பலாலி விமான நிலையத்திற்கு யாழ் சர்வதேச விமானநிலையம் என்று பெயரிடுவதற்கு தீர்மானித்திருப்பதுடன், சர்வதேச பயணங்களுக்காக எதிர்வரும் 17 ஆம் திகதியளவில் விமானநிலையத்தைத் திறந்துவைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
பலாலி விமான நிலையத்திற்கு யாழ் சர்வதேச விமானநிலையம் என்று பெயரிடுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் பிராந்திய விமானநிலையமாக விளங்கிய யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த அபிவிருத்தி நிர்மாணப்பணிகளை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் பூர்த்திசெய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச பயணங்களுக்காக இந்த விமானநிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் எதிர்வரும் 17 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஏதேனுமொரு திகதியில் திறந்துவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்று மட்டங்களில் அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் யாழ் சர்வதேச விமானநிலையத்திற்கான சர்வதேச சிவில் விமானசேவை அமைப்பின் குறியீட்டு இலக்கம் வி.சி.சி.ஜே ஆகும். அதன் சர்வதேச விமானப்போக்குவரத்து அமைப்பின் குறியீட்டு இலக்கம் ஜே.ஏ.எப் ஆகும். அதேவேளை மட்டக்களப்பு விமானநிலையத்திற்கு மட்டக்களப்பு சர்வதேச விமானநிலையம் எனவும், இரத்மலானை விமானநிலையத்திற்கு கொழும்பு இரத்மலானை சர்வதேச விமானநிலையம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது இலங்கையில் உள்ள சர்வதேச விமானநிலையங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம், கொழும்பு இரத்மலானை சர்வதேச விமானநிலையம், யாழ் சர்வதேச விமானநிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமானநிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமானநிலையம் என்பவையே அவையாகும்.