புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை இலங்கை இனப்பகைமையின் அத்தியாயங்கள்! அகரமுதல்வன்

இலங்கை இனப்பகைமையின் அத்தியாயங்கள்! அகரமுதல்வன்

9 minutes read
இலங்கை இனப்பகைமை
இலங்கை இனப்பகைமை

– ஈழ எழுத்தாளர் அகரமுதல்வன்

இலங்கைத்தீவின் வாழ்வும் வரலாறும் மிகக் கொடிய இனப்பகைமையில் நூற்றாண்டுக் காலமாய் எரிந்துகொண்டிருக்கிறது. இந்தத் தீயின் கோரத்தில் சாம்பலாக்கப்பட்ட உயிர்கள் லட்சக்கணக் கானவை. ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்று அழைக்கப்பட்ட இலங்கைத்தீவு, இந்த இனப்பகைமையின் காரணமாக ஒரு ரத்த சமுத்திரத்தையே தனக்குள் உருவாக்கிக் கொண்டது. சிங்களப் பெரும்பான்மைவாதமும் தேரவாத பெளத்தவாதச் சிந்தனையும் இந்தத் தீவில் அந்த ரத்த சமுத்திரத்தை உருவாக்கின. எந்தவொரு நிமிடத்தின் ஏதோவொரு விநாடியிலும் தமிழர் ஒருவரின் ரத்தத்தை வாளேந்திய சிங்கம் பருகியபடியிருக்கும் பேரினவாதக் குரூரமே இலங்கை அரசியல் வரலாறு.

பிரித்தானியம் பற்றவைத்த நெருப்பு!

இலங்கை எப்போதும் இந்தியாவுடன் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்த பிரித்தானியர்கள், இந்தியாவுக்கான காலனிய அரசியல் கட்டமைப்புகளிலிருந்து அனைத்திலும் வேறுபட்டதையே இலங்கையில் நடைமுறைப்படுத்தினர். இவ்வாறான தொரு பின்னணியில் தமிழ்த்தலைவரான சேர்.பொன் அருணாசலம் ‘இலங்கை இந்தியாவின் ஒரு மாகாணமாக எதிர்காலத்தில் அமைவது நல்லது’ என்று கூறினார். உடனே பிரித்தானிய அரசாங்கம் விழிப்படைந்து அப்படி நேர்ந்துவிடக் கூடாது என்று தமது நகர்வுகளை கைக்கொண்டது. பிரித் தானியத் தந்திரமே வெற்றிகொண்டது.

இலங்கை இனப்பகைமையின் அத்தியாயங்கள்!

இந்தியச் சார்பு நிலைகொண்ட ஈழத் தமிழர்களின் போக்கு, ஆங்கிலேயர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. தமது புவிசார் அரசியல் நலன்களுக்கு ஏற்பட்ட ஆபத்தாக அதைக்கருதி, சிங்களப் பெரும்பான்மை இனத்தை தனது நேசசக்தியாக வளர்த்தெடுத்தது பிரித்தானியம். இயல்பிலேயே இந்திய – தமிழர் வெறுப்புவாதத்தில் வேரோடி நின்றிருந்த சிங்களப் பெரும்பான்மை வாதம் அதைப் பயன்படுத்திக் கொண்டது. இதனால் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட டொனமூர் அரசியல் சீர்திருத்தம் (பிரிட்டிஷ் இலங்கையில் டொனமூர் ஆணைக்குழு மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டம்) நேரடியாக இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரானதாகவே அமைந்திருந்தது. இதைப் புரிந்துகொள்ளவல்ல தலைமைகளை அப்போது மட்டுமல்ல… இப்போதும் ஈழத்தமிழ் அரசியல் பெறவில்லை. பிரித்தானியா கொண்டுவந்த அரசியல் சீர்திருத்தத்தை தமிழ்த்தலைவர்கள் பகிஸ்கரிக்கக் கூடாது என்று சிங்களத் தலைவர்கள் வற்புறுத்தியதற்கு, அது பெரும்பான்மை இனத்துக்குச் சார்பாகவும் இந்தியர் களுக்கும் தமிழர்களுக்கும் எதிரானதாகவும் இருந்ததே காரணம். பெரும்பான்மையின் எதேச்சதிகாரம் அங்கு தோன்றியது.

