செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஓர் ஈழப் படத்துக்கு இந்தியாவில் தணிக்கைச் சான்று கிடைத்திருப்பதே வெற்றிதான்

ஓர் ஈழப் படத்துக்கு இந்தியாவில் தணிக்கைச் சான்று கிடைத்திருப்பதே வெற்றிதான்

24 minutes read

main photomain photomain photo

ஈழத்தமிழர்களின் பின்போர்க்கால வாழ்வியலைச் சித்தரிக்கும் அபூர்வமான திரைப்படைப்பாகப் பலத்த வரவேற்பை சினம்கொள் என்ற முழு நீளத்திரைப்படம் பெற்றுள்ளது. இதன் இயக்குநரான ரஞ்சித் ஜோசப் தனது மதிநுட்பமான திரையாடலால் (screenplay) இலங்கை ஒற்றையாட்சி அரசு தமிழ்க்கலைஞர்கள் மீது விதித்திருக்கும் மூன்று நிர்ப்பந்தங்களுக்கூடாகவும் சுழியோடியிருக்கிறார். அது மட்டுமல்ல, பதினோர் இடங்களில் ஒலியைச் சற்றே தணிக்கை செய்தால் போதும் என்ற நிபந்தனையோடு இந்தியாவின் தணிக்கைக் குழுவின் அங்கீகாரத்தை வென்றெடுத்த முதலாவது ஈழத்தமிழர் போராட்டம் சார்ந்த திரைப்படைப்பாகவும் சினம்கொள் விளங்குகிறது. முழுமையாக ஈழத்தமிழ்க் கலைஞர்களின் நடிப்பில் வடக்கின் மூன்று மாவட்டங்களில் எழுபது இடங்களில் சினம்கொள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத் திரையுலகத்தின் புகழ்மிகு இயக்குநர் பாரதிராஜாவும் இயக்குநர் வெற்றிமாறனும் பிரபல திறமைநடிகர் நாசர் அவர்களும் சினம்கொள் தயாரிப்பை வியந்து பாராட்டியுள்ளனர்.

பின்போர்க்காலத்து வன்னியின் துணிகரமான இளம் எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்பட்டிருக்கும் தீபச்செல்வன் சினம்கொள் திரைப்படத்தின் வசனத்தை அமைத்திருக்கிறார்.

தோல்விமனப்பான்மைக்குப் பலியாகித் தமது படைப்பாற்றலை ஆற்றுப்படுத்த இயலாது தத்தளித்துக்கொண்டிருக்கும் கலைஞர்களால் அல்லற்படுவதல்ல ஈழத்தமிழர் தேசம் என்ற செய்தியைச் சொல்லவந்திருக்கின்ற புதிய தலைமுறைப் படைப்பாளியாக கனடாவில் வதியும் ஈழத்து இயக்குநர் ரஞ்சித் ஜோசப் அவர்களைக் காணமுடிகிறது.

பங்கேற்ற பெரும்பாலான நடிகர்களுக்கு இதுவே முதல் திரைப்பட நடிப்பாக இருந்தபோதும், எங்குமே சலிப்புத் தட்டாத வகையில், இயல்பான நடிப்போடு, உயிரோட்டத்துடன் பார்ப்போரின் கவனத்தை முடிவுவரை ஈர்த்து வைத்திருக்கும் படைப்பாக, சினம்கொள் வெளிப்படுகிறது.

ஈழத்தமிழ் மக்களின், அவர்தம் முன்னாள் போராளிகளின், தற்கால வாழ்வியலை உலக மானுடத்துக்கும் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கும் எடுத்தியம்பும் மண்சார்ந்த படைப்பொன்றை ஆக்கவேண்டும் என்ற தனது பல வருட உந்துதலின் வெளிப்பாட்டைத் தருணம் தவறாமல் செய்து முடித்திருக்கிறார் ரஞ்சித்.

ஈழத்திரைக்குப் புத்துயிரை ஊட்டியிருக்கும் அந்த இயக்குநரின் உள்ளக்கிடக்கை தான் என்ன என்ற ஆர்வத்துடன் கூர்மை இணையம் அவருடன் ஒரு தொலைபேசி நேர்காணலை மேற்கொண்டபோது நாம் ஊகித்ததை விடவும் ஆழமானவர் அவர் என்பதை உணர முடிந்தது.

அவருடான நேர்காணல் வருமாறு:

“இருண்டு கிடக்கிற இந்த நந்திக்கடல். இந்த நந்திக்கடலில் இருந்து எங்களுக்கொரு கண்ணகி வருவாள். அவளுடைய கோபத்தைத் தீர்க்க எந்தக் கடலாலும் ஏலாது,” என்ற அசரீரி தங்கள் படத்தின் ஒரு கட்டத்தில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுகிறது, இந்த அசரீரி யாருடையது, இந்தக் கருத்தின் பின்புலத்தை விளக்கமுடியுமா?

ஒரு திரைப்படத்தில் பொதுவான கதையாடலை உருவாக்குகின்றோம். அந்தக் கதையின் ஊடாக கதாபாத்திரங்களை வைத்துச் சொல்ல வேண்டிய எல்லா விடயங்களையும் நாங்கள் சொல்லியிருந்தாலும், கதையில் எங்கேயாவது ஓர் இடத்தில் ஓர் இயக்குநருடைய, எழுத்தாளனுடைய தனிப்பட்ட கருத்து “டைரக்டர் கட்” என்ற வடிவில் முன்வைக்கப்படுவதுண்டு.

தமிழருடைய பண்பாட்டு இலக்கியங்களை நீங்கள் பார்க்கும்போது, பெண்களுடைய கதாபாத்திரங்கள் மிக ஆழமான கதாபாத்திரங்களாகவும் அந்தக் கதாபாத்திரங்கள் அடுத்த கட்டத்தை நோக்கிச்செல்வதையும் பலவிதமான காவியங்களில் படித்திருப்பீர்கள்.

அந்த அடிப்படையில்தான் நந்திக்கடலிலிருந்து எங்களுக்கு ஒரு கண்ணகி வருவாள் என்ற ஒரு கருத்தை ஓர் எழுத்தாளராக, ஓர் இயக்குநராக இந்தப் படத்தில் முன்வைக்கிறேன். இதை எனது தனிப்பட்ட கருத்தாகக் கூடச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், இன்று வாழக்கூடிய அனைத்து ஈழத்தமிழர்களுடைய ஒருமித்த கருத்தாகவே அது இருக்கிறது.

நீதி தவறியதால் கண்ணகி பாண்டிய மன்னனை இல்லாமல் ஆக்கினாள் என்பது வரலாறு. எங்களுக்கு எங்களது நீதி மறுக்கப்பட்டது. எங்கள் மக்கள் படுகொலை செய்யப்படும் போது சர்வதேசம் தனது கண்களை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தது.

அதாவது 2009 ஜனவரி காலகட்டத்தில் கிளிநொச்சிப் பகுதியிலிருந்து வெளியேறிய அரசசார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபை போன்ற எல்லோருமே எங்கள் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு அமைதியாக அனுமதியைக் கொடுத்துவிட்டுத்தான் வெளியேறியிருக்கிறார்கள்.

ஆகவே, எங்கள் மக்கள் மீதான இனப்படுகொலைக்கும் எங்களுடைய வீழ்ச்சிக்கும் இன அழிப்புக்கும் சர்வதேசமே முக்கியமான ஒரு காரணம் என்பதை நான் பார்க்கிறேன்.

எங்களுக்கு மறுக்கப்பட்ட இந்த நீதியை மீண்டும் நாம் பெற்றுக் கொள்ளுவோம் என்ற கருத்தும் இவ்வாறானதே.

