மணி சாரை எப்போது முதலில் பார்த்தேன்….கோவையில் கோமல் ஸ்வாமிநாதனின் சுபமங்களா நாடகவிழா பல்லாண்டுகளுக்கு முன் நடந்தபோது யதார்த்தா பென்னேஸ்வரன் குழுவினரின் நாடகமும் நிகழ்ந்தது . அதில் நடிகராக அவரை பார்த்தேன். நாஞ்சில் நாடன் தான் சொன்னார், இவர் மணி, டெல்லியில் இருக்கிறார் , க நா சு வின் மருமகன் என்று. மயிலாப்பூர் கற்பகாம்பாள் லாட்ஜ் ரெஸ்ட்டாரெண்டில் டிபன் சாப்பிடும்போது கநாசுவை கூட கொஞ்சம் தள்ளி நின்றுதான் பார்த்திருக்கிறேன். ஞான ராஜசேகரனின் ‘பாரதி ‘ பார்த்தபோது மணி அவர்களை கிட்டத்தட்ட மறந்திருந்தேன். படத்தில் பாரதியின் தந்தை சின்னசாமி ஐயராக வருபவரின் வசன உச்சரிப்பும் மாடுலேஷனும் தனியாக தெரிகிறதே , யார் இவர் என்று படப்பிடிப்பிற்கு அடிக்கடி சென்று வந்துகொண்டு , சாயாஜி ஷிண்டேவுக்கு தமிழ் உச்சரிப்பு சொல்லித் தந்து கொண்டிருந்த நாஞ்சிலிடம் சந்தேகம் கேட்டேன். அவர் மீண்டும் இவர்தான் மணி , கநாசுவின் மருமகன் என்கிறார். இவர் வசன உச்சரிப்பில் ஒரு தரம் தெரிகிறதே என்று கேட்டவுடன், இவர் இங்கிலாந்தில் London School of Drama வில் இதற்காக தனியே Voice culture பயிற்சி எடுத்தவர் என்கிறார். நான் அசந்து போய்விட்டேன். இன்றுவரை இந்த தகவல் உண்மையா என்று மணி சாரிடம் கேட்கவில்லை.ஒரு நாள் கேட்கவேண்டும்.
பின்னர் பல சந்தர்ப்பங்களில் மணி சாருடன் சந்திப்பு நிகழ்ந்தது. அவரது பூர்விகம் பார்வதிபுரம் எனது பூர்விகம் பூதப்பாண்டியும் ஒரே மாவட்டம் . பிறகு என்ன, ரொம்ப நெருக்கம் ஆகிவிட்டோம். மணி சார், பாரதிமணி ஆன பிறகு பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். பெரும்பாலும் வெள்ளை ஆடையில் மந்திரி, முதல் மந்திரி, டாக்டர் என பாத்திரங்கள். அவருடைய திறமைக்கு சரியான தீனியை இன்னும் யாரும் போடவில்லை என்பது வருத்தத்துக்குரியது. அவருடைய தனித்தன்மையான குரலுக்கும் புதுப்பேட்டை படத்தில் ஒரு ஆபத்து நேர்ந்தது . திரையில் ஒலித்தது வேறு ஒரு பின்னணிக்குரல் கலைஞருடையது. சமீப காலங்களில் பல ரோல்களை அவர் மறுத்துவிட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருடைய ஆகிருதிக்கு எந்த மரியாதைக்குறைவும் திரைத்துறையில் ஏற்பட்டதில்லை என்று சொல்லியிருக்கிறார்.
அவருடைய வாழ்க்கை அனுபவங்களை கட்டுரைகளில் படித்திருந்தாலும் அவர் வாயால் சொல்லக் கேட்பது ஒரு அலாதி இன்பம். தகவல் சுரங்கமாக அவர் கொட்டுவதெல்லாம் வெகு அரிய தகவல்கள். பல அச்சில் வர முடியாதவை. பல பிரபலங்கள் அவர் உரையாடலில் சாதாரண பாத்திரங்களாக வந்து போவார்கள். சிறிதும் மிகை இல்லை என்பதை அவர் பேசும்போதே உணரலாம். எள்ளலும், நகைச்சுவையும் இயல்பாக வந்து போகும். இசையில் ஆர்வம் அதிகம். நாகர்கோவிலில் நாஞ்சில் நாடன் மகள் சங்கீதா திருமணத்தின்போது சின்னமனூர் விஜய்கார்த்திகேயன் மற்றும் இடும்பாவனம் இளையராஜாவின் நாதஸ்வர கச்சேரி நடந்தது. அவர்கள் அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அவர் ரசித்த ரசிப்பை மண்டபமே பார்த்து வியந்தது.
