ஒரு துயரம் இன்னொரு துயரத்தை நினைவுபடுத்தும். ஒரு போர் இன்னொரு போரை நினைவுபடுத்தும். மனிதத்திற்காக இரங்கும் மனச்சாட்சி உள்ளவர் களின் பார்வையில் ஒன்று துயராகவும் மற்றையது மகிழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஈழத்தில் துயரங்களின் அரசியலில் இதெல்லாம் சாத்தியம் ஆகிவிட்டது. தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த சுர்ஜித் என்ற இரண்டு வயதுக் குழந்தையின் மரணம், உலகத் தமிழர்களை மாத்திரமல்ல, மனச்சாட்சி உள்ள எல்லா மனிதர்களையும் பெரும் அந்தரிப்புக்கும் துயரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. எத்தனையோ மரணங்கள் எல்லா இடமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஆனால் சில மரணங்கள் மனித மனங்களை வெகுவாக தாக்கிச் செல்கின்றன. அப்படி ஒரு மரணம்தான் சுர்ஜித்தின் மரணமும். ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சிறுவன், எழுபது மணித்தியாலமாக அதற்குள் சிக்கியிருந்தான். பலருக்கு தூக்கம் இல்லை. மனம் அழுத்தத்தில் துடித்தது. சுர்ஜித்தை நினைத்தபடி தம் குழந்தைகளை அணைத்தவர்கள் பலர். அந்தக் குழந்தையின் குறும்புத்தனங்களையும் அப்பாவித் தனமான முகத்தையும் பார்த்து பலரும் கலங்கிக் கொண்டிருந்தார்கள்.
பொதுவாக தமிழகத்தில் நடக்கும் துயரங்கள் ஈழத்தைப் பாதிக்கக்கூடியது. ஈழத்தில் நடக்கும் துயரங்கள் தமிழகத்தைப் பாதிக்கக்கூடியவை. அந்த வகையில் ஈழத்தில் நடந்த ஒரு குழந்தையின் மரணம் தமிழகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அது பாலச்சந்திரனின் மரணம். பாலச்சந்திரன் இறுதிப் போரில் கொல்லப்பட்டு சில வருடங்களின் பின்னர் அது தொடர்பிலான சில புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
அதில் ஒரு புகைப்படத்தில் பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். வேறு ஒரு புகைப்படத்தில் நெஞ்சில் துப்பாக்கிகளால் சுட்டு துளையிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இருக்கிறான். பாலச்சந்திரனின் புகைப்படங்கள் உலகின் மனசாட்சியை உலுப்பின. ஐ.நா அவையில் கூட முக்கிய பேசு பொருளானது. ஐ.நா அறிக்கையில் அப் படுகொலை மிகப் பெரிய குற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அப் புகைப்படங்கள் வெளியாகிய காலத்தில் தமிழகத்தில் இருந்தேன். அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், பாலச்சந்திரன் படுகொலைக்கு கண்டனம் வெளியிட்டார். தமிழகத்தில் பாலச்சந்திரன் புகைப்படங்கள் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தன.
ஒரு குழந்தையை பலியிட்டதன் பின்னரான புரட்சி என்றொரு கவிதையை அந்நாட்களில் எழுதினேன். பாலச்சந்திரனின் ஏக்கம் பிறளும் விழிகளுடன் அமைந்த புகைப்படத்தை தமது முகங்களில் பொருத்திக் கொண்டு தமிழகக் குழந்தைகள் நடாத்திய போராட்டத்தின் புகைப்படங்களும் பெரும் தாக்கத்தை தருவதாக இருந்தன. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை பதுங்குழியில் கொல்லப்பட, அக் குழந்தைக்காக குழந்தைகள் போராடும் ஒரு களமாக அப் போராட்டம் தென்பட்டது.
உண்மையில் குழந்தைகளின் மரணங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்து கின்றன. சுர்ஜித் உயிரோடு மீண்டுவிடுவான் என்ற ஏக்கத்துடன் எல்லோரையும் போலவே காத்திருந்தேன். நம்மில் பலரும் காத்திருந்தனர். அவனின் மரணம் பெருந்துயரை ஏற்படுத்தியது. முகப் புத்தகம் எங்கும் அஞ்சலி நிறைந்தது. அவனுக்கு பலரும் பேரஞ்சலி செலுத்தினர். மிகவும் உருக்கமான அந்த குறிப்புக்களிடையே சிங்கள நணபர் ஒருவர் சுர்ஜித்திற்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். தனது வீட்டில் சுர்ஜித்தின் புகைப்படம் ஒன்றை வைத்து குழந்தைகளை விளக்கேற்றி வணங்கச் செய்தார்.