தமிழருடைய பண்பாட்டு இலக்கியங்களை நீங்கள் பார்க்கும்போது, பெண்களுடைய கதாபாத்திரங்கள் மிக ஆழமான கதாபாத்திரங்களாகவும் அந்தக் கதாபாத்திரங்கள் அடுத்த கட்டத்தை நோக்கிச்செல்வதையும் பலவிதமான காவியங்களில் படித்திருப்பீர்கள்.

ஏன், இலங்கையின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் கூட விஜயன் இங்கு வருகை தந்தபோது அவனால் ஏமாற்றபட்டவள் ஒரு பெண்.

எங்களுடைய நீதிக்காக நிச்சயமாக ஒரு பெண் வடிவில் தான் நீதிக்கான போரட்டம் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் இது ஓர் இயக்குநருடைய அதீதமான ஆசையாகவும், கதைக்களத்தில் முன்வைக்கப்படும் கருத்தாகவும் தான் நான் இதைப் பார்க்கிறேன். எங்களுக்கு மறுக்கப்பட்ட நீதியைக் கேள்விக்குள்ளாக்கப் போவது இந்த நந்திக்கடலிலிருந்து வீழ்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களிலிருந்து எழப்போகின்ற ஓர் உன்னதமான சக்தியாகத்தான் இருக்கும்.

விடுதலைக்கான மிகப் பெரிய சக்தியே பெண்கள் தான். ஒரு நாட்டை நாம் தாய்நாடு என்கின்றோம். தாய்த்தேசம் என்கின்றோம், மொழியைத் தாய்மொழி என்கின்றோம். அந்த அடிப்படையில் எங்களுக்கான ஒரு நீதியை தாய்மை நிறைந்த பெண்களின் தலைமுறையால் பெற்றுக்கொள்வோம் என்று அந்த நந்திக்கடலிலிருந்து எங்களுக்கு ஒரு கண்ணகி வருவாள் என்பதன்மூலம் நான் வெளிப்படுத்துகிறேன்.

இயக்குநர் பாரதிராஜாவைப் போல இந்தப் படத்தைப் பார்த்த வேறு சினிமாத் துறை சார்ந்தவர்களின் விமர்சனம் எவ்வாறு வெளிப்பட்டிருக்கிறது என்று சொல்லமுடியுமா?

தமிழகத்திலிருந்து பலவிதமானவர்கள் இந்தத் திரைப்படத்தை இதுவரை பார்த்திருக்கிறார்கள். இயக்குநர் பாரதிராஜா, நாசர் போன்ற இன்னும் பலர். இதில் முக்கியமாக, பாரதிராஜா அவர்கள் உணர்வுரீதியாக, தமிழ்மொழி, விடுதலைப்போராட்டம் என்ற ரீதியில் எங்கள் கருத்தோடு ஒத்துப்போகக் கூடியவராகத்தான் இருப்பார்.

ஆனால், நாசரைப் பொறுத்தவரைக்கும் ஒரு மொழிக்குள் தன்னைச் சிறைப்படுத்திக்கொள்பவர் அல்ல. முழுமையாக ஒரு கலைஞராகவே தன்னை அடையாளப்படுத்தக் கூடியவர் அவர். தமிழ் நடிகர் என்பதில் அவர் என்றும் மாறுபடுவதில்லை. ஆனால், தான் ஒரு நடிகன் அதற்குப் பிறகுதான் தான் எந்த மொழியைச் சார்ந்தவன் என்பது அவரது கருத்தாக இருக்கும்.

அந்தமாதிரியான ஒருவரிடமிருந்து சினம்கொள் திரைப்படத்தைப் பற்றி வெளிப்பட்டிருக்கும் கருத்தை மிக முக்கியமானதாக நான் பார்க்கிறேன்.

ஈழம் சார்ந்த போராட்டத்தை, அந்த மக்களின் பிரச்சனைகளை நாங்கள் தெளிவாகப் பேசியிருப்பதாக நாசர் நம்புகிறார். இது சிங்கள மக்களிடமும் போய்ச்சேரவேண்டும் என்பது சிங்கள இயக்குநர்களின் கருத்தாக இருப்பதாகவும் நாசர் சொன்னார்

ஈழம் சார்ந்த பல திரைப்படங்களில் நடிக்கச் சொல்லி பலர் கேட்டிருந்தாலும், அந்தத் திரைப்படங்களில் மனம் ஒவ்வாததால் அவர் நடிக்க முன்வரவில்லை. ஆனால், இந்தச் சினம்கொள் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நாங்கள் நாசரை அணுகியிருந்தோம். நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார். பின்னர், நேரம் கிடைக்காததால் அவரால் நடிக்க முடியாமற் போய்விட்டது.

இந்தத் திரைப்படத்தைப் பார்த்தபின்னர், தான் நடிக்காமல் இருந்ததால் இதன் உண்மைத்தன்மை அப்படியே இருக்கிறது. தான் நடித்திருந்தால் அது நடிப்பாக மட்டுமே பார்க்கப்பட்டிருக்கும் நிலை தோன்றியிருக்கலாம் என்ற கருத்தைச் சொன்னார். தன்னை ஒரு நடிகனாகத்தான் மக்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் தான் நடிக்கவேண்டிய கதாபாத்திரத்தைத் திரையில் பார்த்தபோது அது இயல்பான கதாபாத்திரமாக வெளிப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. அதுவே அந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி என்றும், தான் நடித்திருந்தால் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை நீங்கள் இழந்திருப்பீர்கள் என்றும் நாசர் சொன்னார். இது அவருடைய முக்கியமான ஒரு கருத்து.

இலங்கையில் உள்ள சிங்கள இயக்குநர்களிடமும் அவருக்குத் தொடர்பு இருக்கிறது. பிரசன்னா விதானகே போன்ற பெரிய பெரிய இயக்குநர்களுடன் தொடர்பில் இருக்ககூடியவர். அவர்களிடத்தில் இந்த சினம்கொள் திரைப்படத்தை பற்றியும், இது எவ்வளவு முக்கியமான படம் என்பதைப் பற்றியும் நாசர் பேசியிருக்கிறார். இந்தப் படத்தைச் சிங்கள மொழியில் இலங்கையில் வெளியிடவேண்டும் என்ற கருத்தில் அவர்கள் ஆணித்தரமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

ஈழம் சார்ந்த போரட்டத்தை, அந்த மக்களின் பிரச்சனைகளை நாங்கள் தெளிவாகப் பேசியிருப்பதாக நாசர் நம்புகிறார். இது சிங்கள மக்களிடமும் போய்ச் சேரவேண்டும் என்பது சிங்கள இயக்குநர்களின் கருத்தாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

காசி ஆனந்தன் அண்ணா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் போன்றோரும் இந்தப் படத்தைப் பார்த்தார்கள்.

வெற்றிமாறனைப் பொறுத்தவரைக்கும் சினம்கொள்ளை ஈழத்திரையின் முக்கியமான ஒரு முதற்படைப்பாகவே தான் கருதுவதாகச் சொல்லியிருக்கிறார்.

திரைப்படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் ஈழத்திலிருந்து ஒரு முக்கியமான திரைப்படமாகவே இதைப் பார்க்கின்றனர். கதை சொல்லலில், ஈழத்தவர்களுடைய மொழியை எந்தவொரு இடத்திலும் சிதைக்காமல் காட்சிப்படுத்தலில், பொதுவான இந்திய சினிமாவின் அடையாளத்தைத் துறந்து, தனக்கான ஓர் அடையாளத்தோடு வரக்கூடிய திரைப்படமாகச் சினம்கொள் படத்தை அவர்கள் பார்க்கின்றனர்.

இவ்வாறான ஒரு திரைப்படத்தை இலங்கையில், அதுவும் குறிப்பாக தமிழர் தாயகத்தில், காட்சிப்படுத்துவது எவ்வாறு சாத்தியமாகியது?

இலங்கையின் திரைப்படங்கள் என்று சொன்னால் சிங்களத் திரைப்படங்கள் தான் (உலக அரங்கில்) இன்று அடையாளப்படுத்தப்படுகின்றன. தமிழர்களுக்கான ஒரு திரை ஊடகம் என்பது இன்று இலங்கையில் கிடையாது.

