்றின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக வாக்குமூலங்களை வழங்குவதற்காக இலங்கை வங்கியின் அதிகாரிகள் மட்டுமன்றி உயர்கல்வியமைச்சு, நிதியமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் குழுவின் முன் முன்னிலையாகியிருந்தனர்.
கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துநெத்தி குறித்த நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக பல்வேறு பெயர்களில் திறக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்குகள் தொடர்பாக கேள்வியெழுப்பினார்.
இதன்படி அவரின் கேள்விகளுக்கு மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் கே.பி.எஸ்.பண்டார மற்றும் வங்கியின் சிரேஷ்ட சட்டத்துறை அதிகாரி தயாஜனி பீரிஸ் ஆகியோர் பதிலளித்தனர். அதேவேளை, கோப் குழுவின் உறுப்பினரும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்கவும் அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பினார்.
குறித்த இரண்டு தனியார் நிறுவனங்கள் தொடர்பாக உயர்கல்வியமைச்சு மற்றும் நிதியமைச்சுகளுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக குழப்பநிலை இருப்பதாக அதிகாரிகள் கோப் குழுவின் முன்பாக தெரிவித்தனர்.