ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட மற்றும் புலன் விசாரணைகளுக்கான மேலதிக ஆணையாளரினால் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல் உயர்கல்வி அமைச்சின் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, மேலதிக தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமிக்கு அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் திடீரெனப் பதவி விலக்கப்பட்டார்.
இதனையடுத்து புதிய துணைவேந்தர் பதவிக்காக கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த அதே நேரத்தில் செப்டெம்பர் 18ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக 2141/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் மூலம் தேர்தல் காலத்தில் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களையும் வெளியிட்டிருந்தார்.
2141/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஜனாதிபதித் தேர்தல் காலத்தினுள் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை ஆட்சேபித்து, முன்னாள் துணைவேந்தர் அனுப்பிய கடிதத்துக்கமைவாக நியமன நடைமுறைகளை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.