ஆனால், இந்தச் சூழலில் நாங்கள் தமிழர் தாயகத்தில் எங்களுடைய படத்தை எடுப்பதற்கான சூழலை உருவாக்குவது என்பது இலகுவானதாக இருக்கவில்லை. காரணம், இதுவரைகாலமும் தமிழர்களுடைய தாயகப் பிரதேசத்தில் முழுமூச்சிலான திரைப்படங்கள் – விடுதலைப் போராட்டக் காலங்களில் பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், முழுமையான படைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் அங்கு இருந்திருந்தாலும் – அவை நிறைவேறியிருக்கவில்லை.

இலங்கையின் இறைமைக்கு எதிராக எதுவும் இருக்கக்கூடாது. இரண்டாவது முப்படைக்கு எதிராக எந்த ஒரு கருத்தும் இருக்கக் கூடாது. மூன்றாவதாக பிரிவினைவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை திரைப்படங்களில் பேசக்கூடாது. இந்த மூன்று காரணிகளைத் தவிர்த்துத்தான் திரைக்கதையை எழுதவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எங்கள் மீது இருந்தது

இந்தக் காலகட்டத்தில் இந்தத் திரைப்படத்தை உருவாக்க நாங்கள் அங்கே போயிருந்த போது பலவிதமான பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. முதலாவதாக இந்தத் திரைக்கதையை நாங்கள் எழுதி இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன அமைப்புக்கு அனுப்பவேண்டும். அவர்கள் திரைக்கதையைப் படிப்பதற்கு முன்பாகவே எங்களுக்கு மூன்று முக்கியமான காரணிகளை சொல்லிவிட்டார்கள்.

முதலாவதாக, இலங்கையின் இறைமைக்கு எதிராக எதுவும் இருக்கக்கூடாது. இரண்டாவது முப்படைக்கு எதிராக எந்த ஒரு கருத்தும் இருக்கக் கூடாது. மூன்றாவதாக, பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களைத் திரைப்படத்தில் பேசக்கூடாது. இந்த மூன்று காரணிகளைத் தவிர்த்துத்தான் திரைக்கதையை எழுதவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எங்கள்மீது இருந்தது.

முடிந்தளவுக்கு ஒரு திரைக்கதையை உருவாக்கி அவர்களுக்கு அனுப்பி இருந்தோம். அவர்கள் அதைப் பார்த்துப் படித்துவிட்டுத்தான் எங்களுக்கு அனுமதியை வழங்கினார்கள். அந்த அனுமதிகூட எங்களுக்கு அவ்வளவு விரைவாகக் கிடைத்துவிடவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நாங்கள் காத்திருந்தோம். பலவிதமான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டோம். பல கேள்விகள் எங்களிடம் தொடுக்கப்பட்டன.

ஏன் இந்தத் திரைப்படத்தை உருவாக்குகிறீர்கள். கதாநாயகனின் கதாபாத்திரம் ஏன் இப்படி இருக்கிறது, ஏன் அப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் வினவினார்கள். மேலும், நீங்கள் திரைப்படத்தில் சொல்வது பொய்யாக இருக்கிறது போன்ற பலவிதமான கேள்விகளைச் சந்தித்தோம். அதன் பிறகே அனுமதி கிடைத்தது.

சினம்கொள் திரைப்படத்தின் கதை வடமாகாணத்தில் நடைபெறுகிறது. முக்கியமாக யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், என்ற மூன்று மாவட்டங்கள் அடங்கிய பிரதேசத்தில் கதை நடப்பதாக நாங்கள் முடிவெடுத்தோம்.

இறுதி யுத்தத்தில் கைதாகி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையாகி வரும் ஒரு போராளியின் பயணம்தான் சினம்கொள்.

அவனது பயணம் கிளிநொச்சி றெயில் நிலையத்தில் தொடங்கி இறுதியில் யாழ்ப்பாணம் சென்றடைவதாக கதை இருக்கும். கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களின் ஊடாக இந்தப் பயணம் இடம் பெறுவதாக வடிவமைக்க முடிவெடுத்தோம்.

காட்சிப் பதிவுக்குத் தேவையான இடங்களை (ஒரு சிந்தனையின் அடிப்படையில்) தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

இந்தத் திரைப்படத்தை உருவாக்கும் காலத்தில் நாங்கள் பல இடையூறுகளைச் சந்தித்தோம். இலகுவாக தமிழரின் பிரச்சனைகளைப் பேசவோ, எங்கள் விடுதலைப் போராட்டத்தின் கருத்துக்களைக் கூறவோ, எந்த ஒரு பிரச்சனையுமின்றி திரைப்படத்தை இலங்கையில் உருவாக்கமுடியுமென்பது சாத்தியமற்றது. இவை அனைத்தையும் தாண்டியே நாங்கள் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

மூன்று மாவட்டங்களிலுமான சினம்கொள் படத்தின் காட்சிப்படுத்தல் பற்றி மேலும் விபரமாகச் சொல்லமுடியுமா?

சினம்கொள் திரைப்படத்தை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், இந்த மூன்று மாவட்டங்களில் எடுத்திருக்கிறோம். எனது மண்ணான ஈழத்திலிருந்து விலகிக் கனடா போகும்போது எனக்குத்தெரிந்த ஊர்கள் என்பது நீர்வேலி, இளவாலை, கோப்பாய், இருபாலை, யாழ்ப்பாணம். அவ்வளவுதான் எனக்கு தெரியும். ஆனால் இந்த சினம்கொள் திரைப்படத்துக்கான ஒரு பயணத்தை நாங்கள் ஆரம்பித்தோம்.

இந்த இடங்களில் ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவங்கள் நடந்திருக்கிறது. 1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் நடத்திய திருநெல்வேலி தாக்குதல். அந்த இடத்தில் ஒரு காட்சியை படம் பிடித்துள்ளோம்

இங்கு ஒரு முக்கியமான விடயத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற எழுபதுக்கும் மேற்பட்ட இடங்கள் அத்தனையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலத்தின் முக்கியமான சம்பவங்கள் நடந்த இடங்கள்.

போராட்டம் நடந்த அந்த இடங்களை எப்படி நீங்கள் ஒரு பார்வையாளனுக்குக் காண்பிக்க முடியுமெனச் சிலர் என்னிடம் கேட்டனர். சில இடங்களில் சொல்லமுடியாது. இருந்தாலும் ஒரு இயக்குநராக நான் ஆசைப்பட்ட ஒரு விடயம் என்னவென்றால், இந்த இடங்களில் முக்கியமான வரலாற்றுச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

உதாரணமாக, 1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்திய திருநெல்வேலி. அந்த இடத்தில் ஒரு காட்சியைப் படம் பிடித்துள்ளோம்.

கோட்டைக்கு முன்னால் இருக்கும் அந்த முற்றவெளிப் பகுதியில் ஒரு காட்சியைப் பதிவு செய்துள்ளோம். மேலும் திலீபன் அண்ணா உண்ணாவிரதமிருந்த இடத்தைப் பதிவு செய்துள்ளோம். இப்படியாக விடுதலைப் போராட்டம் நடந்த, மிக முக்கியமான போராளிகள் நடந்து, விழுந்து, மரணித்த இடங்களை இத்திரைப்படக் காட்சிகளில் பதிவு செய்துள்ளோம். இம்ரான் பாண்டியன் போன்ற போராளிகள் தங்களுடைய உயிரை விட்ட இடங்களில் கூட இந்தக் காட்சிப் பதிவு இடம்பெற்றது. அதை என்னுடைய ஒரு ஆசையாகவே நான் எடுத்துக்கொண்டேன். சினம்கொள் திரைப்படத்தில் எழுபதுக்கும் மேலான இடங்களைப் பதிவு செய்துள்ளோம். அந்த இடங்களை வரலாற்றில் பதிவு செய்யவேண்டும், அந்த இடங்களில் எமது கதையின் காட்சிப்படுத்தல் இருக்கட்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது.