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேன நாயக்க பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் கொண்டிருந்த நெருக்கமும் சார்பும் இலங்கையின் பெரும்பான்மைவாத அரசியல் வளர்ச்சிக்குப் பெரிதும் வித்திட்டது. டி.எஸ்.சேனநாயக்கவின் அரசுக்கும் பிரித்தானியாவிற்கும் இடையே நிகழ்ந்த இரண்டு ஒப்பந்தங்களும் மிக முக்கியமானவை. திருகோணமலைப் பகுதியில் கடற்படைத்தளமும் கட்டு நாயக்காவில் விமானப்படைத்தளமும் அமைப்பதன் வாயிலாக இலங்கையின்பாதுகாப்புக் கான உத்தரவாதத்தைப் பிரித்தானியா வழங்கியது. இலங்கைத்தீவில் இன்றும் அணையாத இனப்பகைமைத் தீயைப் பற்றவைத்தது பிரித்தானியாவே. அதை நெய்யூற்றி வளர்த்தனர் சிங்கள ஆட்சியாளர்கள்.

 துரோகம் தொடங்கிய காலகட்டம்!

சுதந்திரமடைந்த இலங்கையை ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்து, எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்கத் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி வெற்றி கண்டது. இந்தக் காலத்தில் இலங்கையின் இனவாதப் போக்கு இன்னும் அதிகமாக வளர்ந்துநின்றது. எஸ்.ஜே.வி.செல்வ நாயகத்தின் தலைமையிலான தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் முக்கியத் தலைமைக் கட்சியாகத் தன்னைப் பெருமளவில் திடப்படுத்திக்கொண்டது. 1970-க்குப் பிறகு இலங்கையின் இனரீதியான ஒடுக்குமுறையும் வன்முறைகளும் மெல்ல மெல்ல வளர்ந்து, தனது கொடுமையான கிளைகளை விரிக்கத் தொடங்கிய காலகட்டமானது.

இலங்கை இனப்பகைமை

இலங்கை இனப்பகைமை

சிறிமாவோ பண்டார நாயக்கத் தலைமையிலான ஐக்கிய முன்னணிப் பதவியிலிருந்த நாள்கள் அவை. வாளேந்திய சிங்கம் ரத்தம் பருக தனது பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு இலங்கைத் தீவின் தமிழ்திசை நோக்கி ஓடிவந்தது. தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் முதலாவது குடியரசு சாசனத்தில் நிராகரிக்கப்பட்டன. அதுவே மாபெரும் ஊழிப்பிரளயத்தின் ஆதியாய் கனலத் தொடங்கியது. தமிழருக்குக் கல்வியில் பாகுபாடு, வேலையின்மை என மெதுவாக அந்தத்தீவு நிறம் மாறியது. தமிழர் என்றால் ஒதுக்கு என்ற பாரபட்சம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்க் கட்சிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், சமஸ்டிக் கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இணைந்து தமிழர் கூட்டணி தோன்றியது. இது புதிய உத்வேகத்தையும் தமிழருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான அரசியலை முன்னெடுக்கவல்ல துணிச்சலையும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியது. விடுமா இனவாதம்? அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டார்கள். இரண்டு தமிழர்கள் பேசினாலே காவலர்களால் தாக்கப்படுமளவிற்கு அரசின் வன்முறைக்கருவி தீவிரம் பெற்றிருந்தது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதியில் போலீசாரால் திட்டமிடப் பட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறையால் அப்பாவிப் பொது மக்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டதே இதன் உச்சம். இலங்கை இனப்பகைமைச் சிக்கலில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனை நிகழ்வாக இது அமைந்தது. அதுவரை காந்திய வழியில் போராடிக் கொண்டிருந்த ஈழத்தமிழர்கள் தமது அரசியல்தீர்வையும் போராட்ட வழிமுறையையும் மாற்றிக்கொள்ளும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

இனப்பிரச்னைக்கான தீர்வு சமஸ்டி என்று சொல்லிக்கொண்டிருந்த தமிழ் அரசியலாளர்கள், அதன் பிறகே தீர்வு சமஸ்டி அல்ல… தனியரசு என்பதைச் சூளுரையாகப் பிரகடனப்படுத்தினர். சாத்விகப் போராட்ட முறையிலிருந்த தமிழ் அரசியல் ஆயுதத்தைத் தழுவிக் கொண்டது. தமிழீழ விடுதலைப் போராளிகள் ஆயுதம் ஏந்தி உரிமைக் காகப் போராடும் நிர்பந்தத்தைச் சிங்கள இனவாதம் ஏற்படுத்தியது.

