நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான சாவகச்சேரி நீதிவானின் விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
சாவகச்சேரி நீதிமன்றில் நீதிவான் ஜெகநாதன் கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கி இடைக்காலக் கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து சட்ட மா அதிபர் திணைக்களத்தால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீது வரும் 9ஆம் திகதி ஆட்சேபனை சமர்ப்பணம் இடம்பெறுகிறது.
அதனால் உயர் நீதிமன்றின் முடிவைப்பெறுவதற்காக, நீதிவான் நீதிமன்றின் விசாரணையை அன்றைய தினத்துக்கு பின்பான அண்மித்த திகதியில் வழங்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட உறவுகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மன்றுரைத்தார்.
மனுதாரரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட சாவகச்சேரி நீதிவான்ஜே.கஜநிதிபாலன், வழக்கை வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தார்.
1996 ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ்.சுபாசினியின் ஏற்பாட்டில் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மனுக்களை நெறிப்படுத்தினார்.
2017ஆம் திகதி நவம்பர் மாதம் இந்த ஆள்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்த ஆட்கொணர்வு மனுக்களை பூர்வாங்க விசாரணையுடன் தள்ளுபடி செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் பல ஆட்சேபனைகளை முன்வைத்தது.
எனினும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனைத்து ஆட்சேபனைகளையும் நிராகரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விசாரணை ஒன்றை முன்னெடுத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு உரிய பரிந்துரையை வழங்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் சாவகச்சேரி நீதிவான்நீதிமன்றில் இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.