தொண்டைமானாறு பாலமாக இருக்கட்டும், அதற்கு முன்னால் இருக்கக் கூடிய ஒரு முக்கியமான வீதி. இப்படிப் பல இடங்கள்.

கிளிநொச்சியில் 1980களுக்குப் பிறகு ஒரு தலைமுறைக்கு றெயில் நிலையமே தெரியாமல் இருந்த இடத்தில்தான் மிக முக்கியமான சண்டைகள் நடந்திருக்கிறது. ஒரு தலைமுறைக்கே அங்கு ஒரு றெயில்வே நிலையம் இருந்தது தெரியாது.

அதேமாதிரி, முள்ளிவாய்க்கால், கேப்பாப்புலவு, நந்திக்கடல் ஓரம், மேலும் யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, மணற்காடு, இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

தீவுப் பகுதிகளாக இருக்கக்கூடிய அராலி, ஊர்காவற்துறை, மண்டைதீவு, சிறுத்தீவு.

கடலில் குருநகர் பகுதியிலிருந்து ஐம்பது படகுகளில் பயணித்து கௌதாரிமுனை வரை இப்படத்தில் பதிவு செய்துள்ளோம். வரலாற்றில் மிக முக்கியமான சோழனால் உருவாக்கப்பட்ட கோயில் இன்றும் கௌதாரிமுனைப் பகுதியில் இடிந்த நிலையில் காணப்படுகின்றது. சுமார் ஆயிரத்தைநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் என்று சொல்கிறார்கள். அப்படி முக்கியமான இடமான கௌதாரிமுனை யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவர்கள் மிக எளிதாக யாழ்ப்பாணத்தைக் கைக்குள் கொண்டுவர முடியும் என்பார்கள். அந்தப் பகுதியிலும் இத்திரைப்படத்தின் மிக முக்கியமான காட்சிகளைப் பதிவு செய்துள்ளோம்.

இவ்வாறு மூன்று மாவட்டங்களின் முக்கியமான நிலப் பிரதேசங்களை திரைப்படத்துக்காக காட்சிப்படுத்தியுள்ளோம்.

தோல்விமனநிலைக்குப் பலியாகாமல் பின் போர்க்காலத்தின் ஓர்மத்தை வெளிக்கொணர்ந்த ஓர் அபூர்வமான கலைப்படைப்பாக சினம்கொள் படத்தைப் பார்க்கின்றபோது உணரமுடிந்தது. இது குறித்த தங்கள் மனப்பாங்கை விபரியுங்கள்.

உங்கள் கேள்வியில் இருப்பதுபோல் நாங்கள் தோற்றுப் போனவர்கள் என்ற அந்த மனப்பான்மை அதிகமான ஈழத்தமிழர்களின் மத்தியில் இருப்பதாகவே நான் உணர்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் தோற்றுப்போனவர்கள் என்ற உணர்வு என்றைக்குமே எனக்கு இருந்தது கிடையாது.

எங்களது அடுத்தடுத்த தலைமுறைகள் தங்களது சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஓர் உன்னதமான விடுதலை வேட்கையை சினம்கொள் திரைப்படத்தில் நாங்கள் முன்வைத்துள்ளோம்

நாம் எதுவும் இல்லாமல்தான் இந்த விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தோம். ஆனால் அந்தப் போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டு சர்வதேசத்திலே ஒலிக்கக்கூடிய ஒரு சூழலை நாம் உருவாக்கியிருக்கின்றோம். அப்படிப்பட்ட ஒரு போராட்டம் என்றுமே தோற்றுப் போவது கிடையாது.

இன்று இருக்கும் சூழலைத் தாண்டி நாங்கள் மீண்டும் ஒரு அரசியல் ரீதியாகவோ, ஏதோ ஒரு ரீதியில், எங்களுக்கான விடுதலையைப் பெற்றெடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் இங்கு தோல்வி என்பதற்கான எண்ணம் எங்களுக்கு இருக்கவேண்டியதன் அவசியமே இல்லை.

எங்களுடைய பிரச்சனைகள் தார்மீகமானவை என்பதோடு, எங்களுடைய கோரிக்கைகள், எங்கள் மண்ணில் நாம் வாழ வேண்டும்; எங்களது மண்ணில் நாங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும்; எங்களது அடுத்தடுத்த தலைமுறைகள் தங்களது சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே. இந்த உன்னதமான விடுதலை வேட்கை கொண்டு தான் இந்தப் போராட்டம் உருவக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் எங்களது விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்தது, நடந்து கொண்டும் இருக்கிறது. இந்த மக்களுடைய பிரச்சனைகளைப் பேசவேண்டிய ஒரு படைப்பாக சினம்கொள் உருவாகும் போது அதில் உண்மைத்தன்மை நிறைய இருக்கும். அவர்களுடைய தார்மீகத்துக்கான, அவர்களுடைய விடுதலைக்கான தேவைக்கான விடயங்கள் நிச்சயமாக சினம்கொள்ளில் இருக்கின்றன.

உண்மைக்கான போராட்டத்தையும், உணர்வுகளையும், அந்த மக்களின் உண்மையான வலிகளையும் பேசும்போது, அந்த வலிகளுக்கூடாக ஒரு சிறப்பான படைப்பு உருவாகும் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயமாகவே இருக்கும்.

திரைப்படத்தில் போராளியாக இருந்தாலும் சரி, மக்களாக இருந்தாலும் சரி, இந்தத் திரைப்படத்தில் பங்கேற்றிருக்கக்கூடிய ஏனைய கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி, அவர்களது மனதில் ஒரு இடைநிலையைத்தான் உணர்கிறார்களே தவிர அவர்கள் தோற்றுப் போனவர்களாக எண்ணுவது இல்லை.

நாம் விழுந்து விட்டோம் இனி எழ முடியாத சூழலில் இருக்கிறோம் என்ற எண்ணப்பாடு இருக்கமுடியாத ஒரு சூழலைத் தான் இந்தத் திரைப்படம் சித்தரிக்கிறது. அந்தவகையிலே சினம்கொள் கதாபாத்திரத்தின் ஊடாக ஒரு நம்பிக்கை தெரிவிக்கும் வெளிப்பாடாகவே இருக்கும். நாங்கள் தோற்றுவிட்டோம் என்ற கேள்வியை உடைத்திருக்கிறோம். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முடிவினூடாகவும் கூட அவர்கள் பேசிவிட்டுப் போகக்கூடிய எல்லாமே ஒரு நம்பிக்கையின் வெளிப்பாடாகவே இருக்கிறது.

ஒரு புலம் பெயர் ஈழத்தமிழ் இயக்குநரால் இந்தப் படம் இயக்கப்பட்டிருப்பதான ஓர் உணர்வு இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஏற்படவில்லை. அந்த அளவுக்குத் தங்களால் இயக்கமுடிந்தமைக்கான முன் தயாரிப்பு பற்றி சொல்லமுடியுமா?

சினம்கொள் திரைப்படத்தின் முன் தயாரிப்பு பற்றி சொல்லவேண்டுமானால் நான் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னால் சென்று இதைப் பற்றிப் பேசவேண்டும்.

நான் கனடாவில் படித்தது திரைப்படத்துறை சம்பந்தப்பட்டதுதான். சினிமாவின் மீது ஓர் ஆர்வம் எனக்கு இருந்தாலும் எங்களுடைய மண்சார்ந்த கதைகளையும், எங்களுடைய ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும் சர்வதேச சமூகத்துக்குத் திரை மூலம் கொண்டு போகவேண்டும் என்ற கருத்து என்னுள் உருவாகியிருந்தது.