இலங்கை இனப்பகைமை

இலங்கை இனப்பகைமை

1976-ம் ஆண்டில் தமிழீழக் கோரிக்கை எழுந்தவுடன் இலங்கையின் அரசியல் களம் தீவிர மாற்றம் கண்டது. சிறிமாவோ பண்டார நாயக்கக் காலத்திலும் அதற்கு முன்பும் நிகழ்ந்த பல்வேறு அடக்குமுறை களின் ஒட்டுமொத்தக் கொதிப்பின் காரணமாக, ஒடுக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்படுபவர்களின் வன்முறை அரசியல் எரிமலையாய் வெடித்தது. அப்போது இந்தியாவை ஆண்டுவந்த இந்திரா காந்திக்கும், சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இருந்த ராஜ்ய நேசமானது தமிழர்கள்மீது நிகழ்த்தப் படும் ஒடுக்குமுறையைத் தட்டிக் கேட்பதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை. சிறிமாவோவின் வெளியுறவுக் கொள்கை தமக்குப் பாதகமில்லை என்று நினைத்த இந்திரா, இலங்கை இனப்பிரச்னையில் தலை நீட்ட விரும்பவில்லை.

தொடங்கியது ஆயுத மோதல்!

1977-ம் ஆண்டில் இலங்கையின் அதிபரான ஐக்கியத் தேசியக்கட்சியின் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, தமிழர்களை தமது முழுவல்லமை கொண்டு அடக்க முயன்றார். தமிழீழ விடுதலைப் போராளி களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை களை முன்னிறுத்தினார். தமிழ்ப் போராளிகளுக்கும், ஜே.ஆர்.ஜெய வர்த்தனாவின் அரசப் படைகளுக்கும் ஆயுத மோதல்கள் உருவாகின.

மோதல்களும் சாவுகளும் ரத்தங்களும் தமிழர் நிலத்தில் நித்தியமாயின. தமிழீழ விடுதலைக்காக தமிழ்ப் போராளி இயக்கங்கள் பல உருவாகியிருந்தன. ஆயுதம் தாங்கிப் போராடும் இளைஞர்கள் ராணுவத்தின் மீதும் அரச சொத்துகளின்மீதும் தாக்குதல்களை நிகழ்த்தினர். 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவ ரோந்து வாகனத்தின்மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதல், சிங்கள ஆட்சியாளர்களையும் இனவாதிகளையும் கதிகலங்கச் செய்தது. இதையடுத்து தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்புக் கலவரமான ‘ஜூலை கலவரம்’ நிகழ்ந்தது. அதுவரை இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்த கலவரங்களைப் பார்க்கிலும் பலமடங்கு பெரியளவில் அவ்வின அழித்தொழிப்பு நடவடிக்கையை சிங்கள அரசு தமிழ் மக்கள்மீது ஏவியது. தெற்கிலும் வடக்கிலும் தமிழர்கள் கொல்லப்பட்டனர். உடைமைகள் அழித் தொழிக்கப்பட்டன.

கண்ணை மூடிக்கொண்ட உலக மானுடம்!

தமிழர்களை நிர்வாணப்படுத்தி மேனியில் தீயைப் பற்றவைத்த கொடுமை யும், தமிழர்களை எரியும் டயரில் உயிருடன் தூக்கி வீசிய அக்கிரமமும் உலகின் மானுடகுலத்தை எந்த வகையிலும் ஆத்திரமூட்டவில்லை. அந்தப் படுகொலைக்கு எதிராக உலகத்தின் எந்தவொரு நீதியமைப்பு களும் கவலை தெரிவிக்கவில்லை என்பதே துயர் தோய்ந்த வரலாறு. இத்தகைய பின்னணியில் 1980-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, இனப்பிரச்னையை இந்திய அனுகூலங்களுக்காக அணுக முனைந்தார். இந்திய வெகுஜன ஊடகத் திலும் அதைப் பிரசாரப்படுத்தினார். ஒருபுறம் போராளிகளுக்குப் பயிற்சியும் ஆயுத உதவியும் செய்தார். இன்னொரு புறம் இந்தியாவிற்கு எதிர்நிலையில் இருக்கும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சார்ந்து அந்த நாட்டு அரசுடன் சமரசப் பேச்சுகளில் ஈடுபட்டார். ஆயுத இயக்கம் ஒன்று தமிழீழ அரசைப் பெறுகிற பலத்தை அடைந்துவிடாமலும், அது இந்தியாவின் சொல் கேட்கும் பிள்ளையாகவும் இருக்க வேண்டும் என்று இந்திரா விரும்பினார். இந்தத் தந்திரோபாயம் ஒரு குறிப்பிட்ட காலம்வரைக்கும் இலங்கையைக் கையாள்வதற்கு உதவியது.