மணி சார் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பானது. எப்படியும் ஒரு கூட்டம் அவரை சுற்றி கூடிவிடும். வெடிச்சிரிப்புகள் பீறிடும் சூழல். சர்ச்சிலுக்கு சுருட்டு போல மணி சாருக்கு பைப் ஒரு நிரந்தர அடையாளம். அவரை வரைந்தால் பைப் இல்லாமல் வரைவது கடினம். பிரத்யேக புகையிலை மற்றும் லைட்டர் சகிதம், எந்த நிகழ்ச்சியில் இருந்தாலும் இதற்கும் ஒரு நேரத்தை தேடிக்கொள்வதுண்டு. விருந்தோம்பலில் அவரை யாரும் அடித்துக்கொள்ள முடியாது. அவருடைய மதுக்கொண்டாட்ட வைபவங்களை அனைவரும் படித்திருக்கலாம். அதெல்லாம் ஓய்ந்த ஒரு காலத்தில் அவரது விருகம்பாக்கம் வீட்டில் சந்தித்தேன். வீடு நிறைய புத்தகங்களும் இசையும்…கூடவே பிரபல இனிப்புக்கடைகளில் இருந்து விதவிதமான முறுக்குகளும் காரங்களும். காப்பிக்கொட்டையை அரைக்க ஒரு யந்திரம், அதில் பொடி எடுத்து அப்போதே ஒரு டிகாக்ஷன் தயாரித்து கம கம என்று ஒரு காப்பியை அவர் கையாலேயே போட்டு கொடுத்து அதையும் நான் குடித்தேன். சர்க்கரை குறைவு அன்பு அதிகம்.!! இனி இதை வெச்சுட்டு நான் என்ன செய்யப்போறேன் என்று சொல்லிவிட்டுஒரு பெரிய தொகுதி ஓவிய வரலாற்று புத்தகங்களையும் எடுத்து தந்துவிட்டார் பாட்டையா.
ரசனை இதழில் நான் ரசித்த திரைப்படங்களை பற்றியும் திரைப்பட ஆளுமைகளை பற்றியும் ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தேன். அது பின்னர் நூல்வடிவில் திரைச்சீலை என்ற பெயரில் வந்தது. தொடராக வரும்போதே பாரதிமணி அதை படித்திருந்தார். ஒரு நாள் எனக்கு அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ‘நீ ஏன் உன் நூலை தேசிய திரைப்பட விருது கமிட்டிக்கு அனுப்பக்கூடாது? அது விருதுக்கு தகுதியானது என்று நினைக்குறேன் ‘ என்கிறார். அதுவரை எனக்கு அப்படி எந்த எண்ணமும் இருக்கவில்லை. இது எனது முதல் நூல் வேறு. அவரே, முகவரிகளையும் இணைய தளங்களின் இணைப்புக்களையும் அனுப்பி டிராப்ட், பார்சல் போன்ற அரசு வழிமுறைகளையும் சொல்லித்தந்தார். அதன்படி அனுப்பி வைத்தேன். பின்னர் ஒரு நாள் இன்ப அதிர்ச்சியாக எனது நூலுக்கு விருது கிடைத்த தகவல் கிடைத்தது. வாழ்க்கையில் முதன் முதலாக இந்தியத்தலைநகரை கண்டேன். ஜனாதிபதி கையால் விருது வாங்கினேன். மணி சார் இந்த தகவலை சொல்லியிருக்காவிட்டால் இந்த வாய்ப்பே எனக்கு கிடைத்திருக்காது என்பதுதான் உண்மை.
அவரை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வரைந்திருக்கிறேன். வரைவதற்கேற்ற முகம் மற்றும் முகபாவம். கூடவே பைப் வேறு. இதை விட ஒரு ஓவியனுக்கு என்ன வேண்டும்… மணி சார் நீங்க உங்க வாக்கிங் ஸ்டிக்கும் பைப்பும் ஏந்தி இன்னும் பல்லாண்டு வாழ்ந்து நம் நட்பை உய்விக்கவேண்டும்!!!.
ஓவியர் ஜீவா. ஜீவானந்தம் என்ற இயற்பெயரைக் கொண்ட ஜீவா, தமிழகத்தின் மூத்த ஓவியர்.