இதற்கு முக்கிய காரணம் 2005 ஆம் ஆண்டு சுனாமியின் ஓராண்டு நினைவுநாளுக்குத் தாயகத்துக்கு சென்றிருந்த வேளையில் அங்கு இருந்த முக்கியமானவர்களோடு இதைப் பற்றிக் கதைக்கும் வாய்ப்பு உருவாகியமையே.

எங்கள் தேச விடுதலைப் போராட்ட அவசியம் பற்றியும் நாம் அடுத்த தலைமுறைக்கு அதை எப்படிக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். அடுத்த சந்ததியினருக்கு மட்டுமில்லாமல் இந்த உலகில் வாழும் வேற்று இன மக்களிடமும் எங்களது உரிமை சார்ந்த இந்தப் போராட்டத்தின் தேவையைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு சினிமா ஒரு முக்கிய ஊடகமாகப் பயன்படும் என்ற ஒரு கருத்தும் அங்கு பேசப்பட்டது.

ஒரு மண்ணின் விடுதலைப்போராட்டத்தில் ஆயுதப்போராளிகள் விடுதலைக்காக எந்தளவுக்குப் போராடுகிறார்களோ அதே அளவுக்கு அந்த மண்ணைச் சார்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் என எல்லாருமே தன் துறை மூலம் விடுதலைக்காகப் போராட வேண்டும் என்ற கருத்து அங்கு முன்வைக்கப்பட்டது.

அந்த அடிப்படையிலே, சினிமா என்பது தற்போது சர்வதேச தளத்தில் ஒரு முக்கியமான ஊடகமாக இருக்கிறது. வரலாற்றிலே நடந்த முக்கியமான சம்பவங்களும் கதைகளும் திரைப்படங்கள் மூலமாக இன்றைய தலைமுறைக்கு அது கடத்தப்படுகிறது.

அந்த வகையில் எங்கள் தேச விடுதலைப் போராட்ட அவசியம் பற்றியும் நாம் அடுத்த தலைமுறைக்கு அதை எப்படிக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

அடுத்த சந்ததியினருக்கு மட்டுமில்லாமல் இந்த உலகில் வாழும் வேற்று இன மக்களிடமும் எங்களது உரிமை சார்ந்த இந்தப் போராட்டத்தின் தேவையைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு சினிமா ஒரு முக்கிய ஊடகமாகப் பயன்படும் என்ற ஒரு கருத்தும் அங்கு பேசப்பட்டது.

ஹோட்டல் ருவாண்டா என்ற திரைப்படம் ருவாண்டாவில் நடந்த அந்த இனப் படுகொலையைச் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்த ஒரு காரணமாக இருந்தது. அதைப் பார்த்த பிறகுதான் சர்வதேச மக்களுக்கு அந்த நாட்டில் நடக்கும் இனப்படுகொலையின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

வியட்நாமுக்கும் அமெரிக்காவுக்கும் நடந்த சண்டை என்று கேள்விப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் கம்போடியாவில் அமெரிக்க இராணுவம் இனப்படுகொலையை நடத்தியது என்பதை வெளிக்காட்டிய ஒரு திரைப்படமாக கில்லிங் பீல்ட்ஸ் இருந்தது.

இந்த அடிப்படையில் எங்களது விடுதலைப் போராட்டத்தை, ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையை, உரிமைப் போராட்டத்தை, சர்வதேசத் தளத்தில் கொண்டு போவதற்கு திரைப்படம் ஒரு முக்கிய ஊடகமாக இருக்கும் என்பதை முன்வைத்து, அந்த ஒரு காரணத்திற்காக இயங்க வேண்டும் என்ற ஓர் ஆவலில் தான் நான் இந்தியா சென்று திரைப்படம் சம்பந்தமாக மேலும் கற்றுக்கொண்டேன்.

தொடர்ந்து எங்களுடைய மண்ணுக்கான திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டேன். பத்து ஆண்டு போராட்டத்துக்கு பிறகு சினம்கொள் திரைப்படத்தை உருவாக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இந்தச் சினம்கொள் கதையை முதலில் ஒரு ஆவணப்படமாகவே தயாரிக்க முடிவு செய்தேன். தன்னுடைய நிலத்தை இழந்து தாம் வாழ்ந்த பூமியில் இருந்து துரத்தப்பட்ட மக்களின் பிரச்சனைகள் என்பதைப் பேசவேண்டிய ஓர் ஆவணமாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன்.

இராணுவத்தினுடைய முகாம்களாக செயல்படும் நிலங்கள், மக்களின் வீடுகள், காணிகள் கையகப்படுத்தப்பட்ட உடைமைகள், அங்கிருந்து துரத்தப்பட்ட மக்கள் தற்போது எங்கு வாழ்கிறார்கள் என்பவற்றைப் பேசும் திரைப்படமாகத் தான் முதலில் முயற்சித்து யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டோம்.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் கழித்து, புலிகளின் தலைநகரமாக முன்னர் இருந்த, கிளிநொச்சி மாவட்டம் தற்போது சென்று பார்க்கையில் பல்வேறான மாறுதல்களுக்கு உள்ளாகியிருந்தது.

இவற்றைச் சர்வதேசத்துக்குக் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்ற அடிப்படையில் தான் சினம்கொள் என்ற திரைப்படத்தை உருவாக்க முயற்சித்தோம்.

ஆரம்பக்கட்ட வேலைகளை தொடங்கினோம், முதலில் ஒரு குறுகிய முதலீடு தான் கிடைத்தது. பிறகு மேலும் இரண்டு மூன்று நபர்களின் துணையோடு சேர்ந்து ஒரு முழுநீளத் திரைப்படமாகவும், முழுக்க முழுக்க இதயத்திலே காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

2017 ஆண்டு இலங்கையில் இருந்த சூழலில் எங்களுக்கு ஒரு படைப்பை உருவாக்கிட நேர்ந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்று யுத்தத்துக்கு பிறகான காலகட்டத்தில் எங்களுடைய மக்களின் வாழ்வியலும் எந்த சூழ்நிலையில் இன்று இருக்கிறது என்பதை சர்வதேச சமூகத்துக்குச் சொல்லவேண்டிய உந்துதலின் காரணமாகத்தான் சினம் கொண்டு திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.

இந்த முழுநீளத்திரைப்படத்தை தயாரிக்கவேண்டும் என்ற ஆவல் தங்களுக்கு எப்போது, எவ்வாறு ஏற்பட்டதென்ற பின்னணியை சொல்வீர்களா?

பதின்மூன்று வயதில் என்னுடைய தாயகத்தை விட்டு வெளியேறினேன். 1990ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் என் தாய்நிலத்தை விட்டு வெளியேறி கொழும்பில் இரண்டு ஆண்டுகள் வசித்தபிறகு கனடாவிற்கு வந்து இங்கு நான் 25 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு புலம்பெயர் தமிழனாக கனடாவின் கலாச்சாரத்தில்தான் அதிக ஆண்டுகள் என்னுடைய காலம் கழிந்திருக்கிறது.

இன்று வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய எனனைப்போன்ற தலைமுறையினரிடம் தாங்கள் ஒருவேளை தமது தாயகத்தில் வாழ்ந்திருந்தால் இந்த அளவுக்குத் தமது மண்ணை நேசித்திருப்போமா என்ற சந்தேகம் இருப்பதைக் கூட நான் பார்த்திருக்கிறேன். இளம் வயதில் எங்களுக்குள் விதைக்கப்பட்ட அந்த மண் சார்ந்த பண்புகள் என்றுமே அழிந்து போகாது

இந்தத் திரைப்படத்தைப் பார்த்த அனேகமானவர்கள் கேட்கும் கேள்வி ஒன்றிருக்கிறது. ஈழத்து வாழ்வியலும், அந்த கலாச்சாரமும், அந்த மண் சார்ந்த விழுமியங்களும் இயல்பாக இந்தப்படத்தில் கையாளப்படுவதென்பது வெளிநாட்டில் இருந்து வந்த ஓர் இயக்குநரால் எப்படிச் சாத்தியமாகியது என்ற கேள்வியே அது.