இந்திரா காந்தியின் காலகட்டத்தில் இந்தியாவின் நோக்கு நிலையிலிருந்து இந்தப் பிரச்னை அணுகப்பட்டிருந் தாலும், ஒருவிதமான உண்மைத்தன்மை அப்போது இருந்தது. சமஸ்டி அமைப்பு ரீதியாக தமிழர்களுக்குத் தீர்வு தரப்பட வேண்டுமென அவர் வலியுறுத்திய விடயங்கள் இதற்குச் சான்று. இலங்கையின் இனப் பிரச்னையில் இந்தியாவின் தலையீட்டை ஈழத்தமிழ் மக்கள் நேரடியாக எதிர்பார்க்கத் தொடங்கியது அப்போதிருந்துதான். இந்திரா காந்தியின் மறைவும் அதன் பிறகான இந்திய அரசியல் மாற்றமும் தலைகீழ் மாற்றத்தை இலங்கையின் இனப்பிரச்னையில் ஏற்படுத்தின. ராஜீவ் காந்தி அதிகாரத்திற்கு வந்த பிறகு அவரது கொள்கை வகுப்புகளில் நிகழ்ந்த பல்வேறு தவறுகளில் ஜி.பார்த்தசாரதி போன்றதொரு மிக முக்கியக் கொள்கை வகுப்பாளரை இலங்கைப் பிரச்னையில் இருந்து விலக்கியது முதன்மையானது.

இந்தியாவின் ஸ்திரத்தன்மையை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா போன்ற சிங்கள ராஜதந்திரியிடம் விட்டுக்கொடுத்து விடுதலைப் போராளிகளை மிரட்டி அவமதிக்கும் போக்கும் அதன் பிறகே அதிகரித்தது. இறுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தந்திரோபாயத்தின் சகதியில் ராஜீவ் அரசாங்கம் சிக்கித் திணறியது. இந்தியா முன்வைக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சர்வசாதாரணமாகத் தட்டிக்கழித்தார். திம்பு பேச்சு வார்த்தையின் தோல்வி எதிரொலியால் தமிழர்கள்மீது நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் ஏராளம். பிறகு இந்திய அமைதிப்படைக் காலம் தொட்டு அது ஈழத்தில் நிகழ்த்திய படுகொலைவரைக்கும் எத்தனையோ தடவை எழுதப்பட்டவை.

பகை மூட்டிய ஜெயவர்த்தனா!

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தனது காலத்தில் ராஜீவ் காந்தியையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மோத விடுவதன் வாயிலாக இந்தியாவுக்கும் தமிழர்களுக்குமுள்ள நேசத்தை இல்லா தொழிக்க எண்ணினார். அதையே செய்தும் முடித்தார். அமைதிப்படை ஈழத்தில் நுழைந்த நாள்களில் பூக்கள் சொரிந்து வரவேற்ற அதே பெண்களையும் குழந்தைகளையும் பிறகான நாள்களில் கொன்றனர்.

மரியாதைக்குரிய இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் இந்திய அமைதிப்படையின் படுகொலையைக் கண்டித்துப் பேசியவர்களுள் ஒருவர். பிறகு அதன் பின்னணியில் நடந்தவை எல்லாம் துன்பியல் சம்பவங்களே. சமாதானத்துக் கான தேவதையாக மேற்குலகத்திடம் தன்னைக் காண்பித்த சந்திரிகா குமாரதுங்க, தேர்தலில் வெற்றிபெற்று தமிழர்களை ஒடுக்கினார். தமிழர் களின் பள்ளிக்கூடங்கள், வணக்கஸ்தலங்களில் குண்டுகள் போட்டுக் கொன்றார்.

