தனுஷ் நடிகராக அறிமுகமான ஆரம்ப காலத்தில் ‘திருடா திருடி’ என்றொரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சுப்ரமணியம் சிவா, தற்போது இவர் தனுஷ் ரசிகர் மன்ற தலைவராகவும் இருக்கிறார். பல வருடங்கள் தனுஷுடனேயே பயணித்து வருகிறார் என்றும் கூட சொல்லலாம். பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது சமுத்திரக்கனியை வைத்து ‘வெள்ளை யானை’ என்றொரு படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் இடையே பிரச்சனை, வாக்குவாதம் என்றெல்லாம் பேசப்படுகிறதே என்று நமக்கு அவர் அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதுகுறித்து சுப்ரமணியம் சிவா கூறுகையில், “தனுஷ் சிவகார்த்திகேயனை வைத்து இரண்டு படங்கள் தயாரித்து இருக்கிறார். எதிர் நீச்சல் எடுக்கும் சமயத்தில் நான் தனுஷிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்னார், சிவா நல்ல ஹீரோ பிரசன்ஸ் இருக்கு. மூனு படத்திலேயே நான் அதை உணர்ந்தேன். அதனால்தான் எதிர்நீச்சல் படம் அவரை வைத்து பண்ணுகிறேன் என்றார். அப்படிதான் காக்கிச்சட்டை படமும் தயாரித்தார். சினிமாவில் மட்டும் இல்லை சாதாரனமாக ஊர்பக்கங்களில் பார்த்தால் கிழவிகள் எல்லாம் புரளி பேசுவார்கள் அதுபோலதான் இது.
இரண்டு ஹீரோக்களை பற்றி தவறான விஷயங்கள் பேசினால்தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்று இப்படி கிளப்பிவிடுகிறார்கள். நம் வாழ்க்கையில் கெட்டவன் இருந்தா ரசிப்போமா? ஆனால் சினிமாவில் கெட்டவன் இருந்தால் ரசிப்போம். அதைபோல கதை பேசிக்கொள்ள ஒரு திருடனோ, கெட்டவனோ, அல்லது கெட்ட விஷயங்களோ தேவைப்படுகிறது. ஒரு உரையாடலுக்கு கெட்ட விஷயங்கள் தேவை அப்போதுதான் அது சுவாரஸ்யப்படும். நல்ல விஷயங்களை நிறைய நேரம் பேசி சுவாரஸ்யப்படுத்திக்கொள்ள முடியாது.
அதுபோலதான் காசிப். நான் அவனை பார்த்தேன் என்று சொல்வேன். இன்னொருவன் இருட்டில் பார்த்தேன் என்று சொல்வான். இன்னொருவன் இருட்டு மட்டுமல்ல அவருடன் ஒரு பெண்ணும் இருந்தால் என்று சேர்த்து சொல்வான். இப்படி கற்பனை ஏறி சுவாரஸ்யத்தை கூட்டிக்கொண்டே போகும்.
தனுஷ்கூட இருக்கும்போது சிவா பற்றி பாஸிட்டிவாகதான் பேசிக்கொள்வோம், நெகட்டிவாவே பேசிக்கொள்ள மாட்டோம். தனுஷுக்கு எப்போதும் நெகட்டிவாக பேசினால் பிடிக்காது. தனுஷும் சிவாவும் நேரில் ஒருநாள் மீட் செய்துகொண்டால் நம்பெல்லாம் இப்படிதான் பேசிக்கிறோமா என சிரிப்பார்கள். சிவாவே ஒரு பத்திரிகையில் தனுஷ் எனக்கு குரு மாதிரி என்று சொல்லியிருக்கிறார். சின்ன சின்ன குறைகள் வந்துதான் போகும், ஆனால் நேராக பார்த்தால் சரியாகிவிடும். இதில் காசிப்தான் நிறைய இருக்கிறது” என்றார்.