நான் பதின்மூன்று வயதில் இந்த மண்ணை விட்டு வெளியேறியிருந்தாலும், அப்போது நான் எனது மண்ணைப் பற்றி அறிந்து கொண்டதை விடப் புலம்பெயர்ந்து வாழும்போதுதான் என்னுடைய மண்ணைப்பற்றியும் என்னுடைய தாயகத்தின் அழகைப்பற்றியும் அதற்குத் தேவையான விடுதலை பற்றியும் அதன் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் நிறைய அறிந்துகொண்டேன். என்னைப்போன்ற பலர் இவ்வாறே எமது தாயகத்தைப் பற்றிக் கற்றுக் கொண்டோம்.

இன்று வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய எனனைப்போன்ற தலைமுறையினரிடம் தாங்கள் ஒருவேளை தமது தாயகத்தில் வாழ்ந்திருந்தால் இந்த அளவுக்குத் தமது மண்ணை நேசித்திருப்போமா என்ற சந்தேகம் இருப்பதைக் கூட நான் பார்த்திருக்கிறேன்.

அப்படியாக, தமது மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்து அடுத்த நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்து வாழ்ந்த இளையோர் தமது மண்ணையும், தேசத்தையும், மற்றைய எல்ல விடயங்களையும் அறிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இளம் வயதில் எங்களுக்குள் விதைக்கப்பட்ட அந்த மண் சார்ந்த பண்புகள் என்றுமே அழிந்து போகாது.

நான் கனடாவில் குடி பெயர்ந்து வாழ்ந்தாலும் எனது தேசம் என்பது தமிழீழம் தான். காசி ஆனந்தனுடைய பாடல் வரிகளில் ஒன்று சொல்வது போல இந்த உலகத்தில் எங்குதான் வாழ்ந்தாலும் தன் அன்னை மண்ணின் மடியில் வாழ்வது போன்ற சுகமும் நிம்மதியும் எங்கேயுமே, என்றைக்குமே, எவ்வளவு காசு கொடுத்தாலும் கிடைக்கப்போவதில்லை.

அந்த அடிப்படையில் உணர்வுரீதியாக எனது மண், எனது விடுதலைப்போராட்டம், என்னுடைய மக்கள், என்னுடைய போராளிகள், என்னுடைய தலைவர் என்ற அந்த ஓட்டத்தினூடாகத்தான் நாங்கள் கடந்த காலங்களிலிருந்து நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, எங்களுக்கான ஒரு படைப்பை உருவாக்கும் போது நாங்கள் ஒருபோதும் அந்நியப்படப்போவதில்லை.

எமது நிலத்தைப் பற்றிய எனது மக்களின் கதையை எடுப்பதற்கான தயாரிப்புகளை எமது விடுதலைப் போராட்டமே எமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. இந்த உலகில் இன்று பரவி வாழும் அத்தனை ஈழத்தமிழ் இளைஞர், யுவதிகளுக்குமே, அவர்கள் அந்த மண்ணிக்குச் சென்றிருக்காவிடினும், அவர்களது வரலாற்றையும் அந்த மண்ணின் தேவையையும் விடுதலைப் போராட்டமே அவர்களுக்கு மிகச் சிறப்பாகக் கற்றுத் தந்திருக்கிறது.

சினம்கொள் திரைப்படத்தில் ஈழமக்களின் யதார்த்தத்தைக் வெளிக்கொண்டுவருவதில் இன்னொரு முக்கிய காரணம் எழுத்தாளர் தீபச்செல்வன். அவரின் பங்கு பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அந்த மண்ணிலே தொடர்ந்து விடுதலைக் கருத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர். விடுதலைப்போராட்ட காலத்தில் பல எழுத்தாளர்கள் போராட்டத்தைப் பற்றி எழுதியிருந்தாலும் தற்போது தடம்மாறி விடுதலைப் போராட்டத்துக்கே எதிரானவர்களாக மாறிவிடும் நேரத்தில் விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தையும் ஆதரவான கருத்துக்களையும் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் தீபச்செல்வன் ஒருவர். இந்தத் திரைப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை அவர்தான் எழுதியிருக்கிறார்.

அவருக்கும் எனக்குமான பயணம் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்கிறது. அவருடன் தொடர்ந்து பயணிக்கையில் நான் அறியாதிருந்த, விட்டுப் போயிருந்த மேலும் சில விடயங்களை, பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த விடயங்களை, அறிந்து கொள்ளும் சூழல் இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, எப்படி ஒரு புலம்பெயர்ந்த தமிழன் ஆகிய உங்களால் ஈழத்தில் நடக்கும் வாழ்வியலை முடிந்த அளவு சிறப்பாக கொண்டு வரமுடிந்தது என்று கேட்டால் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடம் தமது மண் சார்ந்த தேடலையும் அதன் மீது இருக்கும் காதலையும் தாயகத்தில் நடந்தேறிய விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்று தான் நான் சொல்வேன். நாம் எம் மண்ணை விட்டு விலகுவதில்லை.

சினம்கொள் திரைப்படத்தில் ஈழத்தமிழ்க்கலைஞர்களினதும் தமிழகக் கலைஞர்களதும் வகிபாகம் எவ்வாறு இருக்கிறது?

சினம்கொள் திரைப்படத் தயாரிப்பைத் தமிழகத்தில் இருக்கும் சக தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் என எல்லாவிதமான தொழில்நுட்பக் கலைஞர்களையும் தாயகத்துக்கு வரவைத்து மேற்கொண்டோம்.

ஆனால், இந்தப்படத்தில் இருவரைத் தவிர மற்றைய நடிகர்கள் அனைவருமே வடமாகாணம், கிழக்கு மாகாணம், கண்டி ஆகிய இலங்கைத் தீவின் பகுதிகளில் வாழும் ஈழத்தமிழர்களே நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடித்திருப்பவர்களில் சிலரைத் தவிர மீதம் எல்லோருக்கும் இது முதல் திரைப்படம். சிலருக்கு இதற்கு முன்னால் நாடகங்கள் நடித்திருக்கும் அனுபவம் இருந்தாலும் சினம்கொள் திரைப்படத்தின் மூலமாகவே இவர்கள் நடிகர்களாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளனர்.

திரைப்படத்துக்கு ஒளியமைப்பு செய்தவர்கள் முழுக்க முழுக்கச் சிங்களக் கலைஞர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கொழும்பிலிருந்து தான் அவர்கள் வரவைக்கப்பட்டனர்.

தமிழீழப் பிரதேசத்தில் இன்னும் முழுவதுமாக திரைப்படம் எடுக்க முறையான உபகரணங்கள் இல்லை. அந்த வகையில் ஈழத்தமிழர்கள் நடிகர்களாகவும், தமிழகத் தமிழர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகவும், ஒலியமைப்பு மற்றும் ஒப்பனையில் சிங்களக் கலைஞர்களும் இணைந்து ஒரு கூட்டு முயற்சியாகவே இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

சினம்கொள் நிலத்தைப் பற்றி மட்டுமல்ல, எதிர்காலச் சந்ததியின் கல்வியைப் பற்றியும் அடுத்த தலைமுறையின் ஒழுக்கத்தைப் பற்றியும் கூடப் பேசவிழைகிறது. இவ்வாறு செய்கின்றபோது ஒரு பிரச்சாரத் தொனி வெளிப்படாமல் அதை நுட்பமாகக் கையாண்டிருக்கிறீர்கள். அதைப் பற்றி சிறிது விளக்கமுடியுமா?