அவர் பாலச்சந்திரனுக்கு விளக்கேற்றி அஞ்சலி செய்யவில்லை என்றபோதும், அவனுக்கு அஞ்சலி செலுத்துகின்ற மனம் கொண்டவர்தான். பாலச்சந்திரன் என்ற குழந்தையின் மரணம், பல சிங்கள சகோதரர்களுக்கு பெருந்துயரத்தை ஏற்படுத்தியது. மஞ்சுள வெடிவர்த்தன, பாலச்சந்திரன் குறித்து கவிதை எழுதினார். பாலச்சந்திரன் ஈழக் குழந்தைகளின் குறியீடு. ஈழக் குழந்தைகளின் மனசாட்சி. அவனை தலைவர் பிரபாகரனின் குழந்தையாக நினைத்து சிங்களப் படைகள் அழித்தன. ஆனால் அவன் ஈழக் குழந்தையாகவே வளர்ந்தான். தலைவர் பிரபாகரன் வளர்த்த செஞ்சோலை போன்ற இல்லக் குழந்தைகள் அவரின் குழந்தைகளாக வளர்ந்தன.
தென்னிலங்கையில் நாம் காணுகின்ற குழந்தைகள் எமக்கு மிகவும் பிரியத்தை ஏற்படுத்துகிறார்கள். குழந்தைகளுடன் யாரும் பகைமை கொள்ளுவதில்லை. ஆனால் ஈழத்தில் குழந்தைகள் இன அழிப்பில் இலக்கு வைக்கப்பட்டார்கள். பாலச்சந்திரன் எவ்வாறு அழிக்கப்பட்டானோ, அவ்வாறே பல ஈழக் குழந்தைகள் போரில் கொன்றழிக்கப்பட்டுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தப் புகைப்படங்களில்கூட பலவற்றில் கொன்று வீசப்பட்ட குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம்.
உடற் பாகங்களை இழந்து இறந்து கிடந்தனர் குழந்தைகள். மண்மேடுகளிலும் பதுங்குகுழிகளிலும் கொல்லப்பட்டு புதைந்து கிடந்தனர். இறந்துபோன தாயின் மார்பில், தாய் இறந்ததை அறியாது பால் குடித்த குழந்தைகளும், தாய் தந்தையை இழந்து பெரும் காயப்பட்ட குழந்தைகளை சிறுவர்கள் ஏந்திக் கொண்டு ஓடிய நிகழ்வுகளும்கூட நடந்தன.
முள்ளிவாய்க்கால் போரே குழந்தைகளுக்கு எதிரானது. என் வகுப்பறையில் பெரும்பாலான பிள்ளைகளுக்கு இழுப்பு நோய் இருக்கின்றது. தடைசெய்யப் பட்ட குண்டுகளின் பாவனையால் சுவாசப் பாகங்கள் அவர்களுக்கு பாதிக்கப்பட்டிருக்கலாம். நீரிழிவு, இரத்த அழுத்தம் என்று பல்வேறு நோய்கள் அவர்களுக்கு உள்ளன. அப்படிப் பார்க்கின்றபோது, இந்தப் போரே எம் குழந்தைகளுக்கு எதிராகவே நடந்தது. அதன் பாதிப்புக்களை அவர்கள் சுமக்கத் தொடங்கியுள்ளார்கள்.
முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போர் இன்னமும் அவர்கள்மீது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. ஆழ்துளைக் கிணற்றில் கைகளைமேலே நிமிர்த்தியபடியிருக்கும் சுர்ஜித்தின் காட்சி, பதுங்கு குழியன்றில் இறந்து கிடக்கும் குழந்தையை ஈழத்தவர்களுக்கு நினைவுபடுத்துகின்றது. குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியமானது. அவர்களை சுற்றியிருக்கும் எல்லா அபாயக் குழிகளும் மூடப்பட வேண்டும்.
குழந்தையின் உயிர் பறிக்கும் ஆழ்துளைக் கிணறுகளும் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் பதுங்குழிகளும் இல்லாத தேசம் அவர்களுக்கு வேண்டும். வெடி குண்டு மழைகளை கடந்தவர்களும் மரணப் பதுங்கு குழிகளை கடந்து வந்தவர்களுமான என் மாணவர்கள், சுர்ஜித் பற்றியே பேசி மனம் கலங்கியபடி இருந்தார்கள். அந்த வார்த்தைகள் எண்ணற்ற சேதியை சொல்லின. இன அழிப்புப் போர் என்ற ஆழ்துளைக் கிணறுகளில் வீழ்ந்த எங்கள் குழந்தைகளின் மனங்களின் அஞ்சலி, சுர்ஜித்தை உயிர்ப்பிக்கும்.
-தீபச்செல்வன், கட்டுரையாளர் ஒரு கவிஞர் மற்றும் பத்திரிகையாளர்.