‘பேச்சு வார்த்தையைப் புலிகள் விரும்பவில்லை’ என்று சொல்லிக்கொண்டே மீண்டும் மீண்டும் படை நடவடிக்கையை முழுத்தீவிரத்துடன் நடத்தினார் அவர். ஆனால், அவரால் வெற்றிபெற இயலவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் போர்த்திறனும் ராணுவ நடவடிக்கைகளும் அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன. நார்வேயின் மத்தியஸ்தத்தில் கொண்டுவரப்பட்ட அமைதி ஒப்பந்தமும் அதன் பிறகு நடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் வருகையும் இலங்கை இனப்பிரச்னையின் புதிய காலகட்ட வரலாறு.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக தங்களை அறிவித்துக் கொண்டதற்கு அவர்களுக்கு மக்களின் ஆதரவு இருந்தமையும் ஒரு காரணம். தமிழர்கள் விரும்பும் தீர்வுத் திட்டம் குறித்து உரையாடுவதற்கும் எப்போதும் அவர்கள் தயாராகவே இருந்தனர். சர்வதேச சமூகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்த தருணங்களில் எல்லாம் அவர்கள் பேச்சு மேடைக்கு விரைந்தனர். சிங்கள ராஜதந்திரிகள் தமிழர்களுக்குப் பேச்சுவார்த்தை மேடையில் தீர்வைத் தந்துவிடுவார்கள் எனத் தமிழர்கள் யாரும் நம்பியது கிடையாது. ஆனால் இந்தியா நம்பியது; ஜப்பான் நம்பியது; நார்வே நம்பியது. ஆனால், புலிகளும் நம்பவில்லை; அரசும் நம்பவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் தின உரைகளில், இலங்கை அரசாங்கம் போரைத்தான் விரும்புகிறது. அதை மறைப்பதற்கு அமைதிப் பேச்சு வார்த்தைகளைக் குழப்பியிருப்ப தாகக் கூறியதனை இங்கு எடுத்துக் காட்டாகக் கூறவேண்டும்.

தொடங்கியது ராஜபக்சேக்கள் காலம்

மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ஒரு வருடத்திற்குள்ளேயே மூர்க்கமான போரின் பொறிகள் தெரியத் தொடங்கின. அமைதியை ஓதிக்கொண்டு போர்விமானங்கள் எம் தலைகளில் குண்டுகள் சொரியும் நாள்கள் இருக்கின்றன என்பதை வன்னி நிச்சயம் செய்தது. ‘பேரழிவும் படுகொலையும் நடக்கையில் உலகம் வேடிக்கை பார்க்காது’ என நம்பிய லட்சோப லட்ச மக்களைக் குண்டுகள் கொன்றன. பயங்கரவாதிகளுக்கான யுத்தத்தில் கொல்லப்படும் பச்சிளம் குழந்தையும் பயங்கரவாதிதான் என அரசு விளக்கமளித்தது. நூறாண்டுக் காலமாக அந்தத் தீவில் உரிமைக்காகப் போராடிய ஒரு செழுமை வாய்ந்த இனம் உப்பு நீரில் தனது ரத்தக் காயங் களோடு வீழ்ந்துகொண்டேயிருந்தது.

இந்திரா காந்தியின் மறைவும் அதன் பிறகான இந்திய அரசியல் மாற்றமும் தலைகீழ் மாற்றத்தை இலங்கையின் இனப்பிரச்னையில் ஏற்படுத்தின.

ஆர்ப்பரிக்கும் இந்து சமுத்திரக் கடலின் கரையில் அலைகளின் நுரைகளில் குஞ்சு மீன்களைப்போலக் குழந்தைகளின் பிணங்கள் மிதந்தன. பல்லாயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னே தோன்றிய தமிழ்க்குடியின் வீரயுகம் நெஞ்சுபிளந்து மூச்சு எரிந்தது. சிங்கள அரசு சர்வதேச சமூகத்தை தனது உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு இந்த இனப்படுகொலையைத் திட்டமிட்டு நிகழ்த்தியது. தமிழர்கள் இடம்பெயர்ந்து போகவும் வழியற்ற கடலின் முன்னே கதியற்று நிற்கையில் படகோட்டியும் போராடி வீழ்ந்தான்.

சர்வதேசமும் உலகின் நீதியும் இலங்கையின் இனப்பிரச்னையின் வரலாற்றை அறிந்திருக்குமானால் அல்லது அவர்களுக்கு அரை மனசாட்சி இருக்குமானால்கூட ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழருக்கு நீதி என்பதை முன்னிறுத்த முடியாது என்பதே எனது துணிபு. ஆயின் இலங்கையின் இனப்பிரச்னைக்கான தீர்வானது சமஸ்டி அல்ல; தமிழீழ விடுதலை மட்டுமே.

அகரமுதல்வன்

அகரமுதல்வன்

சுந்தரலிங்கம் என்னும் அகரமுதல்வன் ஈழ இலக்கியவாதி, எழுத்தாளர். ‘அத்தருணத்தில் பகை வீழ்த்தி’, `டாங்கிகளில் சரியும் முல்லை நிலா’ ஆகிய கவிதை நூல்களை எழுதியவர். இனப்படுகொலைக்குப் பிறகான இலங்கையில் தனது கவிதைகளின் மூலமும் உரைகளின் மூலமும் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More