இந்தக் கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது. உண்மையை எளிமையாகப் பேசுவதென்பதே அது. உதாரணமாக, எங்களது தேசியத் தலைவரின் உரையைச் சுட்டிக்காட்டலாம். விடுதலைப் போராட்டத்தையும், மக்களின் பிரச்சினைகளையும், சர்வதேச நிலைப்பாட்டையும், எங்களுக்கு எளிமையாக எடுத்தியம்புவதாக அவரது உரை இருக்கும். இயல்புநிலையை அதிலிருந்துதான் நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம்.

சமீபத்தில் தமிழகத்தில் இருக்கும் கலைஞர்களிடம் பேசுகையில் இதைக் குறிப்பிட்டேன். ஒரு படத்தின் நாயகன் தனது கிராமத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றாலே, அவனது உடல் மொழி மற்றும் கருத்துக்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட வீரியத்துடன் தமிழக சினிமாவில் காட்டப்படும். இதிலிருந்து எமது அணுகுமுறை வேறுபடுகிறது.

இந்தத் திரைப்படத்தில் நீங்கள் சொல்லக்கூடிய அரசியல் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால், ஒரு போராளியின் மூலம் அதை மிகவும் இயல்பாக சொல்கிறீர்களே என்று என்னிடம் அவர்கள் கேட்கும்போது, அதற்குப் பதிலாக நான் சொல்வது, எங்களுடைய தளபதிகளின் வீரத்தை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்கள் சண்டையின் போதும் மிக இயல்பாகவே சண்டையை விளக்கிக் கொண்டிருப்பார்களாம். நிறைகுடம் தளம்பாது என்ற ஒரு பழமொழி உண்டு, அதைப் போலவே அவர்கள் இருந்தார்கள். இயல்பான வாழ்வியலை நாங்கள் அவர்களிடத்தில் தான் கற்றுக் கொள்கிறோம். மிகப் பெரிய சாதனையாளர்கள் என்றைக்குமே தங்களைப் பற்றிய விவரங்களைப் பெரிதாக வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.

பொதுவாக உலக சினிமாக்களிலும் போராளிகளின் கதாபாத்திரம் ஆணித்தரமானதாக புரட்சிகரமான சிந்தனையைச் சொல்லும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் திரைப்படங்கள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றில் இருந்தும் இது வேறுபடுகிறது.

சினம்கொள் திரைப்படத்தில் ஒரு போராளி தனது அடுத்த தலைமுறையோடு கல்வியைப் பற்றிப் பேசியிருக்கிறார். இந்த உலகத்தைக் கல்வியால் தான் வெல்ல முடியும் என்பதை எளிமையாகச் சொல்லிவிட்டுப் போயிருப்பார். அதுவும் ஒரு தந்தைக்கும் மகனுக்குமான ஓர் இயல்பான உரையாடலில் அதைப் பதிவு செய்திருப்பார். மிகப் பெரிய கருத்துகளை சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள்.

ஈழத் தமிழர்கள் பொதுவாகவே மிகவும் இயல்பாகப் பேசக்கூடியவர்கள். உணர்ச்சிவசப்படக்கூடிய சூழல் அதிகம் இருப்பதில்லை. எங்களது போராளிகளின் மூலமாகவும் தலைவர் மூலமாகவும் அதை நாம் கற்றுக் கொண்டோம். அதைப்போலவே தான் படத்தின் கதாபாத்திரங்கள் மிகவும் இயல்பாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

சினம்கொள் திரைப்படத்திற்கு இந்திய தணிக்கைச் சான்றிதழ் கிடைத்திருக்கிறதாக அறிகிறோம். அப்படியானால், முற்றுமுழுதாக ஈழத்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற முதலாவது ஈழத் தமிழர் போராட்டம் சார்ந்த திரைப்படமாக இது அமைகிறதா? இது எவ்வாறு சாத்தியமாகியது?

ஈழம் சம்பந்தப்பட்ட பல திரைப்படங்கள், உதாரணத்திற்கு ஆணிவேர் போன்ற திரைப்படங்கள், ஈழத்திலே உருவாக்கப்பட்டபின்னர் இந்தியாவில் தணிக்கைக்காக அனுப்பப்பட்டன. ஆனால், தணிக்கைக் குழுவால் அவற்றுக்கான அனுமதி நிராகரிக்கப்பட்டது. தேன்கூடு என்ற திரைப்படம் முழுக்க முழுக்க ஈழத்தைப் பற்றிய திரைப்படம். இந்திய இயக்குநரால் உருவாக்கப்பட்டது. பல காட்சிகள் தமிழகப் பிரதேசத்திலே படம்பிடித்து உள்ளனர். இந்தியத் தணிக்கைக் குழு அந்தப் படத்துக்கும் அனுமதி வழங்கவில்லை.

மேலும் சில திரைப்படங்கள் மறுதணிக்கைக்கு உட்பட்டு, டெல்லி மும்பை போன்ற நகரங்களில் இருக்கும் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் போராடித் தோற்று இருக்கிறார்கள்.

அப்படியிருக்கையில், ஈழ மண்ணில் முழுவதுமாக எடுக்கப்பட்ட, அந்த மொழியைப் பேசி, அதே மண்ணைச் சேர்ந்த நடிகர்களால் நடிக்க வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இந்தியாவில் தமிழக தணிக்கைக்குழு பார்த்தவுடன் அனுமதி கொடுத்தது என்பது சினம்கொள் திரைப்படத்துக்கு தான். இது எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

திரைப்படத்தில் பதினொரு இடங்களில் இடம்பெறும் வசனங்களை மியூட் செய்யச் சொல்லியிருந்தார்கள். திரைப்படத்தில் எந்த ஒரு காட்சியையும் நிராகரிக்காமல் முழுத் திரைப்படமாக யூ என்ற சான்றிதழ் கொடுத்தனர்.

இந்தத் திரைப்படம் பேசக்கூடிய கருத்தானது ஈழ மக்களுக்கான அரசியல் சார்ந்தது. இதை நேரடியாக வசனங்களாக திரைப்படத்தில் வைக்காமல் சில குறியீடுகள் மூலம் சில காட்சிகளில் நாங்கள் சொல்லி இருக்கிறோம். நேரடியாகப் பிரச்சனைகளைக் காட்டியிருந்தால் தணிக்கைக் குழு நிச்சயம் காரணங்களைச் சொல்லி அனுமதியை மறுத்திருக்கவே வாய்ப்பிருக்கிறது.

ஆனால் திரையாடலைக் கையாண்ட விதம், குறிப்பாகக் குறியீடுகள் மூலம் கதை சொல்லப்படுவதால் தணிக்கைக் குழுவால் எந்த ஒரு நேரடிக் காரணத்தையும் சொல்ல முடியவில்லை. ஓர் ஈழத் திரைப்படத்துக்கு இந்தியாவில் தணிக்கைச் சான்று கிடைத்திருப்பதை ஒரு வெற்றியாகவே நாங்கள் கருதுகிறோம். மேலும் எங்களது திரைப்படங்களை அதிக அளவில் உருவாக்க முடியும்.

இலங்கையில் இந்தப் படம் திரையிடப்படும் வாய்ப்பிருக்கிறதா? வேறு எங்கு திரையிட இருக்கிறீர்கள்? 

இலங்கையில் சினம்கொள் திரைப்படத்தைத் தணிக்கைக்குழுவினூடாக அங்கீகரிக்கச் செய்வதற்கான முன்னேற்பாட்டு வேலை நடந்து கொண்டிருக்கிறது.

இலங்கைத் தணிக்கை குழுவை உடனடியாக அணுகுவதால் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்கவேண்டும்.

இந்த வகையில் எங்களுககு ஆதரவான சிங்கள இயக்குநர்களிடம் இந்தத் திரைப்படத்தைத்திற்கான அனுமதியின் தேவை பற்றிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறோம்.

