பஞ்சத்தின் காரணமாக ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு உதவுமாறு சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்காவின் பெரிய தேசம் என்ற பெருமையைக் கொண்ட சூடான், உள்நாட்டுப் போர்களால் பெரும் பொருளாதார சேதத்தைச் சந்தித்துள்ளது. மேலும், தீவிரவாத இயக்கங்கள் காரணமாக பொருளாதாரத் தடைகளுக்கு சூடான் உள்ளாகியது.
இதன் காரணமாக உணவுப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக அங்கு வறுமை கோரத் தாண்டவமாடுகிறது. இதனால் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் சூடானில் உள்ள அல் குரேஷி வனவிலங்குப் பூங்காவில் பசியின் காரணமாக எலும்பும் தோலுமாக, பார்ப்பதற்கே பரிதாபமாக கூண்டில் காணப்படும் சிங்கங்களுக்கு உதவ நிதி வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூங்காவின் அதிகாரிகள் கூறும்போது, ”கடந்த சில நாட்களாக சிங்கங்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. சில சிங்கங்கள் உடல் எடையில் இரண்டு பங்கை இழந்து விட்டன. சிங்கங்களுக்குக் கொடுக்கப் போதிய உணவு இல்லை. நாங்கள் எங்கள் சொந்தப் பணத்திலிருந்துதான் சிங்கங்களுக்கு உணவளித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு உதவ ஒஸ்மான் சாலிஹ் என்பவர் சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். பிரச்சாரத்தின் பலனாக, பலரும் சிங்கங்களுக்கு உதவ முன் வந்துள்ளனனர். சிலர் சிங்கங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபிரிக்காவில் வாழ்ந்த சிங்கங்களின் எண்ணிக்கை 1993 – 2014 ஆகிய ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் 43% ஆக குறைந்துவிட்டது. தற்போது ஆபிரிக்காவில் 20,000 சிங்கங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.