சினம்கொள் திரைப்படத்தை ஒரு முக்கியமான சிங்கள இயக்குநருக்கு அண்மையில் காட்டினோம். நான் அங்கு இருக்கவில்லை எனது நண்பர் ஒருவர் குறித்த இயக்குநருடன் திரைப்படத்தை பார்த்தார். திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்த முதல் பதினைந்து நிமிடங்கள் வரும் காட்சிகளைப் பார்க்கும்போது மிகவும் பதட்டமாகவும், இலங்கை இறைமைக்கு எதிராக ஏதேனும் கருத்து அமைந்துவிடுமோ என்ற அச்சத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தாராம். ஆனால் அந்தப் பதினைந்து நிமிடங்களின் பின்னர் அவர் திரைப்படத்தில் முழுவதாக மூழ்கிவிட்டார். படத்தைப் பார்த்த பிறகு அவருடைய கருத்தாக எனது நண்பரிடம் குறித்த இயக்குநர் சொன்ன விடயம் என்னவென்றால், இந்தத் திரைப்படம் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கையில் வாழும் சிங்களவர்களுக்கும் காட்சிப்படுத்தப்படவேண்டும் என்பதாகும்.

ஒரு வாழ்வியலை இவ்வளவு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிற ஒரு திரைப்படமாக அவர் அதைப் பார்த்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் இயக்குநர் ஒரு தமிழத் தேசியவாதியாக இருந்தாலும் ஒரு இனவாதியாக தன்னை அடையாளப் படுத்தாமல் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் என்றும் தெரிவித்தாராம். சினம்கொள் திரைப்படத்தில் சிங்களவர்களுக்கு எதிராக எந்த ஒரு கருத்தும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

உண்மை என்னவென்றால் எங்கள் தலைவருடைய கருத்தைத் தான் நாங்களும் சொல்லியிருக்கிறோம், சிங்களவர்களுக்கு எதிராக என்றுமே நாங்கள் இருந்ததில்லை. எங்களுடைய நிலத்தையும் உரிமையையும் பறிப்பவர்களுக்குத் தான் நாங்கள் எதிரானவர்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்தைத் தான் நாங்களும் முன்வைக்கின்றோம். உலகில் வாழும் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுடைய கருத்தும் இதுவே. நாங்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல எங்கள் உரிமையைப் பறிப்பவர்களை நாங்கள் எதிர்க்கின்றோம், அவ்வளவுதான்.

ஆகவே, இலங்கையில் வெளியிட முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது எனக்குத் தெரியவில்லை.

சமீபத்தில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவில் டென்மார்க், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளில் சிறப்புக் காட்சிகளை நாங்கள் திரையிட்டிருந்தோம். திரைப்படத்தைப் பார்த்த ஈழத்தமிழர்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர்.

தமிழகத் திரைப்படங்கள் எப்படி ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் வெளியிடப்படுகின்றனவோ அதுபோலவே சினம்கொள் திரைப்படமும் வெளிவரவேண்டும் என்பது எங்களுடைய ஆசை. அந்த ஆசையை வெற்றியாக மாற்றுவது ஒவ்வொரு தமிழர்களிடமும் இருக்கின்றது.

பெரும்பாலான உலகத் திரைப்படங்கள் நேரடி ஒலிப்பதிவையே மேற்கொள்கின்றன. ஆனால், இந்தியப் படங்களில் ஒலி மீள்பதிவை (டப்பிங்) மேற்கொண்டே பெரும்பாலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்ற சூழல் நிலவுகிறது. சினம்கொள் திரைப்படத்தில் நேரடியான  ஒலப்பதிவை நீங்கள் மேற்கொண்டிருப்பதை தமிழகத்து இயக்குநர் பாரதிராஜாவே பார்த்து அதிசயித்திருக்கிறார். அது பற்றி சிறிது விளக்கமுடியுமா?

எந்தெந்த மாதிரியான தொழில்நுட்பங்களை சினம் கொள் திரைப்படத்தில் கையாள வேண்டும் என்று முதலில் பேசிக்கொண்டோம். முக்கியமாக லைவ் சவுண்ட். இந்த படத்தில் டப்பிங் இருக்கக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.

ஏனென்று சொன்னால் ஈழத்திரை என்பது தற்போதுதான் உருவாகிக் கொண்டிருக்கிறது. எங்கள் நிலத்துக்கான கலைஞர்களின் நடிப்பும் திறமையும் இப்போதுதான் சிறுகச்சிறுக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டப்பிங் என்று போனால் அது ஒரு நாடகத் தன்மையை உருவாக்கிவிடும் என்ற அச்சம் எனக்கு ஏற்கனவே இருக்கிறது.

அதற்கு முன்னுதாரணங்களாக ஈழத்தில் ஏற்கனவே வெளிவந்த திரைப் படங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். அது ஒரு காரணம்.

கனடாவில் திரைப் பயிற்சிபெற்றதனாலோ என்னவோ, இந்திய சாயலில் ஒரு நடிகன் ஒரு கதாபாத்திரமாக நடிக்கும்போது அந்தக் காட்சிகளை படம் பிடிக்கும்போது பேசுகின்ற அந்த இயல்புத் தன்மை இல்லாது போயிருப்பதை உணர்ந்திருக்கிறேன். இயல்புத்தன்மையுடன் உரையாடலைப் பதிவு செய்வதுதான் யதார்த்தமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்பது என் எண்ணம்.

எடிட்டிங் செய்துவிட்டு மீண்டும் காட்சிகளில் வரும் ஒவ்வொரு பாவங்களுக்கும் ஏற்ப உணர்ச்சிகளைக் கூட்டிப் பேசுவது என்பது நடிப்பின் இயல்புத் தன்மையை அழித்துவிடுகிறது.

பொதுவாக இந்தியத் திரைப்படங்களைப் பார்க்கும்போது வரும் கதாப்பாத்திரத்தின் உணர்வுகளுக்கும் உரையாடல்களும் வித்தியாசங்கள் காணப்படுகிறன. இத்தகைய திரைப்படங்கள் இயல்புத் தன்மையை விழுங்கி விடுகின்றன. இந்த விடயங்கள் எங்களது திரைப்படத்தில் இருக்கக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.

முக்கியமாக எங்கள் மண்ணின் சூழலில் இருக்கக்கூடிய சத்தம் ஒன்றியிருக்கவேண்டும். லைவ் சவுண்ட் காட்சிகள் பதிவு செய்யப்படும்போது அந்தச் சத்தங்களை இந்தியாவில் மீண்டும் ஒழுங்கு செய்ய முடியாது. நிலப்பரப்புகள் மாறும்போது சூழற் சத்தங்களும் மாறக்கூடும். பிறகு இதுவே எங்களுக்கு பிரச்சனையாக மாறிவிடக்கூடும் என்றும், அந்நியத் தன்மையை உருவாக்கி விடக்கூடும் என்பதை உணர்ந்தே முன்தயாரிப்பின் போதே முடிவு செய்தோம்.

சினம்கொள் திரைப்படத்தில் நடித்த அனைவருமே தமிழீழத்தைச் சேர்ந்தவர்கள். போஸ்ட் புரோடக்சன் இந்தியாவில் செய்யும்போது நடிகர்களை டப்பிங் செய்ய இந்தியாவுக்குக் கொண்டுவந்து வேலைசெய்ய எங்களிடம் அதிக பொருளாதாரமும் இல்லை. இதற்கும் அப்பால், லைவ் சவுண்ட் இத்திரைப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதால் அதைச் செய்தோம் தமிழகத்தில் திரைப்படத்தைப் பார்த்த பாரதிராஜா, நாசர் போன்றவர்களும் இதைக் குறிப்பாகப் பாராட்டினார்கள்.

தமிழக இயக்குனர் பாராதிராஜா அவர்களுடன் ரஞ்சித்

தமிழக இயக்குனர் பாராதிராஜா அவர்களுடன் ரஞ்சித்
நன்றி – கூர்மை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More